பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

167

முரசொலி அடியார்-
தோளோடு தோளிணைவார்!


முழங்குகின்ற பேரொலியில் அவரின்
தேரொலியும் கலந்து வரும்!
அறிக்கைகள்-சுவரொட்டிகள் தனியே அனுப்பப்பெறுகின்றன.!

காத்துக் கிடந்த பாசறை மறவர்களே!
யாத்திடப் போகும் விடுதலைப் பரணிக்குக்
கோத்திடப் போகும் கூர் மழுங்காச் சொற்களாக

வந்துச் சேருங்கள் சென்னைக்கு!
சூலை 13.
ஆம் , அன்று தமிழக விடுதலை போராட்ட நாள்!

- தென்மொழி, சுவடி : 1.2 ஓலை 8, 1975


தமிழ்நிலத்தை விடுவிப்போம் சென்னையில் 3-ஆவது தமிழகப் பிரிவினை மாநாடு
பைந்தமிழ் மறவர்களே! புறப்படுங்கள் சென்னைக்கு!

மிழன், மொழியால் ஆரியத்திற்கும், இனத்தால் ஆரியப் பார்ப்பனியத்திற்கும், ஆட்சியால் வடவர்க்கும் பொருளியலால் வடநாட்டு முதலாளியத்திற்கும், பண்பாட்டால் மேலை நாட்டினர்க்கும் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே படிப்படியாய் அடிமைப்பட்டுத் தாழ்ந்திழிந்து போனான். உலகின் முதல் மாந்தனும் மக்கள் குலத்திற்கே நாகரிகம் பரப்பியவனுமாகிய அவன், இன்று உலகின் கடை கெட்டக் கீழ்மகனாய்த் தன்மானம் இழந்து, தன்னுணர்வுகெட்டுக் கூனிக் குறுகிக் கோழையாய்க் கிடந்து புழுவாய் நெளிகின்றான். இது மறுக்க முடியாத கடந்தகால, இக்கால வரலாற்றுண்மை.

அவன் இன்று கொஞ்சங் கொஞ்சமாய் உணர்வுவயரப் பெற்றுக் கண்கள் விழிப்புற்று, எழுந்து, விரைந்தோடும் முன்னேற்ற உலகின் ஓட்ட நடையோடுளர் தளர் நடையிட்டுப் போகப் புறப்பட்டுவிட்டான் துவண்டு கிடந்த அவன் உடல்நரம்புகள் புடைக்கத் தொடங்கி விட்டன. தொய்ந்து கிடந்த அவன் தோள்கள் வீறுபெற்று வருகின்றன. புதைந்து கிடந்த அவன் அரிமா நெஞ்சு, அதர்ந்து பொருத அணியமாகி விட்டது.