பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருவேப்பிலைக்காரி

ழக்கம்போல் இன்றும் விடியற்காலை ஐந்து மணிக்குப் படுக்கையைவிட்டு எழுந்தேன். மணி பத்தாகும் வரை அவருக்கு வேலை செய்வதற்கே பொழுது சரியாயிருந்தது.

மாதம் பிறந்தால் அந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் அவருக்குத் தொண்ணூற்றைந்து ரூபாய் 'பிச்சைக்காசு' கொடுத்தாலும் கொடுத்து விடுகிறான். அவர் மட்டுமா அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது? நானும்தான் அவர் மூலம் அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது!

மணி பத்துக்கு மேல் ஒரு நிமிஷம் ஆகிவிட்டால் போதும், அவர் தவியாய்த் தவித்துக் குதியாய்க் குதிப்பார் அவர் குதிப்பதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க முடிகிறதா?-கை பிடித்த தோஷம் நானும் அவருடன் சேர்ந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

இதனால் அவருக்கு ஒன்றும் கஷ்டமில்லை-நேரம் கழித்துச் சென்றால் மானேஜர் கோபித்துக் கொள்வாரே என்பதைத் தவிர: எனக்குத்தான் கஷ்டமெல்லாம்.

நான்தான் அவருக்குப் பயந்து தொலைகிறேன்; பாழாய்ப் போன அடுப்பு அவருக்குப் பயந்து தொலைகிறதா என்ன? அது தன்பாட்டுக்கு நிர்விசாரமாக எரிந்து தொலைகிறது.

அவசரத்தில் நான் அதைத்துண்டிவிடும் போது, அது சில சமயம் என் கை விரல்களைத் தீண்டிவிடும்; 'அப்பப்பா!’ என்று துடித்துப் போவேன். அதுதான் சமயமென்று கஞ்சித்தண்ணிர் வேறு என் காலில் கொட்டிக் கொண்டு விடும்; பச்சைத் தண்ணீரைக் கைமேலும் கால் மேலும் கொட்டியவண்ணம் பதைபதைத்துப் போவேன்.

இந்தச் சமயத்தில், "என்ன, லலிதா ஏதாவது கொண்டு வருகிறாயா இல்லை, நான் போகட்டுமா?" என்று அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டுமாகக் கேட்பார்.

அவர்அவ்வாறு கேட்கப் பிறந்தவர்; கேட்கலாம். "இப்பொழுது ஒன்றும் கொண்டு வருவதற்கில்லை; நீங்கள் போகலாம்" என்றுதான் பதிலுக்குச் சொல்ல முடியுமா? அவ்வாறு சொல்ல நான் பிறந்தவளல்லவே?-நான் மட்டும் என்ன, எங்கள் வர்க்கமே அவ்வாறு சொல்வதற்குப் பிறந்ததல்லவே!