பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. விண்ணவர்க்கு விருந்து பலம் பொருந்திய காளையார் கோவில் பகைவர் கையில் சிக்கியது. சென்னை இராணுவ வரலாற்றை வரைந்த மேஜர் விபர்ட் என்பவன் தன் நூலில் சுட்டிக் காட்டியுள்ளது போல ஆங்கில ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டவிடாது பெருங்கேடு சூழ்ந்த சிவகங்கையை அடக்கிவிட்டோம் என வெள்ளையர் வெறி கொள்ளச் சிறிய மறவர்நாடு நடத்திய பெரிய போராட்டம் ஒருவாறு முடிவடைந்தது. ஆறுமாதங்கள் இடைவிடாது போர் புரிந்த எண்ணற்ற சுதந்தர வீரர்களின் முயற்சி எல்லாம் மண்ணுக்கு இரையாயிற்று. அவர்களுக்குத் தலைமை தாங்கி உலகம் கண்டிராத ஒப்பற்ற சுதந்தரப் போரை உறுதி தளராது நடத்திய வீரமருது சகோதரர்கள், காளையார் கோவில் பிடிபட்டதும் பல்லாயிரம் வீரர்களின் பெருந் துணையையெல்லாம் இழந்து, எங்கோ சென்று மறைய நேர்ந்தது. இத்தகைய அவலநிலை சிவகங்கைச் சீமைக்கு - தமிழகத்தின் சுதந்தரப் போருக்கு - வருவானேன்? வரலாற்றுக் கண்கொண்டு இவ்வினாவிற்கு விடை காணும் அறிஞர்கள் இருவகையான காரணங்களையே இறுதியாகச் சுட்டிக்காட்ட முடியும்; ஒன்று ஆங்கிலேயரின் கட்டுப்பாடு மிக்க ஆயுத பலம் நிறைந்த படை வன்மை; மற்றொன்று, தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பதற்குத் தமிழகத்திலேயே பிறந்த தமிழ்த் துரோகிகளின் சதிச் செயல்.’ மேற்கண்ட உண்மையைப் புதுக்கோட்டை வரலாறே சற்றும் வருத்தமின்றி ஒத்துக் கொள்கிறது. காப்டன் வில்லியம் பிளாக்பர்ன் என்பவன் தமிழகத்தின் சுதந்தரப் போர் நடைபெற்ற காலத்தில் புதுக்கோட்டைத் தொண்டைமானோடேயே நிழல் போன்றிருக்கும்படி சென்னை அரசாங்கத்தால் கட்டளை இடப்பட்ட ஒரு வெள்ளைத் தளபதி. போர்க்களத்தில் கர்னல் அக்கினியூவிடமிருந்து செய்திகள் வரத் தாமதமாகக் கூடுமாதலால், அதனால் விளையக்கூடிய இழப்புகளிலிருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் காப்பாற்றவே பிளாக்பர்ன் என்பவன் அவ்வாறு நியமிக்கப்பட்டிருந்தான். தொண்டைமான் வெள்ளையருக்கு எவ்வெவ்வாறெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு பாடுபட்டான் என்பதை அவன் அரசாங்கத்திற்கு அந்நாளில் அனுப்பிய அறிக்கை ஒன்று விரிவாகக் கூறுகிறது. அவ்வறிக்கையின் சுருக்கத்தை மட்டும் இங்குக் காண்போம்.