பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செந்தமிழ் நாட்டிலே

“எழுத்தாளன் பிழைக்க வேண்டுமானால் அவன் எண்ணமும் எழுத்தும் ஒன்றாயிருக்கக் கூடாது; எண்ணம் வேறு, எழுத்து வேறாய்த்தானிருக்க வேண்டும். இல்லையானால் அவன் வாழப் பிறந்தவனல்ல; சாகப் பிறந்தவன்!”

இந்த அபிப்ராயத்தைத் திருவாளர் சதானந்தம் ஒப்புக் கொள்ளவேயில்லை. “கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக எண்ணத்தையும் எழுத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டேன். தம்பி! இது செத்தவர் வாழும் தமிழ்நாடு; நானும் செத்தபின் வாழ்வேன்” என்பார் அவர்.

“வயிற்றுப் பிழைப்பைக் கேவலமாக நினைக்கும் இவர் வாழ்ந்த மாதிரிதான்” என்று நான் எண்ணிக் கொள்வேன்.

ஏனெனினல் “உலகத்திலேயே வயிற்றுப் பிழைப்பைப் போன்ற ஒர் உயர்ந்த லட்சியம் வேறொன்றும் கிடையாது!” என்பதுதான் என் திடமான அபிப்பிராயம்.

உண்மையில், இன்று எத்தனையோ எழுத்தாளர்களுடைய அபிப்ராயமும் அது தான். ஆனால், அதைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்வதற்குச் சிலர் வெட்கப்படுகிறார்கள் - அவ்வளவுதான் விஷயம்

முதலில் அந்த லட்சியம் நிறைவேறினால் தானே, அப்புறம் மற்ற லட்சியங்களைப் பற்றிச் சிந்திக்கவாவது முடியும்?

* * *

வாழ்க்கையில் சதா துக்கமாக இருந்த திரு. சதானந்தம் அவர்களை, அவருடைய வாழ்நாளில் யாருமே கவனிக்கவில்லை.

“அஸ்வினி, பரணி, கார்த்திகை என்று இருபத்தேழு நட்சத்திரங்களின் பெயர்களையும் நான் ஒருவனே புனைப் பெயர்களாக வைத்துக் கொண்டு, என் பத்திரிக்கை பூராவும் நானே கதை, கட்டுரை எழுதிக்கொண்டாலும் எழுதிக் கொள்வேனே தவிர, உம்முடைய கதை, கட்டுரையை மட்டும் ஒரு பக்கம் கூட பார்க்க மாட்டேன்; அப்படியே பார்த்தாலும் பிரசுரித்தாலும் ஒரு பைசாக் கூடக் கொடுக்கமாட்டேன்” என்று எத்தனையோ பத்திரிகாசிரியர்கள் அவருடைய கதை, கட்டுரைகளை நிராகரித்துவிட்டார்கள்.