பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

 விந்தன் கதைகள்

எல்லாவற்றுக்கும் அவன் “ஆமாம்” என்று சொல்லவே பெரியவர் இன்னும் கொஞ்சம் அவனை நெருங்கி, “அப்படிப் பட்டவரா உனக்கு விரோதி?” என்று கேட்டார்.

"அவர் எனக்கு விரோதி இல்லை..."

"பின்னே யாருக்குத் தம்பி விரோதி?”

"சமுதாயத்துக்கு விரோதி!"

“சொந்த அப்பாவை விடவாசமுதாயம் பெரிது?”

“ஆமாம், அது அப்பாவை விடப் பெரியது; அரசாங்கத்தை விடப் பெரியது” என்றான் புஷ்பராஜ்.

பெரியவர் வீட்டின் முகட்டைப் பார்த்த வண்ணம் ஒரு வினாடி யோசித்தார். பிறகு "பிள்ளையாண்டான் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான்; ஆனால் மனசு கேட்கமாட்டேன் என்கிறதே!" என்றார்.

இந்தச் சமயத்தில் புஷ்பராஜின் சிற்றன்னை எழுந்து நின்று, "பிள்ளையாண்டான் சொல்வது சரிதான், அப்பா! ஆனால் அந்த மனுசன் வெளியே வந்த பிறகு இந்தப் பிள்ளையை உயிரோடு வைத்திருக்க வேண்டுமே!" என்று கண்ணீரும் கம்பலையுமாகத் தன் கவலையைத் தெரிவித்தாள்.

இதைக் கேட்டதும் புஷ்பராஜ் திகைத்துப் போனான். அடுத்த நிமிஷம் அவனுடைய இதய பாரம் குறைந்தது; முகமும் மலர்ந்தது. “சித்தி, எனக்காக நீங்கள் வருந்த வேண்டாம். இதோ நான் இன்றே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்; எனக்கு அப்பாவின் பணமும் வேண்டாம்; பாத்தியதையும் வேண்டாம். வஞ்சகமின்றி உழைத்து வயிறு வளர்க்கும் கோடானு கோடி மக்களில் ஒருவனாக நானும் வாழ்கிறேன். அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்வரை தாத்தா உங்களுக்குத் துணையாக இருக்கட்டும்!” என்று சொல்லிவிட்டு, அவன் 'விர்'ரென்று வெளியே கிளம்பி விட்டான்.

அதற்குப் பிறகு புஷ்பராஜ் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை. இவ்வளவு பெரிய உலகத்தில் அவன் நாணயத்துடன் வாழ இடமா கிடைக்காமற் போயிருக்கும்?