பக்கம்:புது மெருகு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றுகை

39

"பாவம்! இந்தப் பெரிய மலை இரங்கத்தக்கது; வேலால் இதை வெல்லுதல் அரசர்களால் சாத்தியம் இல்லை. ஆனால் நீலோற்பலம் போன்ற மையுண்ட கண்களைக் கொண்ட நாட்டியப் பெண் கிணைப்பறையைத் தட்டிப் பாடிக்கொண்டு வந்தால் அவள் சுலபமாக இதனைப் பெறலாம்" என்று மட்டும் எழுதியிருந்தார்.

"இனி மேல் மீசையைச் சிரைத்துவிட்டு மஞ்சள் பூசி வளையல் அணிந்து விறலி வே ஷம் போட்டுக்கொண்டு வாருங்கள்! ஆண் பிள்ளைத் தனம் வேண்டாம்" என்று காறித் துப்பினாற் கூட அவ்வளவு காரம் இராது. அதே கருத்தைக் குளிர்ச்சியாகக் கொல்லும் விஷத்தைப் போல அந்தப் பாட்டு வெளிப்படுத்தியது.

பாண்டியன் கவிதையைப் படித்தான்; சோழன் அதன் கருத்தை உணர்ந்தான்; சேரன் பாரியின் பெருமையை ஓர்ந்தான். ‘இனி இந்த முயற்சியினால் பயன் இல்லை' என்று ஒவ்வொருவரும் எண்ணினர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலங்க மலங்க விழித்தனர். எல்லோர் கருத்தும் ஒன்றே என்பது தெளிவாயிற்று. " சரி, இவ்வளவு காலம் இங்கே காவல் புரிந்த நம் படைகளுக்கு வேறு போர்க்களத்தை உண்டாக்கிக் கொடுப்போம்" யாவரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகலாம்" என்று மூன்று அரசர்களும் ஒரே குரலில் உத்தரவிட்டனர்.

பறம்புமலை காலை யிளஞ் சுடரோன்முன் பொன்மலை போலப் பொலிந்து நிமிர்ந்து நின்றது; பாரியின் புகழ்போல வானை யளாவ ஓங்கி நின்றது. அன்று மீட்டும் பறம்புமலை இறைவன் கோயிலில் சிறப்பான பூசை நடந்தது. நாட்டிலிருந்து உணவு வர இப்போது தடையொன்றும் இல்லை.நெல்லும் வெல்லமும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/34&oldid=1548630" இலிருந்து மீள்விக்கப்பட்டது