பக்கம்:உயிரில் கலந்தது.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நடந்தார். இப்படியாக ஜோடி சேர்ந்து நடந்தவாறே நாட்கள் சிலவற்றையும் நடக்கச் செய்தார். வெளியூர்ப்பயணம் சித்தித்த இந்த நாட்களிலே அவர் தமக்குத் துணையாக வாணியையும் வாணிக்குத் துணையாக அவளது அந்த டைரியையும் பாவித்த நிலையில்தான் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கின்றது.

அந்த நாட்குறிப்பு கண்களில் பட்டதுதான் தாமதம். உடனே குபுக்கென்று சுடுநீர் பொங்கித் திரள ஆரம்பித்தது இன்பமும் துன்பமுமான எண்ணங்களைச் சதா நோக்கிக் கொண்டிருந்த காரணத்தினல் சூடு பிடித்திருந்த அவரது மனம் எம்பி எம்பி அடங்கியது. அந்த நாட்குறிப்பு தன் பைக்குள் ஏன் வந்தது, எப்போது வந்தது என்பதற்குரிய ஆராய்ச்சி நடத்தக் கூடிய திடத்தில் அவர் இருக்கவில்லை. ஒவ்வொரு நடப்புக்கும் ஒவ்வொரு உள்ளர்த்தம் இருக்கத் தான் இருக்கும் என்னும் படியான உள்ளளுந்திய நினைவை இப்போதும் அவர் நினைத்துப் பார்த்துவிட்டு, சும்மா இருக்க ஒப்பவில்லை. வாணியிடம் அதுபற்றிக் கேட்கவேண்டும் என்று தான் எண்ணித் துணிந்தார். காலத்தையும் நேரத்தையும் ‘வா, வா வென்று கூவி அழைக்கும் வானம்பாடியாக உருமாறினார் அவர்.

அப்பொழுதும் அவருக்கு அந்த நாட்குறிப்புத்தான் நினைவைத் தொட்டது.

ஏடு ஒன்று:

“...தெய்வத்தை நான் கண்டது கிடையாது. அதனால் என்ன? எனக்குத் தெய்வமாக விளங்குவதற்கு ஒரு ஐயா கிடைத்திருக்கிறார், இது போதாதா?”

ஏடு நாலு:

“...ஸ்ரீமான் கோதண்டபாணி அவர்கள் என் பேரில் எவ்வளவு தூரம் பாசம் வைத்திருக்கிறார்கள். இது பூஜா பலன் அல்லாது வேறு யாது?...பூஜா பலனாவது, ஒன்றாவது? அதையெல்லாம் நான் என்ன கண்டேன்?”