பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. புயலுக்குப் பின்........! 1772-ஆம் ஆண்டில் அடித்த அரசியற்கடும்புயலின் தீய விளைவுகளினின்றும் தப்பித் தேறுவதற்குச் சிவகங்கைச் சீமைக்கு ஆண்டுகள் எட்டாயின. இவ்விடைப்பட்ட ஆண்டுகளில் மக்களின் உடல் மட்டுந்தான் சிவகங்கையில் இருந்தது; உள்ளமெல்லாம் திண்டுக்கல் மலை மேலேயே இருந்தது. அவ்வாறே அங்கிருந்த வேலு நாச்சியும் மருது சகோதரர்களும் தங்கள் உடலை மட்டும் மலை மேலேயே வைத்து மனத்தை எல்லாம் சிவகங்கைச் சீமையிலேயே பொருத்தி வைத்திருந்தனர். சிவகங்கைச் சீமையின் பெருங்குடி மக்கட்கும் நாட்டின் காவலர்கட்கும் இடையே ஏற்பட்ட இரகசியத் தொடர்பு நாளும் வளர்ந்து வரலாயிற்று. பொன்னையும் பொருளையும் மக்கள் தங்கள் அருமைத் தலைவர்கட்கு அனுப்பி ஆவன புரிந்தார்கள். எக்கணத்திலும் வாருங்கள் வந்து எங்களை ஆட்கொள்ளுங்கள்; அடிமை வாழ்வு வாழ்வதினும் வீர சொர்க்கம் புகவே எங்கள் ஆவி துடிக்கிறது என்று செய்தி அனுப்பிய வண்ணம் இருந்தது சிவகங்கைச் சீமை, சிவகங்கைச் சீமையில் ஆங்காங்கே கிளர்ச்சிகளும் புரட்சிகளும் தோன்றின; ஒழுங்கும் அமைதியும் காற்றிலே பறந்தன. குத்தகைக்காரனுக்கு வாழ்வு சாவாய் இருந்தது. நவாபுவுக்குத் தோப்பிராப்பணம் வந்து சேரவில்லை என்பது தெரிந்ததும் ஆத்திரம் அளவுக்கு மீறிப் பொங்கியது. அவன், என்ன சேதி? என்று உறுமினான். 'மக்களின் மனம் எரிமலையாயிருக்கிறது. அவர்கள் அடியுண்ட அரவம் சீறுவதுபோலச் சீறுகின்றார்கள். கிட்ட நெருங்க முடியாது' என்று பதில் கிடைத்தது. வேறு வழியில்லை. மக்கள் மனமெல்லாம் தங்கள் அரசியிடமும் வீரசகோதரர்களிடமுமே குடிகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான் நவாபு யார் ஆண்டால் என்ன? முத்து வடுகநாதர் தொலைந்தார். இனி என்ன, அரசியின் ஆட்சிதானே? நமக்குக் கப்பம் வந்தால் சரி, என்று நினைத்தான். தனக்கும் தன் நண்பர்களாகிய வெள்ளையர்கட்கும் கொடிய பகைவனாயுள்ள ஐதரிடமிருந்து சிவகங்கைத் தலைவர்களைப் பிரிப்பதே மேல் என்று கருதினான் போலும் துதுகள் பறந்தன, மருதிருவரும் வேலு நாச்சியும் தம் தாயகம் திரும்பினர். முத்து வடுகநாதரை இழந்த பின் நெடுநாள் அரசியாய் இருந்து வாழ வேலு நாச்சிக்கு அவ்வளவாக விருப்பமில்லை. மேலும், நாட்டின் நிருவாகம் முழுவதையும் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வரும் மருது சகோதரர்களே பாராளும் தகுதி முற்றிலும் படைத்தவர்கள் என்பதை அவள் முற்றிலும் தெளிந்தாள்.