பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மனக் குறை

அன்று மாலையும் வழக்கம்போல் அழுது வடியும் முகத்துடன் நாராயணமூர்த்தி வீட்டிற்குள் நுழைந்தான். நாடக மேடை ராஜா மாதிரி அவன் தன் குமாஸ்தா வேஷத்தைக் கலைத்துக் கொண்டிருந்தபோது, "இந்தாருங்கோ" என்று குரல் கொடுத்துக் கொண்டே அவன் மனைவி குமுதம் அங்கே வந்தாள்-கையில் காப்பியுடன் அல்ல; ஏதோ ஒரு கிரஹப் பிரவேசப் பத்திரிகையுடன்.

“வந்துவிட்டாயா, 'இந்...... தா....ருங்கோ" என்று வலந்த காலத்துக் குயில் மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே?-போ!-பெயரைப் பாரு, பெயரை குமுதமாம்! உன்னைச் சுற்றிச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்யாததுதான் ஒரு குறை!-உம்.... உன்னைச்சொல்லி என்ன பயன்? ஒன்பது வருடமாக நானும் உன் பரட்டைத் தலையையும் எண்ணெய் வடியும் முகரக் கட்டையையும் பார்த்துக் கொண்டு வந்தும் இன்று வரை சந்நியாசம் வாங்கிக் கொள்ளாமலிருக்கிறேனே, அதைச் சொல்லு’ என்று தலையில் லேசாகத் தட்டிக் கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் நாராயணமூர்த்தி.

"பொழுது விடிந்ததும் வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதற்கு நீங்கள் வேலைக்காரர்களை வைத்திருக்கிறீர்களோ, இல்லையோ-நாளெல்லாம் நாவல் படித்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கும் நான் சாயந்திரமானால் சிங்காரித்துக் கொண்டு குயில் மாதிரி கொஞ்சிக்கொண்டும் மயில் மாதிரி நடை போட்டுக் கொண்டும் உங்கள் முன்னால் வந்து நிற்க வேண்டியதுதான்! - அப்படித்தான் நீங்கள் விதம்விதமான துணி மணிகள் வாங்கிக் கொடுத்து கெட்டுப்போச்சு மாற்றிக்கட்டிக்கொள்ள மறு புடவைக்கு வழி கிடையாதே!" என்று குமுதமும் பதிலுக்கு எரிந்து விழுந்து கொண்டே, கையிலிருந்த பத்திரிகையை அவன்மேல் வீசி எறிந்துவிட்டு, அடுப்பங்கரையை நோக்கி நடந்தாள்.

அங்கே, அவளுடைய எட்டு வயதுப் பெண்ணான பட்டு இராத்திரிச்சாப்பாட்டிற்காகப் பொரித்து வைத்திருந்த அப்பளங்களில் ஒன்றை எடுத்துச் சுவை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சாக்கில் அவளுடைய முதுகில் இரண்டு அறை வைத்துத் தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக் கொண்டாள் குமுதம்.