பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 பேராசிரியர் ந.சஞ்சீவி அவர்களைக் கருணை பொருந்திய கம்பெனி அரசாங்கத்தின் கொலையாளிகள், 'உங்கள் கடைசி விருப்பம் என்ன? என்று கேட்டார்களாம். ஒரு வேளை வருத்தப்பட்டு ஏதாவது கூறுவார்கள் என்று எண்ணினார்கள் போலும் அந்தப் பேடிகள் ஆனால், சிறிதும் கலங்காத வீரப் பார்வையோடு, நாடாளும் மன்னன் என்ற இறுமாப்போடு கணிர் என்ற குரலில் பெரிய மருது தன் கடைசி வேண்டுகோள்கள் இரண்டைக் கூறினான். அவற்றுள் முதலாவதாக அவன் விளம்பியது, நாங்கள் முள்ளால் கீறியவையும், சொல்லால் கூறியவையும், எள்ளால் இறைத்தவையும் ஆகிய பொருள்களை அவரவர்கட்கே அளித்துவிட வேண்டும். என்பது. இரண்டாவதாக அவன் செப்பியது, நாங்கள் ஆர்வத்தோடு கட்டிய காளையார் கோவில் சோமேசுவரசுவாமி கோவிலின் கோபுர வாயிற்படிக்கு நேரெதிரிலேயே எங்கள் உடலைச் சமாதி வைக்க வேண்டும், என்பது. மறை மொழி போல அவ்வீரர் கூறிச்சென்ற இச்சொற்களை எண்ணும் போதெல்லாம் நம் மெய் சிலிர்க்கிறது! தூக்கிலிடப்பட்டுச் சாகும் போதும், "எங்கள் உடல் அழிக. ஆனால், எங்கள் அற உள்ளம் நிலைபெறுக!' என்று எண்ணிய அந்த மாவீரர்களது அறவுணர்வும் ஆண்மை எழுச்சியும் நிறைந்த நெஞ்சத்தை என்னவென்று கூறி எவ்வாறு போற்றி வணங்குவது ஆயினும், சிந்தையிலே தூய்மையும் செயலிலே உறுதியும் கொண்டு எங்கள் தாய்நாட்டின் மானங்காத்த மருது பாண்டியர்களே, ஊமைத்துரைச் சீமானே, வீர பாண்டிய வேந்தே, செந்தமிழ் நாட்டு விடுதலை வீரர்களே, உங்கள் பொன் உடலை எங்கள் மூதாதையர்கள் மண்ணில் புதைத்தார்கள். ஆனால், நாங்கள் உங்கள் புகழுடலை எங்கள் உள்ளத்திலே புதைத்து, என்றென்றும் போற்றி வழிபடுவோம். நீங்கள் ஊக்கிய விடுதலைப் போரில் வெற்றி கண்டு, எங்கள் தலைமுறை அடைந்துள்ள கண்ணினும் இனிய விடுதலையை எங்கள் உயிரினும் சிறந்ததாகக் கருதி காப்பாற்றுவோம்! என்று உணர்ச்சியால் கலங்கும் கண்ணிர் மல்கக் கையுயர்த்திச் சூள் செய்வோமாக!