பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உதயணன் சம்மதம்

251

துன்பமுறும் தங்கள் மனமும் எவ்வளவு நாள் அந்தத் துன்பத்தோடு அரசாட்சிப் பொறுப்பையும் தாங்கிக் கொள்ள இயலும்? நீங்களே சிந்தித்துப் பாருங்கள். மேலும் எங்கள் நாட்டிற்கு வரும்போது நீங்கள் தனிமையாக வந்தீர்கள். கைம்மாறு செலுத்தி அமைத்துக் கொள்ள முடியாத அவ்வளவு பெரிய உதவியை எங்கள் நாட்டிற்கும் எங்கள் மன்னனுக்கும் செய்து காப்பாற்றினர்கள். தத்தையை இழந்து தனிமையான வாழ்வில் சோகமுற்றிருக்கும் தங்களை அந்தச் சோகத்திலிருந்து எங்கள் மன்னர் மீட்க விரும்புகின்றார். உங்களுடைய நட்பை எங்களோடு என்றென்றும் நிலைத்திருக்கச் செய்து கொள்வதுடன் உங்களைத் தம்முடைய நெருக்கமான உறவினராகவும் எம் அரசர் ஆக்கிக் கொள்ள விரும்புகிறார். இது எங்கள் வேந்தர் பிரானின் மனப்பூர்வமான விருப்பம். ‘இதைக் கூறித் தங்கள் கருத்தை அறிந்து கொண்டு வருவதற்காகவே என்னை அனுப்பினார்.” அமைச்சன் தான் வந்த கருத்தை இவ்வாறு உதயணனிடம் உரைத்தான்.

அமைச்சன் தான் கூறவேண்டியவற்றை முடிந்தவரை தெளிவாகத்தான் கூறியிருந்தான். உதயணனும் தன் கலக்கங்களுக்கு இடையேயும் அதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டான். ‘பதுமையைத் தனக்கு மணஞ் செய்து கொடுக்கத் தருசக வேந்தன் ஆவல் கொண்டிருக்கிறான்’ என்பதை உதயணன் அதன் மூலம் விளங்கிக் கொண்டான். எதிர் பார்த்ததுதான். உதயணனுடைய மறுமொழிக்காக அமைச்சன் காத்துக் கொண்டிருந்தான். உதயணன் சற்று நேரம் அவனுக்கு மறுமொழி கூறாமல் அமைதியாக இருந்தான். ‘அமைச்சன் கூறிய தருசகனின் விருப்பம் எதனால் ஏற்பட்ட விளைவு’ என்பதைச் சிந்தித்தபின்பே, அவன் இது பற்றி முடிவு செய்ய வேண்டியிருந்தது.

சாதகமோ, பாதகமோ எதையும் சிந்தனைக்குப் பின்னரே அங்கிகரிக்கும் இயல்புடையவன் உதயணன். இராஜ தந்திரங்களில் அது முதன்மையானதும் ஆகும். “பொது