பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

விந்தன் கதைகள்

உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதுதான்; அது எல்லோருக்கும் சொந்தம் தான். ஆனால், பணக்காரர்கள் சிலர் அதை ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொண்டு, ‘இது என்னுடையது; அது உன்னுடைய்து’ என்று உரிமை கொண்டாடுகிறார்களே.. அவர்களுக்கு மத்தியில் ஏழை பொன்னையாவுக்கு வாழ இடமுண்டா?

‘எல்லோரும் ஒர் குலம்’ என்பதெல்லாம் எழுத்திலே. வெறும் பேச்சிலே நடைமுறையிலோ?

நாடு நகரங்களில் எத்தனையோ மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் மேல் ஜாதியைச் சேர்ந்த எத்தனையோ பேர் அவற்றில் ஒண்டுக் குடித்தனம் செய்கின்றனர். அவர்களுடன் நாய்கூடச் சரிசமானமாக வாழ்ந்து வருகிறது. ஆனால் பொன்னையா? அவன்தான் கீழ் ஜாதியாச்சே மரணமடைந்த பின் மயானத்தில் கூட அவனுக்குத் தனி இடந்தானே?

* * *

"சின்னி எனக்கொரு யோசனை தோணுது; எங்கேயாச்சும் ஒண்டுக் குடித்தனம் இருக்கலாம்னு பார்க்கிறேன்" என்றான் ஒரு நாள் பொன்னையா.

"நல்ல யோசனைதான்; நமக்கு யார் வீடு விடுவாங்க?" என்று கேட்டுச் சிரித்தாள் சின்னி.

"நம்ம ஜில்லா போர்டுக்குத்தலைவராயிருக்காரே தர்மலிங்கம். அவர் எப்பப் பார்த்தாலும் ‘எல்லோரும் ஒர் குலம்’னு பேசிக்கிட்டிருக்காரு, நம்ம ஜாதியும் அவரு ஜாதியும் ஒண்ணுன்னு சொல்றாரு. அதாலே அவரைக் கேட்டா நமக்குக் கொஞ்சம் இடம் விடுவாரு, இல்லையா?”

“என்னமோ கேட்டுத்தான் பாரேன்?”

"இரு, கேட்டுக்கிட்டு வாரேன்" என்று சொல்லி விட்டு, அவருடைய வீட்டை நோக்கி ஒட்டமும் நடையுமாகச் சென்றான் பொன்னையா.

* * *

"அம்மா, ஐயா இருக்காரா?"

‘யாரடா அது? பொன்னையா?" என்று கேட்டுக் கொண்டே வாசலுக்கு வந்தார் தர்மலிங்கம்.

“ஆமாங்க!"

“எங்கே வந்தே?”