பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 64 கை விலங்குகளைத் தளர்த்தியது வாயிலாகத் தான் என் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையான துன்பம் கலந்த ஆறுதலாவது ஏற்பட்டது.' ஒரு குலத்துக்கு ஒரே மைந்தனாகிய அவ்விளைஞனையும், பிரிட்டிஷ் பேரரசு கொல்லாமல் கொல்வதற்காகக் கடல் கடந்த இடத்திற்கு அனுப்பியது. அக்கொடுமையை அப்பேரரசின் சார்பில் நடத்தி வைத்த கர்னல் வெல்ஷ் மேலும் அந்த நிகழ்ச்சியைச் சித்திரித்துக் காட்டும் பகுதி இதே இருக்கின்றது: 'எனக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பைப் தூத்துக்குடித் துறைமுகத்தில் லெப்டினன்டு ராக்ஹெட்டிடம் ஒப்படைத்த அந்தத் துயரம் நிறைந்த நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது அந்த இளைஞன் துரைசாமியைக் கடல் கடந்து போகும் கப்பலில் ஒப்படைத்த போது அழகொழுகும் அவன் முகத்தில் புதைந்து கிடந்த ஏக்கம் இப்பொழுதும் கண்ணெதிரே காண்பது போலவே தோன்றுகிறது. அதோடு அவனைப் போலவே வெந்துயரில் வீழ்ந்து கிடந்த அவன் நண்பர், பெற்ற நாட்டைப் பிரியும் நேரத்தில் உண்டான பெருந்துன்பத்தைப் பேசாமலும் ஆண்மையோடும் பொறுத்துக் கொண்ட காட்சி இன்றும் என் கண் முன் தோன்றுகிறது.' இந்நிகழ்ச்சி நிகழ்ந்த போது கர்னல் வெல்ஷ், துரை சாமியைச் சந்திக்கும் கடைசி முறை அதுதான் என்று எண்ணிக் கலங்காத நெஞ்சமும் கலங்கினான். ஆனால், இன்னொரு சந்திப்பையும் ஏற்படுத்தி, அவன் மனத்தில் பெரியதோர் உணர்ச்சிப் பேரிடி விழுமாறு செய்யக் காலம் காத்துக் கொண்டே இருந்தது. 1818 ஆம் ஆண்டில் ஏறக்குறையப் பதினேழு ஆண்டுகள் கழித்து - கர்னல் வெல்ஷ், பினாங்கிற்குப் போனான். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை அவனே கூறுகிறான். “ஒரு நாள் நான் அலுவலகத்தில் இருந்த போது, திடீரென மூத்துத் தளர்ந்து போன ஓர் ஏழைக் கிழவன் என் முன் தோன்றினான். பழைய நினைவு எதுவுமே அற்ற மனத்தோடு இருந்த நான், அவனை அதிகாரக் குரலில், நீ யார்? எதற்காக வந்தாய்? என்று அதட்டிக் கேட்டேன். அவன் என்னைச்சிறிது நேரம் உற்று நோக்கினான். கோடு கோடாய்த் திரை விழுந்து போன அவன் முகத்தில் தாரை தாரையாய்க் கண்ணிர் வழிந்தோடியது. நெடுநேரம் கழித்துக் கடைசியாக அவன் சொல்லிய சொல், துரைசாமி என்பது. ஆம் அந்தச் சொல் என் இதயத்தில் ஈட்டி போலப் பாய்ந்தது' வெல்ஷ் வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டு அவ்வளவு உணர்ச்சியோடும் உருக்கத்தோடும் அவன் ஏன் அங்கே வந்தான்? தன் விடுதலைக்கா? உயிர்ப் பிச்சைக்கா? தப்பி ஒட உதவி நாடியா? இல்லை இல்லை. உரிமை என்பது போரிட்டு வாங்குவதே அன்றிப் பிச்சை கேட்டுப் பெறும் பொருள் அன்று என அறிந்து வாழ்ந்த வீரமரபின் கான்முளை அன்றோ அவன்? அப்படியிருக்க, அவன் எதற்காக வந்தான்? அக்காரணத்தைக் கர்னல் வெல்ஷே கூறுவதை இன்று நினைத்தாலும் கண்ணீர் பெருகுகிறது கர்னல் வெல்ஷ் கூறுவதைக் கேளுங்கள்