விஞ்ஞானத்தின் கதை/பயணம்

விக்கிமூலம் இலிருந்து

9. பயணம்

வேளாண்மை தொடங்குவதற்கு முன் மனிதனின் இருப்பிடம் நிலையற்று இருந்ததை முன்னரே கண்டோம். பருவக் கோளாறுகளுக்கும், எதிரிகளான காட்டுவிலங்குகளுக்கும் தப்பி உயிர் வாழும் எண்ணத்தால் மனிதன் நாடோடி வாழ்க்கையை மேற்கொள்ள நேரிட்டது. வயிற்றுக்கு உணவு ஒரே இடத்தில் கிடைக்காததும் இதற்குக் காரணமாகச் சொல்லலாம். இப்படி இடம் விட்டு இடம் பெயர்ந்து பயணப்படுதல் மனித வாழ்வின் தொடக்க காலத்திலேயே நிகழ்ந்துவிட்டது.

ஆற்றோரங்களில் குடிசைகளை அமைத்துக் கொண்டு பயிர்த் தொழில் செய்து நிலையான வாழ்க்கையை மேற்கொண்ட பின்னும் தொலைவில் இருந்த நகரத்திற்குச் சென்று வரவும், சேகரித்து வைத்திருக்கும் பண்டங்களைக் கொடுத்துவிட்டு வேறு பண்டங்களைப் பெற்றுக்கொள்ளச் சந்தைக்குச் சென்று வரவும் மனிதன் பயணப்பட வேண்டியிருந்தது. அப்படிப் பயணப் படும்போது முதலில் தன்னுடன் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களைத் தானே சுமந்து சென்றான். ஆனால் பொருளின் சுமை அதிகப்பட்டபோது அதைச் சுமக்க ஒரு சில காட்டு விலங்குகளை வேட்டையாடி, அடிமைப்படுத்தித் தன் விருப்பத்திற்கு ஏற்பப் பழக்கி, தன் உதவிக்கெனப் பயன்படுத்திக் கொண்டான். தரை வழிப் பயணம் இப்படிப் பல காலம் தொடர்ந்தது.

அடுத்து நிகழ்ந்த ஓர் அரிய சாதனை மனிதனைப் பெரும் அறிஞனாக மாற்றிற்று. மரத்தின் அடிப்பகுதியை ஒழுங்குற வெட்டி அதை சக்கர உருவிற்குக் கொண்டு வந்தான். அத்தகைய இரண்டு சக்கரங்களை இணைத்து வண்டியை உருவாக்கினான். இத்தகைய சக்கர வண்டிகள் மெசபடோமியாவை நோக்கி வந்த சுமெரியர்களால் கண்டு பிடிக்கப் பட்டதெனக் கூறப்படுகிறது. இந்த வண்டியை முதலில் மனிதனே இழுத்தான். பின்பு, தான் பழக்கிய விலங்குகளால் இழுக்கச்செய்து வண்டியை ஓட்டினான். இந்த வண்டியில் எல்லாப் பொருத்துகளும் மரத்தினாலேயே செய்யப் பட்டன. அடுத்து தோல்களினால் இணைத்தான். உலோககாலம் தோன்றியபின் உலோகங்களின் பிணைப்பு வண்டியை வெகுவாக முன்னேற்றிவிட்டது; வேகமாக, பத்திரமாக ஓடச்செய்தது. எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட இத்தகைய வண்டிகளே பெரிதும் உதவின.

நாகரிகம் முழுதும் ஆற்றோரங்களிலேயே தொடங்கியதால் எல்லாவித வேலைகளும் ஆறுகளை அடுத்தே நடைபெற்றன. தரைவழியாகப் பயணப்படுவதைவிட ஆறு மூலமாகச் செல்வதே எளிதாக அமைந்தது. தரையில் ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க எப்படி தன் கால்களையே முதலில் நம்பினானோ, அதே போல ஆற்றைக் கடக்க மனிதன் முதலில் தன்கைகளின் வலுவை நம்பியே நீச்சல் அடித்தான். தன் வலுவை வீணாக்க விரும்பாத அவன் மிதக்கும் மரக்கட்டையை ஆதாரமாக்கிக் கொண்டு தண்ணீரில் ஆற்றுப் போக்கில் மிதந்தான். பல கட்டைகளை ஒன்று சேர்த்துக் கட்டி மிதப்பதால் தனக்கு வேண்டிய பொருட்களையும் தன்னுடன் எடுத்துச்செல்லலாம் என்று அறிந்து அத்தகைய கட்டு மரங்களை உருவாக்கினான்; இவற்றை முதலில் நைல் நதியில் எகிப்தியர் செலுத்தித் தங்கள் வாணிபத்தைப் பெருக்கினர். நிலத்தில் விளைந்த பொருள்கள் அடுத்த கிராமங்களுக்கு இப்படித்தான் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலைக்கு அடுத்து பெரிய மரப்பகுதி ஒன்றின் நடுப்பகுதி குழியாகச் செதுக்கப்பட்டது. ஆற்றின் போக்கில் மட்டும் செல்லாமல் குறுக்கிலும், எதிர்ப்பி லும் செல்ல எண்ணிய மனித சிந்தனையின் விளைவாகத் துடுப்புக்கள் இணைக்கப்பட்டன. ஒரு பொருள் மிதக்க என்ன நிபந்தனை என்று அறிந்ததும் மனிதன் விலங்குகளையே மிதக்கும் பொருட்களாக்கிவிட்டான். அந்த விந்தை எப்படி நிகழ்ந்தது? இறந்த விலங்குகளின் தோல் பகுதி மட்டுமே இருக்க உள்ளிருந்த மற்றப் பகுதிகள் பிரிக்கப்பட்டன. அவை இருந்த இடத்தில் காற்று அடைக்கப்பட்டது. அதிக எடை இல்லாததாலும், காற்று அடைக்கப்பட்டதாலும் ‘படகு மிதந்தது. எந்தப் படகையும் விரைவில்செலுத்த, இயற்கையை நன்கு பயன்படுத்திக் கொள்ள, காற்றைத் தேக்கும் பாய்மரம் சில காலத்திற்குப்பின் படகுகளோடு இணைக்கப்பட்டது.

கி.பி.1705-இல் தாமஸ் நியூகமன் என்பவர் நீராவியினால் இயந்திரங்களை இயக்க முயன்று வெற்றி பெற்றார். இந்த நீராவியின் சக்தியைப் படகில் பொருத்தி ஜான் ஃபிச் என்பவர் கி.பி. 1787-இல் டிலாவேர் என்னும் ஆற்றில் நீராவிப்படகைச் செலுத்தினார். ஆனால் வாணிபத் துறையில் நீராவிப் படகைப் பயன்படுத்தியவர் ராபர்ட் புல்டன் என்பவர். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வைர வியாபாரி; பிரபல ஓவியருங் கூட. இவர் பாரிசில் வசித்த காலத்தில் ராபர்ட் லிவிங்ஸ்டன் என்பவரோடு கூட்டாகச் சேர்ந்தார். இவர் அமெரிக்க அரசாங்கத்தாரால் பிரான்சில் மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இருவருமாக கி. பி. 1807-இல் நியூயார்க்கிலிருந்து ஆல்பணிவரை நீராவிப் படகினால் ஆற்றுப் பாதையில் வாணிபப் பாதையைத் தொடங்கினர்; பெருத்த லாபமும் பெற்றனர். ஆனால் முதலில் நீராவிப் படகைக் கண்டுபிடித்த ஜான் ஃபிச் வெற்றி காணாமல் மனந்தளர்ந்து விடம் உண்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்.

நீராவிக்கு அடுத்து பெட்ரோல் வழக்கிற்கு வந்தது. அதுவும் கப்பல்களில் பயன்படுத்தப் படுகிறது. தொடக்க காலத்து தனி மரக்கட்டைகள் போக்கு வரவு சாதனமாக மிதந்ததை சிந்தித்தும் பார்க்க முடியாதவாறு பெரிய பெரிய கப்பல்கள், சண்டைக் கப்பல்கள் இன்று கடலில் மிதக்கின்றன.

தரைவழிப் பயணத்தை மீண்டும் தொடர்வோம்.

நீராவியைப் பயன்படுத்தி தரையில் ஒடும் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஜார்ஜ் ஸ்டீவன்சன் ஈடுபட்டார். இவர் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுரங்கத்திலிருந்து உலைக்களத்திற்கும், ஆலைகளுக்கும் செல்வதற்கான புகைவண்டியை இவர் முதலில் அமைத்தார். இதனால் குறைந்த முயற்சியில் நிறைந்த லாபம் கிடைத்தது; நேரமும் மீதமாயிற்று. இவற்றின் விளைவாக நிலக்கரியின் விலை எழுபது சதவிகிதம் குறைந்தது. தன் முயற்சியில் வெற்றிகண்ட ஸ்டீவன்சன் மக்கள் பயணம் செய்யப் பயன்படும்படி மான்செஸ்டரிலிருந்து லிவர்ப்பூல் வரை புகை வண்டி ஒன்றை தினமும் ஒட்டினார். அங்கங்கே மக்கள் அதை வியப்புடன் கண்டு பூரிப்பினால் ஆரவாரம் செய்தனர். “ மணிக்கு மூன்று மைல் பயணம் செய்த மனிதன் எங்கே, பதினைந்து மைல் பயணம் செய்யும் நாம் எங்கே!" என்ற மகிழ்ச்சி அவர்களது குரலில் பின்னணியாக அமைந்தது. அதன்பின் பன்னிரண்டு ஆண்டுகளில் அந்தப் புகைவண்டியின் வேகம் மணிக்கு இருபது மைல் ஆயிற்று. இன்று உலகெங்கிலும் ரயில் தண்டவாளங்கள் வளையமிடுகின்றன. கப்பல்கள் கடல்களை வளையமிடுகின்றன. இவை இரண்டும் உலகைச் சுறுசுறுப்பாக சுழல வைக்கின்றன.

பறவைகளைப்போல் பறக்கவேண்டும் என்று மனிதனுக்கு நெடுங்காலமாக ஆசை. வழிவழி வந்திருக்கும் தேவதைக் கதைகளால் இதை நாம் உணரலாம். அந்த ஆசை கற்பனையோடு நின்றுவிடாமல் செயலிலும் உருவாயிற்று.

மனிதன் முதலில் காற்றைவிட எடைக்குறைவான ஹைட்ரஜன் வாயுவை பெரிய அளவு பலூன்களில் அடைத்து அவற்றோடு பறக்க அவன் கற்றுக்கொண டான்.சுமார் நூற்றைம்பது ஆண்டுகள்வரை இம்முறை வழக்கில் இருந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியானார்டோ டா-வின்சி வானத்தில் பறக்கும் முயற்சியைத் தொடங்கி வைத்தார். அவருக்குப் பின் சிறிது இடைக்காலம் விட்டு இரசவாதிகளான கேய்லி, ஜான் டாமியன், லாங்லி முதலியோர் இத்துறையில் ஈடுபட்டு உழைத்தார்கள். லாங்லி இதில் ஓரளவு வெற்றி கண்டார் என்று சொல்லலாம். நீராவி என்ஜின் பழக்கத்திற்கு வந்தபின் அதன் இணைப்பால் லாங்லி விமானம் ஒன்றை உருவாக்கி தரையிலிருந்து அரை மைல் தொலைவில் பறந்தார். ஆனால் அதற்குமேல் வெற்றிகாண அவரால் இயலவில்லை. கி. பி. 1896-இல் லிலியேந்தல் என்பவர் தன் விமானத்தில் பறந்தபோது பரிதாபமாகக் கொல்லப்பட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வானில் பறக்கும் முயற்சி முழு வெற்றிகண்டது. இன்று மனிதன் கவலையில்லாமல் வானத்தில் பறக்கக் காரணமாயிருந்தவர்கள் இருவர். அவர்கள் ரைட் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்பவர் ஆவர். இன்று அநேக நவீன வசதிகளுடன் விமானம் பறந்து சென்று கொண்டிருக்கிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் விளைவாக ஜெட் விமானங்களும், ராக்கெட்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை மணிக்கு ஆயிரம் மைல்கள் வீதம் பறக்கின்றன. விமானங்களின் மூலமாக வானத்துக் கோள்களிடையே மனிதன் பயணம் செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை.

மனிதன் பயண வேகம் அதிகப்பட்டால் மட்டும் போதுமா? பயணத்தின்போது வசதி வேண்டுமல்லவா? இத்துறையும் அவ்வப்போது சீர்திருத்தப்படுகின்றது. ஆகாயவிமானம் குறுகிய நிலப் பரப்புக்குள் இறங்கவோ ஏறவோ முடியாது. இக்குறைகளை ஈடு செய்ய ஹெலிகாப்டர் என்னும் புதிய விமானம் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது வானத்தில் நிலையாக நிற்கும்; வீட்டு மொட்டைமாடியில் இறங்கும். வானத்தில் நிற்கும்போது இறக்கப்படும் கயிற்றேணிகள் மூலமாக பிரயாணிகள் ஏறவோ இறங்கவோ முடியும். நிலத்தில் சாகுபடி செய்யவும், கலகங்களையும் போக்குவரத்தையும் போலீசார் கட்டுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக உள்ளது. இதை வானத்தில் பறக்கும் மோட்டார் கார் என்று கொள்ளலாம்.

ஓ! இன்னும் மோட்டார் காரைப்பற்றி நாம் பேசிக் கொள்ளவில்லையா? அதைப்பற்றி இப்போது கவனிப்போம்.

மோட்டார்கார் உருவாவதற்கான முயற்சிக்கு சற்றேறக்குறைய கி. பி. 1862-இல் ரோச்சாஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி வித்திட்டார். அதற்குப் பின் லினாய்ரா, ஒட்டோ, டீஸல் முதலியவர்கள் அவ்வப்போது மோட்டார்காரில் சீர்திருத்தம் செய்தார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஃபோர்டு என்பவர்தான் மக்களுக்கு வசதியான மோட்டார் காரை வனைந்தார்; அவருடைய காலத்திற்கு முன் மோட்டார் கார் என்பது மிகப் பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாயிருந்தது. அப்படி வாங்கினாலும் வீண் ஆடம்பரத்திற்காகவும், ஒட்டப் பந்தயங்களுக்காகவும் பயன் படுத்தப்பட்டன. தம் வீட்டுப் புழக்கடையில் பொழுது போக்குக்காகத் தொடங்கிய மோட்டார்த் தொழிலில் ஹென்றி ஃபோர்டு பெருத்த இலாபம் கண்டார். இன்று அமெரிக்காவில் ஐந்து கோடிக் குடும்பங்கள் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமான கார்களோ ஐந்து கோடிக்கும் அதிகம். இதை ஏன் குறிப்பிடுகிருேம்? எல்லோரும் வாங்கும்படியாக எளிய விலையில் கார்களைத் தயாரிக்க அன்று அவர் ஈடுபட்டார். அவருடைய கனவு சிறிது சிறிதாக நனவாகிக்கொண்டு வருகிறது.

வண்டிகள் சீர்திருத்தப் படுவது போலவே அவை செல்லும் பாதைகள் சீர்திருத்தப் படுமானால் பயணத்தின் வேகம் அதிகரிக்குமல்லவா? ஸ்காட் நாட்டைச் சேர்ந்த மாக்கடம் என்பவர் பாதையைச் செம்மைப் படுத்தும் துறையில் வேலை செய்து சரளைக் கற்களினால் நல்ல தொரு புதுப் பாதையை அமைத்தார். அதற்குப் பின் கான்க்ரீட் பாதைகளும், தார் பூசப்பட்ட பாதைகளும் உருவாகியிருக்கின்றன. சில இடங்களில் ரப்பர் இணைத்த பாதைகள் கூட உருவாக்கப்பட்டிருக்கின்றன. வண்டிகளை வேகமாகச் செலுத்த கி.பி. 1887-இல் டன்லப் என்பவர் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார். வண்டிகளின் சக்கரங்களை, கெட்டியான ரப்பரால் உருவாக்காமல் காற்றடைத்த ரப்பர் ‘டயர்’களைச் சக்கரங்களுடன் பொருத்தினார்.

முன்னேற்றப் பாதையைக் குறிப்பிடும்போது நாம் சைக்கிளை மறந்து விடுவதற்கில்லை. இது அண்மையில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. கி. பி. 1816-இல் பிரஞ்சுக்காரர் ஒருவரால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில் உள்ளதைப் போன்று அன்று சைக்கிள் இருக்கவில்லை. அன்று சைக்கிளில் 'ஏறிச்' செல்ல முடியாது; 'தள்ளிச்' செல்ல வேண்டும். பொருட்களைச் சுமப்பதற்காக இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். கி.பி. 1840-இல் காலடிகள் இணைக்கப்பட்டன. (Pedals) (முன் சக்கரத்தோடு) முன் சக்கரம் பெரிதாகவும் பின் சக்கரம் சிறிதாகவும் அமைந்திருந்தன. இத்தகைய சைக்கிளில் இன்னொரு விந்தை என்ன வென்றால் சைக்கிளை ஓட்டினாலோ நிறுத்தினாலோ சிறிய சக்கரம் பெரியதை அநுசரித்து இருப்பதில்லை. தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு ஓடும்; நிற்கும். சக்கரங்களின் ஒத்துழைப்பு இல்லையேல் சவாரி செய்பவர் கீழே விழவேண்டியதைத் தவிர வேறு வழி! எனவே அந்நாளில் சைக்கிள் வைத்திருந்த ஒவ்வொருவரும் திறமை படைத்க சர்க்கஸ்காரர்களே! கி.பி. 1867-இல் தான் லாசன் என்ற ஆங்கிலேயர் சைக்கிளை இப்போதுள்ள உருவுக்குக் கொண்டு வந்தார். ஆனால் சக்கரங்கள் கெட்டியான ரப்பரால் ஆனவை. காற்றடைத்து ஓட்டும் புதுமையை டன்லப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

இன்று அச்சத்தினாலோ, பொருள் தேடும் ஆசையினாலோ மனிதன் பயணத்தைக் கைக்கொள்ளவில்லை. அறிவைப் பெற மனிதன் எவ்வித இன்னலுக்கு உள்ளாகவும் தயாராக இருக்கிறான். அறிவுத்தாகம் பெருகப் பெருக உள்ளம் விம்மும். மனிதன் மேலும் மேலும் அனுபவங்களைப் பெற்று, அறிவிலே தெளிவைப் பெறுகிறான். ஒரே இடத்தில் எல்லா அனுபவங்களும்-எல்லா அறிவும் கிடைப்பதில்லை. எனவே அறிவைத் தேடியும் மனிதன் இடம் விட்டு இடம் பயணம் செல்லுதல் இன்று முக்கிய மாகிறது.


—————

"https://ta.wikisource.org/w/index.php?title=விஞ்ஞானத்தின்_கதை/பயணம்&oldid=1553340" இலிருந்து மீள்விக்கப்பட்டது