பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 38 நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் நிருவாகப் பொறுப்பு முழுவதையும் தன்னந்தனியாக மேற்கொள்ள இயலாமையே ஆகும். மேலும், மருது பாண்டியர் வீரத்திலும் தியாகத்திலும் மக்களுக்கு அசைக்க இயலாத நம்பிக்கை இருந்தது. முத்து வடுகநாதன் மாண்ட பின்னும் தங்கள் அரசியைக் காப்பாற்றி மறைமுகமான புரட்சி வேலைகள் மூலம் நாட்டின் அரசுரிமையை வேலு நாச்சிக்கே உரிமையாக்கிய வீர சகோதரர்கள் மீது மறவர் மக்களுக்கு இருந்த பற்று எல்லையற்ற நிலைக்கு வளர்ந்து கொண்டே போயிற்று. சிவகங்கைச் சீமையின் அரசுரிமையைப் பற்றி இடைஇடையே நிகழ்ந்த சிறு சிறு மாறுதல்கள் எல்லாம் ஒரு வகையாகத் தீர்ந்த பின் மருது சகோதரர்களே அச்சீமையின் அரசுரிமையை ஏற்றுக் கொண்டார்கள். சிறப்பாக, சின்ன மருதுவே சிவகங்கைச் சீமையின் நிருவாகப் பொறுப்பை மேற்கொண்டான். இதில் எவ்விதமான ஒளிவும் மறைவும் இல்லை. நாட்டு மக்களும் கம்பெனி அதிகாரிகளும் இவ்வுண்மையை நன்று அறிவார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால், நாட்டின் திறைப்பணம், வரவு செலவுக் கணக்குகளெல்லாம் வேலு நாச்சி உயிரோடு இருந்த போதே மருது பாண்டியர் பெயராலேயே அரசாங்கக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டனவாம். இவ்வாறு சிறுகச் சிறுகச் சிவகங்கைச் சீமையின் ஆதிக்கத்தைக் கைப்பற்றி வந்த மருது பாண்டியர்கள், 1800 ஆம் ஆண்டில் வேலு நாச்சி இறந்து போனதும் எவ்விதமான தடையும் இன்றிச்சிவகங்கைச் சீமையின் நேரடி நிருவாகத்தைத் தாங்களே ஏற்று நடத்தலானார்கள். இந்நிலையிலேதான் வீரபாண்டியன் ஈடுபட்டு நடத்திய விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்திய மாவீரன் ஊமைத்துரை மீண்டும் பாஞ்சைப் பதியைத் துறந்து வாளும் கையுமாய்த் தன் உயிர் நண்பர்கள் புடை சூழச் சிவகங்கைச் சீமைக்கு வந்து சேர்ந்தான். வீரபாண்டியக் கட்டபொம்மன் மீது தலை நாள் தொட்டே மிருது பாண்டியர்க்கு மிக்க அன்பும் மதிப்பும் இருந்து வந்தன. சற்றேறக்குறைய ஒன்றரை ஆண்டுகளும் எண்பது நாள்களும் நடந்த பாஞ்சைப் பதியின் விடுதலைப் போரில் தம்மால் இயன்ற வரை எல்லா உதவிகளையும் எப்போதும் செய்து வந்தனர் மருது பாண்டியர். இடுக்கண் வந்த போது இவ்வாறு மருது பாண்டியர் செய்த உதவிகளை ஊமைத்துரையின் நன்றி உணர்ச்சி நிறைந்த உள்ளம் மறக்க இயலுமோ? எனவே, தம் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய மருது பாண்டியர்களின் துணை கொண்டு பிறநாட்டு வெள்ளையரின் ஆதிக்கத்தை நாசமாக்க உறுதி கொண்டனர் ஊமைத்துரையும் அவன் உயிர்த் தோழரும். இந்நிலையில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியர் மனத்தை நெருப்பாக்கிற்று ஆணவம் பிடித்த ஆங்கிலக் கம்பெனிப் படையின் வெறி பிடித்த நெறியற்ற போக்கு.