பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை என்பது என்ன?

37


மற்றும் வேதாந்த கருத்துக்களுக்குத் திருப்புகழ், தாயுமானார் என்ன, இவைகள் எல்லாம் இன்னிசைப் பாடல்கள். இன்னும் கிறிஸ்தவம், இஸ்லாமியம் கூடப் பாடலால் மக்கள் உள்ளத்தைக் கவரும் நோக்கம் உடையவை.

பாட்டுக்கு மகிழ்வதென்பது, உயிரின் இயற்கை என்று கூடச் சொல்லலாம். மனிதனின் இயல்பான நிலை தவிரச் சிறிது மகிழ்ச்சி உண்டானால், அவன் பாட அல்லவா தொடங்கி விடுகிறான். ஏணைக் குழந்தை பாட்டை விரும்புகிறதென்றால், பாட்டில் உள்ள பாசத்தன்மை பற்றிக் கூறவா வேண்டும்?

உடல் நலியப் பாடுபடுகிறவர்களும் பாடுகிறார்கள். உழுபவன் பாடுகிறான். ஏற்றம் இரைப்பவன் பாடுகிறான். இவ்விடத்தில் மற்றோர் உண்மை நமக்கு விளங்குகிறது. பாட்டானது மனிதனுக்கு இன்பந்தருவது மட்டிலும் அல்லாமல், அது இருக்கும் துன்பத்தையும் நீக்கக்கூடியது. சேற்றில் முள் தைப்பது கூடத் தெரிய வில்லை உழவுப் பாடகனுக்கு.

பாட்டின் உபயோகத்தைச் சொல்ல வேண்டுமானால், நன்றாக அமைந்த பாடல் தன் கருத்துப்படி மனிதனைத் திருப்புகிறது. இதுதான் பாட்டினிடத்தில் உள்ள குறிப்பிடத்தக்க மேன்மை.


கவிஞர் பேசுகிறார்