பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி அவ்வளவு துணிவாகப் பேசுகிறீர்கள்?" என்று கேட்பார்கள். ஆகவே தான் கூறுகிறேன், இந்த நாட்டில் அவர் சாதித்த சாதனை மிகப்பெரியது.

அவர் அழைத்தால் வாராத தமிழ் மக்களில்லை. அவர் கூப்பிட்ட குரலுக்கு வாராத இளைஞர்களில்லை. இன்று பெரியார் அவர்களின் முகத்திலே தெரிகின்ற உற்சாகமும், கனிவும் நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்ற எழுச்சியும் வாழ்க்கையிலே என்றோ ஒரு நாள் தான் வரும்.

அவர் பல்லாண்டு வாழ வேண்டும். நாம் அவரை மறக்கின்ற நேரத்தில் நமக்கு ஒரு தளர்ச்சி ஏற்படுவதையும் அவரை நினைக்கின்ற நேரத்தில் ஏதோ ஒரு ஊக்கம் பிறப்பதையும் காண்கிறோம். அவரை நினைக்காத வணிகப் பெருமக்களில்லை; தமிழ்ப் புலவர்களில்லை.

அனைவரும் அவரது பிள்ளைகள்

அவருடைய பிள்ளைகள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கின்ற பிள்ளைகளில் எந்தப் பிள்ளையும் சோடையில்லை.

30 வருடங்களுக்கு முன் பேசப் பயந்தவைகளை இன்று 8 வயதுச் சிறுவன் பேசிடவும் 20 வருடத்திற்கு முன் பயத்தை மூட்டி வந்தவைகள் இன்று கேலிக்குரியவைகளாக மாறியதற்கும் பெரியார் காரணமாவார்.

இதற்கெல்லாம் அடிப்படை அமைத்திட பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. இன்று போல் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரித்து மாலைகள் போட்டு வரவேற்பதில்லை. அன்றெல்லாம் செருப்புத் தோரணங்களைக் கட்டியால்லவா எதிர்ப்புக்காட்டினார்கள்? அதையெல்லாம் தாங்கிக்கொள்கின்ற மனப்பக்குவம் பெற்றதினால் தான் இன்றைக்கு ஒரு மறுமலர்ச்சியைக் காணமுடிகிறது.