வளர்ப்பு மகள்/ஆய்வேடு காட்டும் வளர்ப்பு மகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆய்வேடு காட்டும்
வளர்ப்பு மகள்

பெற்ற மனத்தின் தன்மை இந்த நாவலின் கதைக்கரு. இதில் பெண்களின் உரிமை, எழுச்சி விளக்கப்படுகிறது. நாவல்களில் நல்லனவற்றையே சித்தரித்துக் காட்டும் இயல்பு உள்ளது. தீயனவற்றையும், தீமையையும் காட்ட வேண்டியதுதான். ஆனால், காட்டப்படும் தீமை அறுவருக்கத்தக்கதாக இருக்கவேண்டும். தீமை தோன்றும் இடங்களில் எல்லாம் அதைக் கையாளும் முறையிலிருந்து அதனிடம் வெறுப்புக் கொள்ளவேண்டும். அதன் அற்பத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு நிந்தையான எண்ணம் உதயமாக வேண்டும். ஏனெனில், "தீமையை ஆதரிப்பது போல் காட்டினால் அதையாரும் கண்டு அஞ்சமாட்டார்கள்" என்று வேதநாயகம் பிள்ளை கூறுவார். சமுத்திரம் இந்த நாவலில் நன்மை - தீமை இரண்டையும் காட்டி மக்களுக்குத் தெளிவு ஏற்படும்படி செய்துள்ளார்.

கதைப்பின்னல் இயற்கையாக அமைதல் வேண்டும். ஆசிரியர் பாடுபட்டு வலிந்து அமைப்பதாக இருத்தல் ஆகாது. நடக்கக் கூடியதே என்று நம்பத்தக்க வகையில் இயல்பாக அமையும் கதைப் பின்னலே கதைக்குக் கவர்ச்சி தருவதாகும். அதற்கு உணர்ச்சியூட்டிச் சிறப்பித்தல் கதாயாசிரியரின் திறனே ஆகும். உணர்ச்சி, அனுபவம் மிக்க ஆசிரியர் உணர்ந்து தேர்ந்த கதைப்பின்னல் சிறப்புடையதாக விளங்கும். இச்சிறப்பு இல்லையானால், எவ்வளவு சிறந்த வாழ்க்கைப் பகுதி கதையில் அமைந்தாலும் பயன் விளையாது.

"கதையின் போக்குக்கு இன்றிமையாத நிகழ்ச்சிகளை இணைத்து அந்நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அமையும்படிச் செய்வது என்பது நாவலாசிரியரது கடமை. இந்த நிகழ்ச்சிகள் இன்றியமையாதவை என்ற உணர்வு உண்டாகும்படி அவற்றை அமைக்கவேண்டும். இதை எடுத்துவிட்டாலும் கதையின் போக்குக்கோ பாத்திரங்களின் குணசித்திரத்துக்கோ வேறுபாடு ஏதும் இல்லை என்று எண்ணும் வகையில் ஏதேனும் திகழ்ச்சி இருந்தால், அது நாவலின் செறிவைக் கெடுத்து விடும்.

தாமஸ் ஹார்டியின் கலைத்திறனைப் பற்றி பிரடெரிக் ஆர். கார்ல் என்பார், ‘ஹார்டியின் கலைத்திறன் அழகிய முறையில் செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் இதயத்தையும் உட்பொருளையும் உயிரோவியமாகத் தீட்டுவதே ஆகும்’ என்று கூறுவார்.

கதைப் பின்னல்

சு. சமுத்திரத்தின் ‘வளர்ப்பு மகளில்’ இத்தகைய கலைத் திறனைக் காண்கிறோம். மனித மனத்தின் தன்மைகளைத் தெளிவாகக் காட்டும் வண்ணம் கதைப்பின்னல் அமைந்துள்ளது முந்தைய நாவல்களில் பெற்ற அனுபவத்தை இதில் காண்கிறோம்

ஒரு பெண் தனது தாய்ப் பாசத்திற்கும் கடமையுணர்வுக்கும் இடையே தடுமாறுகிறாள். இரண்டுக்கும் நடுவில் ஒருவழியைப் பின்பற்றி வாழ்க்கையில் நிறைவு பெறுகிறாள். படிப்பவர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்தி விடுகின்றார் ஆசிரியர். கதைப் பின்னலின் ஒரு முக்கிய பகுதியான இதனை, ஆசிரியர் மிகத் திறமையோடு படைத்திருக்கிறார்.

‘வளர்ப்பு மகளில்’ கதைப்பின்னல் எளிமையானதாக - இயற்கையானதாக அமைந்துள்ளது. கருத்துவேறுபாட்டால் மல்லிகா தன் வளர்ப்புத் தந்தையை விட்டுப் பிரிவதும், பின்னர் சூழ்ச்சி செய்தவர்கள் சூரியனைக் கண்டு நீங்கும். காரிருள் போல் நீங்க, மல்லிகா மீண்டும் தன் வளர்ப்புத் தந்தையோடு சேர்ந்து கொள்கிறாள்.

இவ்விதமாகத்தான் கதையின் முடிவு அமைய வேண்டி உள்ளது. வேறு முறையில் அமைவதற்கு வழியில்லை என்று படிப்பவர்கள் நினைக்கும்படி கதையின் முடிவு அமையவேண்டும். கதை மாந்தர்களின் செயல்கள் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரையில் இயற்கைக்கு விரோதமாக இராமல், இயல்பானதாக மனம் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. கருது பொருளை மையமாக வைத்து சுவையாக கதைப்பின்னலை அமைத்துள்ளார்.

பாத்திரப் படைப்பு

கதை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து எழுதப் பெறும் நாவல்கள் பல, வாழும் இயல்பை இழந்து விடுகின்றன. நாவலைப் படிப்பவர்கள் சில காலத்திற்குப் பிறகு மறந்து விடுவர். பாத்திரப் படைப்பிற்கு முதலிடம் தந்து எழுதப்பெறும் நாவல்கள் உயர்ந்த இலக்கியமாகப் போற்றப்படுகின்றன. அந்த நாவல்களில் வரும் கதைமாந்தர்கள் நம் நெஞ்சை விட்டு நீங்கா இயல்பினராக மாறிவிடுகின்றனர். கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமியையோ, பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி வந்தியத் தேவனையோ நாம் மறக்க முடிவதில்லை. இதற்குக் காரணம் அந்த நாவலைப் படைத்த ஆசிரியரின் படைப்பாண்மைத் திறமையாகும்.

சமுத்திரத்திற்கு இந்த வித்தை நன்கு கைவரப் பெற்றிருக்கிறது. பெண்களின் உயர்ந்த உணர்ச்சிகளை நுட்பமாக தெளிவாக, நல்ல அழகு தமிழில் வெளியிடுகிறார். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை போன்றது இத்தகைய ஆற்றல். ‘கீட்ஸ்’ இதற்கு Filling some other's body என்று பெயரிடுவார். சு. சமுத்திரத்திற்கு இந்த ஆற்றல் அரிய திறனாகும். பெண்ணுள்ளத்து வேதனைகளையும், சிக்கல்களையும் சித்தரித்துள்ள முறையினையும், சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் வாழும் பெண்களைப் பற்றியும் இந்நாவலில் அறிந்துக் கொள்கிறோம்.

மொழிநடை

இலக்கிய ஆராய்ச்சியில் எழுத்தாளர் மொழிநடையை ஆராய்வதற்கே நிறைந்த புலமைத் தேவைப்படுகிறது. ஒருவர் பாடும்போது, அவர் குரலைக் கொண்டு அவர் இன்னார் என்று கண்டுபிடித்து விடுவதுபோல, எழுத்தாளரின் எழுத்தைப் படித்த அளவிலேயே இது இன்னாருடைய நடை என்று சொல்லிவிடலாம். எல்லோருமே மொழியைப் பயன்படுத்தினாலும் படைப்பிலக்கிய ஆசிரியர் மொழியை தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதற்கு ஏற்ற வாயிலாகக் கொண்டு தன் போக்கிற்கு ஏற்ப அமைப்பதை மொழிநடை என்கிறோம்.

சு. சமுத்திரத்தின் மொழிநடையிலே தமிழின் ஆற்றல் மிகுதியாகக் காண முடிகிறது. படிப்போரை ஈர்க்கும் வேகம் நடையிலேயே காணலாம். இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தியைக் காணலாம் உணர்ச்சிக்கேற்ற நடையையும் அமைத்துள்ளார்.

"சு, சமுத்திரம் அவர்கள் சொற்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்."

"அந்தக் குழந்தை 'அம்மா அம்மா' என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது. அவள் இதயத்தைத் தொட்டது."

"பாசத்தைக் கொட்டிக் கொண்டே அவள் தன்னையும் ‘கொட்டுவதை’ உணர்ந்தாள் மல்லிகா."

"அந்த நல்ல ராமனைக் கட்டியே, சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மகள் கட்டினால் அட பகவனே..."

"இந்த மூதாட்டி யின் பெயர்... பெயர் எதற்கு? அவளே பெயரைப் பற்றிக் கவலைப் படாதபோது?"

வர்ணனை

பெண்களை வர்ணிப்பதில் ஆசிரியரின் தனிச்சிறப்பைக் காணலாம். அவ்வகையில் சேக்கிழாரின் மனோநிலை ஆசிரியரிடம் அமைந்துள்ளது எனலாம். சேக்கிழார் தமது காவியத்துள் பெண்களைப் பற்றியும், காதலைப் பற்றியும் வருணிக்கும் இடங்களில், மிகத்தூய்மையான எண்ணம் தோன்றும்படி வருணித்துள்ளார். பரவையார் வருணனை, பரவையார் - சுந்தரர் காதல் - இவ்விடங்களில் சிறிதும் கீழ்த்தர உணர்ச்சி தோன்றா வகையில் வருணித்துள்ள சிறப்பியல்பைப் போன்று, சு. சமுத்திரம் களங்கமில்லாத எண்ணம் தோன்றும்படி பெண்களை வர்ணித்து உள்ளார்.

சு. சமுத்திரம் வெறும் பொழுது போக்கிற்காக மலிவான சுவையைத் தரும் கதைகளைப் படைக்காமல் மனித வாழ்க்கைககு எந்தக் காலத்திற்கும் பொதுவான, அடிப்படையான உணர்ச்சிகளையும், பண்புகளையும் விளக்கி கதைகளைப் படைப்பதால் அவருடைய நாவல்கள் என்றுமே வாழும் இயல்பைப் பெறுகின்றன. சமுதாயம் சீர்திருந்தி, அமைதியான வாழ்க்கை எல்லோர்க்கும் கிடைக்கும்படியாய்ச் செய்வதே அவருடைய எண்ணமாதலால் சமுதாயம் உள்ளவரையும் அவருடைய நாவலும் வாழும்.

வை. சதாசிவம் எழுதிய
"சு. சமுத்திர நாவல்கள் ஒரு ஆய்வு"

(ஜூலை 1980)