பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

விந்தன் கதைகள்

சரியில்லை அம்மா கொஞ்சம் படுக்கையைப் போட்டுவிட்டுப் போ?” என்றான் அலிகான். அவளும் அப்படியே அவனுக்குப் படுக்கையைப் போட்டுவிட்டுச் சென்றாள். இதையெல்லாம் பார்த்த போது, தன்னுடைய சொந்த செளகரியத்துக்காகத்தான் அலிகான் படுதா முறையைக் கூடக் கைவிட்டு விட்டானோ என்று எனக்குத் தோன்றிற்று.

கடையிலிருந்து திரும்பி வந்ததும் அஜ்ஜா அவசர அவசரமாகச் சமைத்தாள். அப்பாவைச் சாப்பிடுவதற்கு எழுப்பினாள். அவன் எழுந்திருக்கவில்லை - ஏன் எழுந்திருக்கவில்லை? அதுவும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து போய்விட்டது. அவன் முடிவில்லாத நித்திரையில் ஆழ்ந்து விட்டான்! - அஜ்ஜா அலறினாள்; நான் திடுக்கிட்டு அவளருகில் சென்றேன். அவள் கண்ணிர் தோய்ந்த கண்களால் என்னை ஏறிட்டுப் பார்த்தாள். “அல்லாவின் கிருபை அவ்வளவுதான்” என்றேன் நான்.

என்ன நிலையற்ற வாழ்வு!

* * *

என்னுடைய சொந்தச் செலவில்தான் அலிகாவின் பிரேதத்தை எடுத்து அடக்கம் செய்ய வேண்டி நேர்ந்தது. பார்க்கப் போனால் அவன் இறந்ததற்காக அஜ்ஜா வருந்துவதற்கு அவசியமே இல்லாமலிருந்தது. ஏனெனில் காலையில் வண்டியைக் கட்டிக் கொண்டு சென்றால் “இன்றுடன் என்று திரும்புவாய், பாவா?” என்று கேட்கக்கூடிய நிலையில்தான் அவள் என்றும் இருந்திருக்கிறாள். காரணம், அலிகானுக்கு அஜ்ஜாவைக் காட்டிலும் சாராயத்தின் மீதும் கஞ்சாவின் மீதும் அதிக அன்பு இருந்து வந்திருக்கிறது. கிடைத்ததைக் கொண்டு கீழே விழும்வரை சாராயத்தைக் குடித்துவிட்டு, அதற்கு மேல் கஞ்சாவை அடித்துவிட்டு, வண்டியை வண்டி மேட்டில் நிறுத்திவிட்டு, வேறு கவலையொன்றும் இல்லாமல் வண்டிக்குள் படுத்துக் கொண்டு தூங்கியே அவன் தன் வாழ்நாட்களில் பாதியைக் கழித்திருக்கிறான். மற்றப் பாதி நாட்கள் அஜ்ஜாவுக்குச் சஞ்சலத்தைக் கொடுப்பதில் கழித்திருக்கிறான்.

இந்த விஷயங்களெல்லாம் தெரிந்த பிறகு, அஜ்ஜாவின் மீதிருந்த அனுதாபம் எனக்கு அதிகமாயிற்று. ஆனால் அந்த அனுதாபத்தை நான் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை... அப்படிக் காட்டிக் கொள்வது அவள் ஏதாவது தப்பர்த்தம் செய்து கொள்வதற்கு ஏதுவாகுமென்று நான் நினைத்ததுதான் அதற்குக் காரணம். இதனாலேயே அலிகான் இறந்தபிறகு, அந்த ஈட்டிக்காரன் வந்து