பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 பேராசிரியர் ந.சஞ்சீவி மாறும் என்று அவ்வீரர்கள் பொருமிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால், வெள்ளைப் படைகள், பிரிட்டிஷ் படைகட்குச்சிம்ம சொப்பனமாய் இருந்த திப்புவையும் ஐதரையும் தீர்த்துக் கட்டி விட்டோம் சீரங்கப்பட்டணம் இனி நம் கோட்டை' என்ற மமதையில் பேயாட்டம் ஆடின. ஆர்க்காட்டு நவாபு பல்லிழந்த பாம்பாய்த் தன் மாளிகையில் சுருண்டு கிடந்தான். அவன் படைகளையும் துரோகி தொண்டைமானின் படைகளையும் குற்றேவல் கொண்டு வெள்ளைப் படைகள் நாட்டில் புரிந்த அநீதிகள் அளவிட்டுரைக்க இயலாதவை. இந்நிலைமைகளை எல்லாம் கண்ட தமிழ் மக்கள் நெஞ்சம், கொல்லன் உலை போலக் கொதித்தது. கோட்டை என்றால் சீரங்கப்பட்டனந்தான் கோட்டையோ? வீரர்கள் என்றால் திப்புவும் ஐதருந்தான் வீரரோ? நாமெல்லாம் மனிதர் அல்லமோ? நம் நரம்புகளில் வீரக்குருதி - தன்மான இரத்தம் - ஓடவில்லையோ? தமிழகத்துக் கோட்டைகள் எல்லாம் என்ன, வெறும் பஞ்சுப் பொதிகளோ? பார்ப்போம் ஒரு கை இந்தப் பறங்கிப் படைகளை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இந்தச் சுதந்தரப் பயிரைக்கண்ணீரால் காத்தோம்! என்று அவர்கள் இதயம் முழங்கியது. அதிலும் சிவகங்கைச் சீமையிலிருந்த சுதந்தர வெறி சொற்களால் வரம்பிட்டு உரைக்கும் தரத்ததன்று. காடே நாடாய் இருந்த பெரிய மருதுவினும் நாடே வாழ்வாய் இருந்த சின்ன மருதுவுக்கு இருந்த சினம் அஞ்சத்தக்கது. 'ஆர்க்காட்டு நவாபுகளையும் வெள்ளைத் துரைமார்களையும் செக்கிலிட்டு ஆட்டிச் சக்கையாய்ப் பிழிந்து தொண்டித் துறைமுகத்தில் தூக்கி எறிய வேண்டும்' என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். இந்நிலையில் ஒருநாள் - ஆம் 1801 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இரண்டாம் தேதி, கங்கைக் கரையுடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது போலத் தென்பாண்டி நாடெங்கும் சுதந்தர வீரர்கள் கத்தியைச் சுழற்றிக் கொண்டு வீரநடைபோட்டார்கள். பாளையங்கோட்டைச்சிறைக்கதவுகளை விடுதலை வீரர்களின் துணை கொண்டு நொறுக்கி எறிந்து விட்டு வெளிக் கிளம்பிய ஊமைத்துரை, வீரர் பட்டாளத்திற்குத் தலைமை தாங்கினான். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கொன்ற பின் தரை மட்டமாக்கப்பட்டுக் கிடந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாள்களில் முன்னினும் உறுதியோடு எழுந்து நின்றது; வெள்ளையனே வா! உன் நெஞ்சாழத்தைக் காண்போம்' என்று அறைகூவியது. மீண்டும் தொடங்கியது சுதந்தரப்போர். பாஞ்சைக் கோட்டையைத் தகர்க்க இம்முறை நடந்த கடும்போர். 1801ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 9 ஆம் தேதி முதல் மே மாதம் 24 ஆம் தேதி வரை 104 நாள்கள் நடந்தன. இறுதியில் பேய்வாய்ப் பீரங்கிகள் பாஞ்சைக் கோட்டையைப் பிளந்தன. ஆயினும், சுதந்தர வீரர்கள் நெஞ்சையோ அவர்களின் ஒற்றுமை உணர்ச்சியையோ - ஒரு சிறிதும் அப்பீரங்கிக் குண்டுகளால் உடைக்க முடியவில்லை. பாஞ்சைப் பதியை விட்டு