பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுயநலம்

வேலப்பனின் வேலையே அலாதியானது. மனைவி, மக்களை மறந்து நாள்தோறும் உயிரற்ற இயந்திரங்களிடமோ, உணர்ச்சியற்ற அதிகாரிகளிடமோ உயிரை விட்டுக் கொண்டிருப்பது அவனுடைய வேலையல்ல; அவன் தொழிலுக்கு அவனே வேலைக்காரன்; அவனே சொந்தக்காரன்!

காலையில் எழுந்ததும் வேலப்பன் கடை வீதிக்குச் சென்று சில தேக்குமரத் துண்டுகளையும், பிரம்புக் கத்தைகளையும் வாங்கி வருவான். தேக்குமரத் துண்டுகளை அறுத்து, இழைத்து கூர் வாங்கி கட்டில்களாகச் செப்பனிடுவது வேலப்பனின் வேலை. பிரம்புகளை யெல்லாம் பிளந்து கட்டில்களுக்குப் படுக்கை பின்னி விடுவது வேலப்பனின் மனைவியான முருகாயியின் வேலை. நடுநடுவே ‘எடுபிடி வேலைகளுக்கெல்லாம் அவர்களுடைய குழந்தைகள்!

வேலை செய்யும் இடமோ அவர்கள் வீட்டை அடுத்த மாந்தோப்பு. 'குக்கூ' குயில்களும், 'கிக்கீ' கிளிகளும் கொஞ்சி விளையாடும் இடம். அந்தத் தோட்டத்தின் சொந்தக்காரர், வேலப்பன் அங்கு வேலை செய்வதைப்பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. ஏனென்றால், சம்பளம் இல்லாமல் அவன் தன் வேலையுடன், நம் தோட்டத்தையும் காவல் காத்துக் கொண்டிருக்கட்டுமே என்று தான்!

வேலைக்கு நடுவே ஊர்ப் பேச்சு, உறவினர் பேச்சு, காதல் பேச்சு, ஊடல் பேச்சு எல்லாம் நடக்கும். ஆனால், கைகள் மட்டும் வேலையிலேயே முனைந்திருக்கும்.

பிரம்பைப் பிளப்பாள் முருகாயி!
பின்னி விடுவாள் முருகாயி!
கன்னத்தைக் கிள்ளப் போனால்
கையைத் தள்ளுவாள் முருகாயி!

என்று நடுவில் பாட்டு வேறு பாட ஆரம்பித்து விடுவான் வேலப்பன். "ஐயே! மூஞ்சைப் பாரு மூஞ்சை!" என்று உள்ளத்தில் விருப்புடனும் உதட்டில் வெறுப்புடனும் அவனைப் பழிப்பாள் முருகாயி.

இதைக் கேட்டு வேலப்பனுக்குக் கொஞ்சமாவது கோபம் வரவேண்டுமே ஊஹஅம்; சிரிப்புத்தான் வரும்: