பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேற்றுவார் யார்

167

அவர் சுகாதார அதிகாரி என்பதை அறிந்து கொண்ட அவள் கதி கலங்கிப் போய்விட்டாள். "சாமி, சாமி ஏழையை ஒண்னும் செய்யாதிங்க, சாமி " என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே கூடையை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, அந்த அதிகாரியின் காலைப் பிடித்துக் கொண்டாள்.

அதிகாரி ஓர் அலட்சியப் புன்னகை புரிந்துவிட்டு, "உன்னைத்தானே ஒன்றும் செய்யவேண்டாம் என்கிறாய்? சரி, போ-டேய் யாரடா, அங்கே?-உம்....!” என்று உறுமினார்.

அடுத்த நிமிஷம் அவர் அருகிலேயே நின்று கொண்டிருந்த ஒரு நகர சுத்தித் தொழிலாளி, அம்மாயியின் கூடையைப் பருந்துபோல் பாய்ந்துதுக்கிக்கொண்டு லாரியை நோக்கி ஓடினான்.

"ஐயையோ" என்று அலறினாள் அம்மாயி.

அதை அவன் லட்சியம் செய்யவில்லை. பழங்களை லாரியில் கொட்டிக் கொண்டு, கூடையை அவளுக்கு முன்னால் வீசி எறிந்து விட்டு வண்டியில் ஏறிக்கொண்டான். சுகாதார அதிகாரியும் அவனுடன் ஏறிக் கொண்டார். அவருடைய முகத்தில் அலாதிக்களை வீசிற்று. "அம்மாயியின் கூடையைக் காலி செய்ததின் மூலம் காலராவை நகரத்திலிருந்து அடியோடு ஒழித்து விட்டோம்!" என்ற திருப்தியோ, என்னமோ!

மறுகணம் அம்மாயியின் கண்களில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டே லாரி 'விர்'ரென்று கிளம்பி விட்டது.

"அட, பாவிங்களா சாயந்திரம் அந்த நாயுடுகாருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? குழந்தை குட்டிக்கு எப்படிக் கஞ்சி காய்ச்சி வார்ப்பேன்?" என்று கண்ணிரும் கம்பலையுடன் கதறிக் கொண்டே, கீழே உட்கார்ந்து விட்டாள் அம்மாயி.

தன்னை மறந்த துக்கத்தில், தன் கையிலிருந்த இரண்டு பலூன்களும் விடுதலையடைந்து வானவீதியை நோக்கிப் பறந்ததைக்கூட அவள் கவனிக்கவில்லை; தானும் தன்னுடைய குழந்தைகளும் இரவு பட்டினி கிடக்க வேண்டுமே என்றுகூட அவள் அவ்வளவாகக் கவலையடையவில்லை; "தர்ம ராஜா நாயுடுகாருவுக்கு என்ன பதில் சொல்லுவது" என்று எண்ணி எண்ணித்தான் அவள் ஓயாமல் அழுது கொண்டேயிருந்தாள்.

பாவம், கதியற்ற அவளுக்கு விதியைத் தவிர வேறு ஏதாவது ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யார்?