பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. விடுதலை வேள்வி கடும்புயலுக்குப்பின் சிவகங்கைச் சீமையில் பேரமைதி நிலவியது. அந்த அமைதியைக் கூடிய வரையிலும் குலையாமல் காப்பாற்றினர் மருதுபாண்டியர். அம்மட்டோ? 1780 முதல் 1801 வரை இருபத்தோர் ஆண்டுகள் அவர்கள் ஆண்ட அந்த ஆட்சிக் காலமே சிவகங்கைச்சீமையின் பொன் பூத்த காலமாய்த் திகழ்ந்தது. "அந்நாள்களில் சிவகங்கை நாட்டில் சைவம் தழைத்தது; வைணவம் வளர்ந்தது. இஸ்லாமும் கிறிஸ்தவமும் இன்னலின்றி வாழ்ந்தன. சமயப்பகை ஏதும் இன்றிச்சமரசத் தென்றல் வீசிய அந்நாளில் நாட்டில் கள்வர் பயமும் கொள்ளை நோய்களின் பயமும் இன்றி மக்கள் அன்பிலே மூழ்கி இன்பத்தில் திளைத்துச் செம்மாந்து இருந்தார்கள். தாயுமாய்த் தந்தையுமாய்த் தெய்வமுமாய் விளங்கும் மருது பாண்டியர் எங்கள் அரசராய் இருக்கும்போது என்ன குறை? என்ற இறுமாப்பு அவர்கள் இதயத்தில் நிறைந்து நின்றது. மருதிருவர் ஆட்சித் திறனால் சிவகங்கைச் சீமை நாளுக்கு நாள் இவ்வாறு பேரும் புகழும் சீரும் சிறப்பும் அடைந்து வருவதைக் காண அண்மையிலிருந்த புதுக்கோட்டைத் தொண்டைமானுக்கும் ஆர்க் காட்டிலிருந்த நவாபுவுக்கும் பொறுக்குமா? அச்சமும் பொறாமையும் அவர்களை வாட்டி வதைத்தன. அதன் விளைவாகப் பன்முறை சிவகங்கைச் சீமை மீது யாதாவது ஒரு காரணம் பற்றிப் போர் தொடுக்க விரும்பினர்; பூசல்களை விளைத்தனர்; கலகங்களை மூட்டினர்; பழிகளைப் பரப்பினர். கிடைக்கக் கூடிய ஆதாரங்களிலிருந்து புதுக்கோட்டைத் தொண்டைமான் இருமுறை நிலத் தகராறுகள் என்ற போர்வையில் சிவகங்கைச் சீமையை மோதினான் என்பது தெரிகிறது. 1788 லும் 1792 லும் ஏற்பட்ட இந்த எல்லைத் தகராற்றில் இரு தரப்பிலும் இரத்த வெள்ளம் பெருகாதபடி வெள்ளைக் கம்பெனிப் படைகள் காத்து நின்றனவாம்.' இதைப் பற்றிக் குறிப்பிடும் போது ‘மதுரை நாடு' என்ற வரலாற்று நூலின் ஆசிரியராகிய அறிஞர் நெல்ஸன், இந்நிலை நம் கவனத்திற்குரியது. உள்நாட்டு அரசுகள் எவ்வாறு தங்கள் சத்தியை எல்லாம் இழந்து நின்றன என்பதும் பிரிட்டிஷ் அதிகாரம் அவைகளை எவ்வாறு தன் படைப்பலத்தால் அச்சுறுத்தி வந்தன என்பதும் விளங்குகின்றன. மேலும் ஐம்பது ஆண்டுகட்கு முன் இத்தகைய ஓர் எல்லைச் சண்டை புதுக்கோட்டைத் தலைவனுக்கும் சிவகங்கை அரசனுக்கும் இடையே ஏற்பட்டிருந்தால் அது பத்தாயிரம் முதல்