பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 பேராசிரியர் ந.சஞ்சீவி முழக்குடன் முகவைத் திருநகருக்குத் திரும்பினார். தம்பித்தேவருக்குக் கைகட்டி வாய்மூடி இருக்கக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதற்குப் பின் தளவாய் சேதுபதி ஐந்தாண்டுகள் நிம்மதியாக ஆட்சி நடத்தி, அறப்பணிகள் பல புரிந்தார். ஆயினும், அவர் 1646-ல் தம்பித்தேவரால் கொலை செய்யப்பட்டார். சேதுபதியைக் கொலை செய்த பின் தம்பித்தேவர் அரியணையில் அமர முயன்றார். ஆனால், மறவர் நாட்டுப் பெருங்குடி மக்கள் மனம் ஒப்பவில்லை. மீண்டும் உள் நாட்டுப் பூசல் மூண்டது. இந்நிலையில் திருமலை நாயக்கர் நீதி வழங்கி அமைதியை நிலை நாட்ட முன் வந்தார். அதன் விளைவாக மறவர் சீமை 1646-ல் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இராமநாதபுரத்தைத் தன்னகத்தே கொண்ட பகுதி இரகுநாதத் தேவருக்குக் கொடுக்கப்பட்டது. சிவகங்கைப் பகுதி தம்பித் தேவருக்குத் தரப்பட்டது. திருவாடானைப் பகுதி இரகுநாதத் தேவரின் இளைய சகோதரர்களாகிய தணக்கத் தேவருக்கும் நாராயணத் தேவருக்கும் சேர வழங்கப்பட்டது. இவ்வாறு ஒன்றுபட்டிருந்த மறவர் சீமை முதன் முதலாகத் துண்டு துண்டாகியது. இதன் மூலம் அமைதியை அச்சீமையில் ஏற்படுத்துவதில் திருமலை நாயக்கர் வெற்றி கண்டார். இந்நிகழ்ச்சிக்கு அடுத்து 1647 முதல் 1672 வரை மறவர் சீமையை ஆண்டவர் இரகுநாத சேதுபதி என்னும் திருமலைச் சேதுபதியாவர். இவர் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்தில் மறவர் சீமையைத் துண்டாடக் காரணமாயிருந்த தனக்கத் தேவரும் தம்பித்தேவரும் காலமாயினர். அதன் விளைவாக மீண்டும் மறவர் சீமை முழுவதற்கும் சேதுபதியாகும் சிறப்பு, இரகுநாத சேதுபதிக்கு எளிதில் வாய்த்தது. இரகுநாத சேதுபதியின் புகழ் மேலும் ஒளிபெற இன்னொரு முக்கிய நிகழ்ச்சியும் காரணமாயிற்று. 1659-ஆம் ஆண்டு மைசூர் நாட்டாரால் மதுரை மாநகரம் பலமாய்த் தாக்கப்பட்டது. அவ்வமயம் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருக்குப் பேருதவியாக ஒரே நாளில் இருபத்தையாயிரம் படைவீரர்களைத் திரட்டி மைசூர் நாட்டவரை விரட்டி அடித்தார் இரகுநாத சேதுபதி. இரகுநாத சேதுபதியின் இந்த இணையில்லாப் பேருதவி இல்லையேல், மதுரையின் அழிவு தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாய் இருந்திருக்கும் என்பது அந்நாளிலேயே வாழ்ந்த சரித்திர அறிஞர்களால் ஏட்டில் எழுதப்பட்டிருக்கும் வாய்மையாகும். தமது நாட்டின் உயிரையும் மானத்தையும் நெருக்கடியான நேரத்தில் காப்பாற்றிய இரகுநாத சேதுபதியைத் திருமலை நாயக்கர் மனமாரப் போற்றினார்: வாயார வாழ்த்தினார்; திருமலைச் சேதுபதிக்குத் தாலிக்கு வேலி (அரசியின் உயிரைக் காத்தவர்) முதலான பட்டங்களை மனமுவந்து வழங்கினார்: மதுரை மன்னர்கட்கே உரிய அரிமுகப் பல்லக்கு முதலான விலைமிக்க வெகுமதிகளை வழங்கினார்; எல்லாவற்றிற்கும் மேலாக மறவர் சீமையின் பொருட்டு அவர் திறை செலுத்த வேண்டிய கடமையினின்றும் விடுதலை தந்தார். மறவர் சீமையோடு திருப்புவனம், திருச்சுழி, பள்ளிமடம் முதலிய