பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வேண்டும் விடுதலை

பிள்ளைகளைச் சேர்க்குங்கால் சாதி , என்ன என்று கேட்கும், இடத்தில் எப்படிக் குறிக்கின்றீர்கள்? நான் 'தமிழன்’ என்று குறிக்கிறேன். அப்படிக் குறித்தால் பள்ளியில் சேர்க்க முடியாது என்று சொன்னால், எந்தெந்த வகையில் போராடுவேன் என்று எச்சரித்திருக்கிறேன். 'தமிழன்’ என்று குறிப்பதால் இடம் இல்லை என்று சொல்லி விடுவானா? மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்காரரிடமும் ‘தமிழன்’ என்றுதான் குறிக்கச் சொல்லுகிறேன். “அப்படியொரு சாதி பட்டியலில் இல்லையே” என்றால் "இருக்கிறது”; இங்கே இருக்கிறோம்; போய்க் குறித்துக் கொண்டு வந்து எழுதிவிட்டுப்போ” என்று சொல்லுவேன். சாதி, மதங்களை ஒழிக்க நாம் உள்ளத்தால் விரும்பவில்லை; எனவே இதுநாள்வரை அழிக்க முடியவில்லை. பார்ப்பான் அவை உள்ளன என்று எங்கே சொல்கிறான். அவனுடைய வேத, பஞ்சாங்க, புராணங்களைச் சுட்டிக் காட்டிச் சொல்கின்றீர்களா? நம்மில் எத்தனைப்பேர் அவற்றைப் படித்தும் பின்பற்றுகிறோம்? இன்று வேதத்தையும், மநு தருமத்தையும் யாரும் படிக்கவில்லை. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

பார்ப்பான் கோயில்களைக் கட்டவில்லை. அங்கே வழிபாடு செய்தவனும், மநுதர்மம் எழுதியவனும், பரப்பியவனும் தமிழனே! அவற்றை நீங்கள் தான் பரப்புகின்றீர்கள். ஒரு தி.க, தலைவர் மிகப் படித்தவர்: மிகஉயர்ந்தவர். அவருடைய வீட்டுத் திருமணம் ஒன்று நடந்தது. அதுவும் பெரியார் தலைமையிலேயே நடந்தது. பெரியார் வந்தார்; தாலியைத் தொட்டுக் கொடுத்தார்; மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்; தாலி கட்டத் திருமணம் முடிந்தது ஆனால் உண்மையென்ன வென்றால் பெரியார் வரும் முன்பே அன்று காலை 4.5 மணிக்கே ஏற்கெனவே பழைய சடங்கு முறையில் திருமணம் முடிந்து விட்டது. இஃது இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது. நாம் கொள்கையைப் பேசுகிறோம். செய்வதில்லை. பார்ப்பான் மேல் பழியைப் போட்டுவிடுகிறோம். இப்படி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு நாட்களைக் கடத்துவதற்கு நாணவேண்டும்.

ஒரு கருத்தைச் சொன்னால், நம்மால் அதை நிறைவேற்ற முடியுமா என்பதை முதலில் எண்ணிக் கொள்ள வேண்டும். எல்லாம் நம் அமைச்சர்கள்; நம் கட்சி தான் ஆள்கிறது என்று பெரியார் சொல்கிறார். ஆம்; என் கட்சிதான் ஆள்கிறது என்று நான் கூடப் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். சொன்னால் போதாது. செயலுக்கு வரவேண்டும்; பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.