பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 116 17. திருப்புல்லணையில்: இங்குள்ள திருமால் கோவிலில் ஜகன்னாதப் பெருமாள் உற்சவ காலங்களில் அணியும் பதக்கத்தில் மருது உபயம் என்று பொறிக்கப்பட்டுள்ளதாம். 18. மாறைநாடு: பழைமை சான்ற இவ்வூரில் இடிந்த நிலையில் விஷ்ணு ஆலயம் ஒன்று உள்ளது; இரு அருகர் சிலைகளும் உள்ளன. இவை ஏற்பட்ட காலம் மருது பாண்டியர் காலமென்று கூறுகின்றனர். அவ்வாறானால், மருதரசர் சமயத்துறையில் சைவத்தையும் வைணவத்தையும் சமணத்தையும் சேரப் போற்றும் சமரச உள்ளம் படைத்த சமயசீலர் என்பது தெளிவாய் விளங்கும்." மசூதியும் மாதா கோவிலும் மருதரசரின் சமரசப் பேருள்ளத்திற்குச் சான்று பகர்வனவாக ஒர் இஸ்லாமிய ஆலயமும் ஒரு கிறிஸ்தவக் கோவிலும் உள்ளன. நரிக் குடியிலுள்ள மசூதியும் சருகணியிலுள்ள மாதா கோவிலுமே அவை." மக்கட் பணி: மருதுபாண்டியரின் இறை அன்பால் பழங்கோவில்கள் பல புதுக்கோவில்கள் போல ஆயின என்பதும், புதுக்கோவில்கள் பல பழங்கோவில்களின் பெருமையோடு போட்டியிட்டுக் கொண்டு எழுந்தன என்பதும் பார்த்தோம். தெய்வங்கள் உறையும் ஆலயங்களின் பால் இவ்வளவு நாட்டம் செலுத்திய மருது பாண்டியர், ஏழை எளிய மக்கட்கு வாழ்வளிக்க வல்ல கோவில்களாகிய சத்திரங்கள் பலவற்றையும் கட்டினார். அவற்றுள் இன்றும் அவர் பெயர் விளக்கி நிற்கும் சத்திரங்கள் சிலவற்றின் சிறப்பை மட்டும் ஈண்டு நோக்குவோம்: 1. நரிக்குடியில்: மருது பாண்டியரால் நிறுவப்பட்ட சத்திரங்களுள் முதன்மை வாய்ந்தது நரிக்குடிச் சத்திரம் எனல் மிகையாகாது. காரணம், இச்சத்திரம் அவர் சொந்த ஊரில் அமைந்திருப்பதே. பல சமயங்களில் இங்கு அவர் தங்கினார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. இச்சத்திரத்திற்காக மருது பாண்டியரால் விடப்பட்ட மானியம் பன்னிரண்டு கிராமம் என்பர். இச்சத்திரத்தின் சார்பில் தினம் அன்னதானமும், ஆண்டு தோறும் உற்சவமும் நடைபெற்று வருகின்றன. நரிக்குடிச் சத்திரத்தைப்போலவே மருதரசர் காளையார் கோவில், குன்றக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், முத்தனேந்தல், மானாமதுரை, சூடியூர், அலையான்குளம், பாம்பன் முதலிய இடங்களிலும் சத்திரங்கள் கட்டியுள்ளனர் என்பர். சீனிக்காரனேந்தலில் அவர் கட்டிய சத்திரமும் மடமும் காட்டாற்று வெள்ளத்திற்கும் கால வெள்ளத்திற்கும் இரையாகி விட்டனவாம். ஊருணி-குளம்: மருது பாண்டியரால் மக்களின் நன்மைக்காகச் சிவகங்கைச் சீமையில் வெட்டப்பட்ட குளங்களும் ஊருணிகளும்