பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

47

வாய்ச்சண்டையும், கைச் சண்டையும் போடத் தொடங்கிவிட்டன. குடியும், குடித்தனமுமாக விரிந்து சிறக்கவேண்டிய இப்பெற்றோர்களிடையே போராட்டங்களைப் பார்த்துப் பிள்ளைகளாகிய மக்கள் மருண்டு திகைப்புண்டு என்ன செய்வதென்று அறியாமல் கூனிக்குறுகிப் போய்விட்டனர். மொத்தத்தில் இந்திய அரசியல் அமைப்பே ஆட்டங் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலை இந்தியாவிற்குப் பெரியதோர் அரசியல் வீழ்ச்சி என்பதை எவரும் மறுக்க முடியாது.

இன்றுவரை தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியாதலின் இந்திய அரசியல் அல்லது பொருளியல் அல்லது குமுகாய வீழ்ச்சி எந்த அளவினதாயினும் அந்நிலை தமிழகத்தையும் ஓரளவு தாக்கவே செய்யும். எனவே இந்தியாவின் நடுவணரசில் ஏற்படுகின்ற மாற்றங்கள், கட்டுக்குலைப்புகள் அல்லது சீர்குலைவுகள் தமிழகத்திலும் ஒருவகை மாற்றத்தை, ஏற்படுத்தியே தீரும். இந்திய அரசியலில் இக்கால் ஏற்பட்ட குமட்டல் கொந்தளிப்புகளும் அதிகாரப் பொருமல்களும் தமிழகத்தையும் தாக்கியுள்ளதாக நாம் கருதிக் கொள்ள வேண்டும். ஆகையால் இந்திய அரசியலின் செரிமானக் குறைவு நம் ஆராய்ச்சிக்குகந்த முழுப்பொருளாக அமையாவிடினும் தமிழகத்தை இந்த நிலை எந்த அளவு தாக்குகின்றதோ அந்த அளவிற்கு நாம் இதைப்பற்றிக் கவலைப்பட்டாகல் வேண்டும். கப்பலில் ஓட்டை ஏற்பட்டு அது முழுக வேண்டிய நிலையில், இதில் அடிமையாக்கப் பட்டுக் கிடக்கும் ஓர் அரசியல் அடிமை, கப்பல் மூழ்கிவிட்டால் என்ன செய்வது என்று எந்த அளவில் வருந்துவானோ, அந்த அளவில் நாமும் வருந்தியாக வேண்டி உள்ளது. எனவே பேராயக்கட்சியின் பிளவு அக்கட்சிக்காரன் ஒருவனை எவ்வளவு வருத்துமோ அந்த அளவு இல்லாமற் போயினும், அக்கட்சியின் நடுவணரசு ஆளுகைக்குட் பட்டுக் கிடக்கும் நாம் அதன் கட்டுக்குலைவை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இந்த நிலை நமக்கு ஒரு புடை தீமையாகவும் ஒரு புடை நன்மையாகவும் அமையலாம்.

பொதுவாக நம்மை அஃதாவது தமிழர்களைப் பொறுத்த அளவில் நாம் வடநாட்டானின், அஃதாவது நடுவணரசின் அரசியல் அடிமைகளே. நாம் அடிமைகள் ஆகமாட்டோம் என்று நினைக்கும் அளவிற்கு நமக்குள்ள உரிமைகளில் எதுவும் நமக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. அரசியல் சட்டங்களில் எவ்வளவோ பேசப்பட்டிருக்கலாம். ஆனால் அவற்றின் நடைமுறைகள்,