பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மவராசர்கள்

307

தொல்லையில்லிங்க!" என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே, அவன் அந்த டப்பியை எடுத்து மீண்டும் கோட்டுப் பையில் பத்திரமாக வைத்துத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

"இது அக்கிரமம்!" என்றார் முதலியார்.

"சட்ட விரோதம்!" என்றார்.அவருக்கு அருகில் இருந்தவர்.

“அதுக்கு நாங்க என்னங்க, பண்றது? அந்த எழவெடுத்த சட்டம் எங்களுக்கு விரோதமாய் இருக்குதுங்களே!” என்றான் நாச்சியப்பன்.

"ஏழைகளாயிருந்தால் என்ன? இந்த அபினுக்குப் பதிலாக பால் வாங்கி ஊற்றக் கூடாதா?”

"ஊத்தலாம்; இப்போகூட பால் ஊத்தித்தான் எடுத்துக்கிட்டு வந்தேன். ஆனா இது பசியை நெனைச்சுக்கிட்டு அழறப்போதெல்லாம் பால் வாங்கி ஊத்த என்னாலே முடியுங்களா?”

"உன்னாலே முடியாவிட்டால் என்ன? உன் மனைவி இல்லையா?”

"அதை ஏன் கேக்கிறீங்க உலக வழக்கத்தையொட்டிச் சொல்லப்போனா அவ ‘செத்துப் போயிட்டான்'னு மறைச்சுச் சொல்லணும். ஆனா நான் நிசத்தையே சொல்லிப்பிடறேன் - அவளுக்கு இல்லாத மானமா எனக்கு...?"

"அது என்னப்பா, அப்படிப்பட்ட விஷயம்...."

"அதுவுங்களா? என் தரித்திரம் என் பெண்டாட்டியைக் கூட என்னோட வாழ விடலீங்க... அவ அந்தப் பாவிப் பயலோட ஓடிப் போயிட்டா!"

"எந்தப் பாவி பயலோட..."

"அவனை என்னமா உங்களுக்குத் தெரியும்? அவன் எங்க ஊர்ப் பையன்; இந்தச்சண்டையிலே பாவ புண்ணியத்துக்கு அஞ்சாம பேரம் பண்ணி நாலு காசு சம்பாதிச்சு வச்சிருந்தான். அவனோட அவ போயிட்டா போன புண்ணியவதி சும்மாபோவாம இந்தச்சனியனை வேறே என் காலிலே கட்டிட்டுப் போயிட்டா...ம்....அவ என்ன பண்ணுவா மனசு கேட்கா விட்டாலும் வயிறு கேட்குதா?”

"சரி, அவள் போனால் போகிறாள். நீ இருக்கிறாயோ இல்லையோ?"