பக்கம்:தமிழரின் மறுமலர்ச்சி, அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சி. என். அண்ணாதுரை



பலமுள்ளதாயிற்று. பிரிட்டனிலே, கவிகள், எழுத்தோவியங்களை ஏற்படுத்திக்கொண்ட நேரத்திலே தான், பிரிட்டிஷ் கப்பல்கள், திரைகடல்களைக் கடந்து சென்றன. மக்கள் தீரச் செயல்கள் புரிந்தனர். பழங்காலம் என்பது எல்லாத் துறைகளிலும் மடிந்தது; எழுதுவது புது முறையில்; பேசுவது புதுவிதமாக; இலக்கியம் புதுவிதமானது என்ற நிலைமை ஏற்பட்டது.

எதிர்ப்பு மடியும்

ஐரோப்பாக் கண்டத்திலே, அறிவுலகமும் வீரர் உலகமும் அமளியில் ஈடுபடும் விதமான, புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேர், ரூசோ, மார்ட்டின் லூதர் போன்றவர்கள் இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தின் உழவர்கள்! அவர்களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது! இறந்தது! இங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கிறோம். இதற்கு எதிர்ப்பு காண்கிறோம். அந்த எதிர்ப்பு இறுதியில் மடியத்தான் போகிறது. கடல் அலையை, கைத்தடி கொண்டு அடிக்க முயலுவோனின் கை சலிக்குமேயொழிய, அலை சலிக்காது.

ஆனால், மற்றைய நாடுகளிலே நடந்ததற்கும் இங்கு நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்கெல்லாம் மறுமலர்ச்சியை எதிர்த்தவர்கள், வெறும் பழமை விரும்பிகள் மட்டுமல்ல; இன்று இருக்கும் முறையினால், ஆதிக்கம் செலுத்தி வாழும் கூட்டத்தினர். மறுமலர்ச்சி, பழமையைப் பாழாக்குமோ என்பது அல்ல அவர்களின் பயம். நமது ஆதிக்கம் போய்விடுமோ என்பதே அவர்களின் திகில். எனவேதான் இங்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது; இந்தக் கடுமையைப் பொருட்படுத்தாமல், புதிய எழுச்சிக்காகப் போரிடும் முன்னணிப் படையினர், தேசத் துரோகி, வகுப்புவாதி என்று ஏசப்பட்டுத் தூற்றப்பட்டு வருகின்றனர். ஆனால்