பக்கம்:புது மெருகு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

புது மெருகு

"இல்லை தம்பி; உண்மையைச் சொல்லிவிடு. எதற்காக நீ வேலை செய்யவேணும்? எங்கள் வீட்டுக்கு வா; சோறு போடுகிறோம்."

கம்பருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. "நான் யார் வீட்டிலும் உண்பதில்லை. என் கையால் சமைத்துத்தான் உண்பது வழக்கம். கூலிக்கு வேலை இருந்தால் சொல்லுங்கள். அதுவே எனக்குச் சோறு போட்டதற்குச் சமானம்" என்றார்.

மேலே சம்பாஷணை வளர்ந்தது. வேலைக்காரனுக்கு ஏற்றபடி பேசத் தெரியாதா கம்பருக்கு? கடைசியில் அந்த மனிதன், "அதோ ஊர் ஓரத்தில் வேலி என்ற தாசி வீடு இருக்கிறது. அவள் வீட்டுப் புறக்கடையில் ஏதோ ஒரு சுவர் இடிந்திருக்கிறதாம். ஒருவேளை வேலை செய்தால் அதை அடைத்துவிடலாம்" என்று சொல்லிப் போய்விட்டான்.

கம்பர் வேலியின் வீட்டிற்குப் போனார். அவளிடம் சுவர் வைக்க இவ்வளவு நெல் என்று பேசிக்கொண்டார். அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவில்லை. அவள் வீட்டிலே மண் வெட்டி, குடம் எல்லாம் வாங்கிக் கொண்டார். வேலையில் முனைந்துவிட்டார்.

மண்ணை வெட்டிக் குழைத்தார்; துவைத்தார். சுவர் வைக்க ஆரம்பித்தார். சொல்லையும் பொருளையும் குழைத்து மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டத் தெரியுமே அன்றி மண்ணைக் குழைக்கும் வேலை அவருக்கு எப்படித் தெரியும்? அதிகமாகத் தண்ணீரைக் கொட்டிவிடுவார். அதனால், மண்ணை எடுத்துச் சுவர் மேல் வைத்தால் அது வழிந்துவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/91&oldid=1549355" இலிருந்து மீள்விக்கப்பட்டது