பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எத்தனை பேரோ!

269

செளகரியங்களையும் உத்தேசித்துத் தான் அவர் பெரியசாமியையும் சின்னசாமியையும் தமது பங்களாவைக் காவல் காக்க வைத்துக் கொண்டார். ‘ஏதோ, எசமான் புண்ணியத்திலே கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிக்கிறோமே!’ என்று திருப்தியுடன் அவர்களும் அந்த வேலையைச் செய்து வந்தனர். வேறு என்ன திருப்தி அவர்களுக்கு வேண்டிக் கிடக்கிறது!

* * *

ன்று பெரியசாமிக்குப் பகல் வேலை. அதற்காக வழக்கம்போல் அவன் கையில் கட்டுச்சாதத்துடன் காலை ஆறுமணிக்கே கஸ்தூரி பவனத்திற்கு வந்துவிட்டான். மத்தியானம் பன்னிரண்டு மணிவரை கால் கடுக்க நின்ற பிறகு, அவனுக்கு வயிற்றைப் பசித்தது. ஒரு மரத்தடிக்குச் சென்று கட்டுச் சாதத்தை அவிழ்த்துச்சாப்பிட ஆரம்பித்தான். அதற்குள் அந்தப் பாழாய்ப்போன ‘ஹாரன்' சத்தம் அவனுக்குக் காதில் விழுந்தது. அவ்வளவுதான்; கட்டுச் சாதத்தைக் கீழே விரித்தது விரித்தபடி வைத்துவிட்டு அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்; பங்களாவின் கேட்டைத் திறந்து விட்டான்; கார் உள்ளே நுழைந்ததும் அப்புறம் எஜமான் கீழே இறங்குவதற்காகக் கதவைத் திறந்துவிட வேண்டாமா? அதற்காக அவன் காரைப் பின் தொடர்ந்து ஒட்டமும் நடையுமாகச் சென்றான்.

இந்தச் சமயத்தில் பெரியசாமியின் சாப்பாட்டுக் கவலையைத் தீர்த்து வைக்க ஒரு காகம் முன்வந்தது. மனிதனைப் போல் கிடைத்ததைத் தானே தின்றுவிடவேண்டும் என்ற ஆசைகாகத்துக்குக் கிடையாதல்லவா? ஆகவே, அது சேரவாரும் ஜெகத்தீரே என்று தன் அண்டை அயலிலிருந்த காகங்களை எல்லாம் கூவி யழைத்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? அவன் திரும்பி வருவதற்குள் மரத்தடியிலிருந்த கட்டுச்சாதம் அத்தனையும் காலி!

வெறும் இலையைக் கண்ட பெரியசாமிக்கு எப்ப்டியிருந்ததோ என்னமோ, அவன் தன் வயிற்றில் ஓங்கி ஓர் அடி அடித்துக் கொண்டு வாசலுக்கு வந்து நின்று கொண்டான்

நேரம் ஆக ஆக, அவனுக்குப் பசி அதிகரித்தது. மணி எப்பொழுது எட்டடிக்கப் போகிறது என்று அவன் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்து வந்தான். பொழுது சாய்ந்து தெரு விளக்குகள் ஏற்றப் பட்டதும் அவனுக்குக் கொஞ்சம் தெம்பு உண்டாயிற்று. ‘சின்னச்சாமி இன்னும் கொஞ்ச