பாரதியாரின் சின்னச் சங்கரன் கதை/1

விக்கிமூலம் இலிருந்து

முதலாவது குட்டி அத்தியாயம் : படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை

நமது நாட்டுக் கதைகளிலே பெரும்பாலும் அடி தொடங்கிக் கதாநாயகனுடைய ஊர், பெயர், குலம், கோத்திரம், பிறப்பு, வளர்ப்பெல்லாம் கிரமமாகச் சொல்லிக் கொண்டு போவது வழக்கம்.

நவீன ஐரோப்பியக் கதைகளிலே பெரும்பகுதி அப்படியல்ல. அவர்கள் நாடகத்தைப் போல கதையை நட்ட நடுவில் தொடங்குகிறார்கள். பிறகு போகப் போக கதாநாயகனுடைய பூர்வ விருத்தாந்தங்கள் தெரிந்து கொண்டே போகும்.

எங்கேனும் ஒரு காட்டில் ஒரு குளக்கரையில் ஒரு தனி மேடையில் இவன் தனது காதலியுடன் இருப்பான். இல்லாவிட்டால், யாரேனுமொரு சிநேகிதனுடன் இருப்பான். அப்போது கதையின் ஆரம்பங்களை எடுத்து விரிப்பான். இது அவர்களுடைய வழி.

நான் இக்கதையிலே மேற்படி இரண்டு வழிகளையும் கலந்து வேலை செய்யப் போகிறேன்.

சின்ன சங்கரன் - நம்முடைய கதாநாயகன் - விருத்தாந்தங்களை மாத்திரம் பூர்வத்திலிருந்து கிரமமாகவே சொல்லிவிட்டு, கதையில் வரும் மற்றவர்கள் விஷயத்தில் கொஞ்சம் ஐரோப்பிய வழியைத் தழுவிக்கொண்டு செல்லக் கருதுகிறேன். சர்வகலாநிதியாகிய சரஸ்வதி தேவி எனது நூலில் கடைக்கண் வைத்திடுக.