வளர்ப்பு மகள்/முதலுரை

விக்கிமூலம் இலிருந்து

முதலுரை

1979-ம் ஆண்டு ராணிமுத்துவில் மாத நாவலாக வெளியாகி 1980-ம் ஆண்டு முதல் ஐந்து பதிப்புகளைக் கொண்ட 'வளர்ப்பு மகள்' நாவலையும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'வாசுகி' பத்திரிகையின் பொங்கல் இதழில் வெளியான 'இந்திரமயம்' என்ற குறுநாவலையும் உள்ளடக்கியது இந்த நூல். பல பதிப்புகளைக் கண்ட வளர்ப்பு மகளுக்கு நான் முன்னுரை எழுதியதே இல்லை. இப்போது இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுவதோடு, அதே சாக்கில் இந்திரமயக் குறுநாவலின் பின்னணியைப் பற்றியும் குறிப்பிடுகிறேன்.

மலரும் நினைவுகள்

எனக்கு இன்னும் நன்றாகவே நினைவிருக்கிறது. 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் எனது குடும்பத்தினருடன் பழனி செல்வதற்காக திண்டுக்கல்லை நோக்கி ரயிலில் பிரயாணித்தேன் - பகல் வேளை, அப்போதுதான் ராணி முத்து நாவலாக வெளியான ‘வளர்ப்பு மகள்’ நாவலை சிலர் கையில் வைத்திருந்தார்கள். சிலர், தள்ளுவண்டியில் இருந்து வாங்கிக் கொண்டார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அது நீடிக்கவில்லை. மாத நாவல் வாசகர்கள், எப்படி தத்தம் புத்தகங்களில் ஒன்றிப் போய்விடுவார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த நாவலை வாங்கியவர்கள் ஒரு சில பக்கங்களைப் படித்துவிட்டு முகஞ்சுளித்தபடியே மூடி விட்டார்கள். ஏற்கனவே கையில் வைத்திருந்தவர்களோ, அதை விசிறியாகவும், தலையணையாகவும் பயன்படுத்தியதைக் கண்கள் எரியப் பார்த்தேன். நான்தான் அந்த எழுத்தாளர் என்று அவர்களிடம் சொல்லப்போன வாயை மூடிக்கொண்டேன். என் மனைவியும், குழந்தைகளும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். இந்தப் பின்னணியில் ராணி முத்து நிர்வாகம் என்னிடம் மேற்கொண்டு மாத நாவல் கேட்காததை வருத்தமில்லாமல் புரிந்து கொண்டேன்.

இந்தச் சூழலில் ஓரிரு ஆண்டுகளில், இந்த நாவல் டில்லிப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கும், மத்திய அரசுப் பள்ளிகளில் பன்னிரெண்டாவது வகுப்பிற்கும் பாடநூலாய் வைத்திருப்பதாக தமிழனின் கூனை கவிதைகளால் நிமிர்த்த முயன்ற பேராசிரியர் சாலய் இளந்திரையன் அவர்கள் என்னிடம் தெரிவித்தார். காலமான அந்தப் போராளிக் கவிஞரை இப்போதும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். காரணம், எனது படைப்புகள், பல பாடநூல்களாக வைக்கப்பட்டாலும், இந்த ‘வளர்ப்புமகள்’ தான் முதலாவது பாடநூல். பேராசிரியர் சாலய் இளந்திரையன் அவர்கள் நக்கீரக் குணம் கொண்டவர். இந்த நாவலில் அவர் எதிர்பார்க்கும் தரமும், உரமும், நோக்கும், போக்கும் இல்லாதிருந்தால், நிச்சயம் இந்தப் படைப்பைப் பாடநூலாக்க முன்மொழிந்திருக்கமாட்டார் என்பதை நினைத்ததும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கியது.

படைப்பும் - படைப்பாளியும்

ஒரு படைப்பாளி தன்னையும் சேர்த்துத்தான் படைப்பை உருவாக்குகிறான். நானும் முப்பது குடித்தனங்களுக்கு ஒண்ணே ‘ஒண்னு கண்ணே கண்ணாக’ இருந்த கதவில்லாத கழிப்பறைக்குள் ‘ஆளிருக்கா’ என்று கேட்டுக்கொண்டே போவதும், குழாயடியில் என் சாண் உடம்பை ஒரு சாணாய் குறுக்கியபடியே குளித்ததும், வீட்டுக்குள் மூட்டைப் பூச்சி, வெளியே கொசுக்கடி என்று இரவில் துரங்கமுடியாமல் அல்லாடியதையும், இப்போது கூட நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்த இன்ப துன்ப அனுபவம், நான் வட சென்னை கல்லூரியில் படித்த 1958-62 ஆண்டு காலக்கட்டத்தில் எனக்கு ஏற்பட்டது. ஆனாலும், இந்தக் கதையில் வரும் ராக்கம்மா, இட்லி ஆயா, துரைமுக கந்தசாமி, ரிக்ஷாக்கார நாயக்கர் போன்ற பழைய மூத்தத் தோழர்களின் அன்பில் கசிந்து போனது, இன்னும் கண்களைக் கசியச் செய்கிறது. என் சித்தப்பா பாண்டி நாடாரும், என் சித்தி ராசம்மாவும் என்னைப் படிக்க வைப்பதற்கு நகைகளை அடகு வைத்ததும், கோணி சுமந்து படிக்க வைத்ததும், நெஞ்சில் நீங்காத நினைவுகளாகச் சுழல்கின்றன. கூடவே, அனைத்து குடித்தன குடியிருப்புகளிலும், வீட்டுக்காரிகள் அசல் அகங்காரிகளாக நடந்த அனுபவங்களை பார்த்ததுண்டு. அதேசமயம், அவர்களுக்கும் என்மீது அளப்பரிய அன்பு. மரியாதை.

இட்லி ஆயா

இந்த நாவலில் வரும் இட்லி ஆயா இப்போது இல்லை. ஒரு சிறுகடை வைத்திருந்த அந்த மூதாட்டியிடம், நான் சென்று, அவளை தனது பழையக் காதல் சங்கதிகளைப் பேச வைத்தது இப்போதுதான் நடந்ததுபோல் தோன்றுகிறது. அவளும் கையில் காசில்லாமல், மூக்குறிய எனக்கு சிகரெட்டையும், வாயூறிய எனக்கு நிலக்கடலை மிட்டாயும் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றன. ஆக, காதல் படம் காட்டியவளே எனக்குக் காசு வாங்காமல், இவற்றை அடிக்கடி தருவாள். கையில் காசு இல்லாத எனக்கோ, அவளது அடுத்த காதல் காட்சிகளை கிளறிவிட்டு, தம் அடிக்க வேண்டுமென்று ஆசை எழும். இந்த நாவலில் வரும் மல்லிகாவிற்கு கிடைத்த அன்பு போல், எனக்கும் இவளின் அன்பு கிடைத்தது. எனது சித்தப்பாவும் சித்தியும் என்னை அடிக்கடி கடிந்து கொண்டாலும், அதில் அன்பு மயமே வேரானது. இன்னும் சொல்லப்போனால், இவர்களுக்கு நானும் ஒரு வகையில், ‘வளர்ப்பு மகனான’ ஆண் மல்லிகா.

சொக்கலிங்கத்தில் சொக்கிப்போய்...

என்றாலும், லியோ டால்ஸ்டாய் தன் மனைவியை மட்டம் தட்டுவதற்காக ‘அன்னா கரீனா’ என்ற நாவலை எழுதத் துவங்கி, பின்னர் அந்த நாவல் நாயகியை நல்லவளாக்கி அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிப் போனார். இதேபோல், ஒரு சங்க மலரில் என்னைத் தாக்கி எழுதிய என் உறவினர் சொக்கலிங்கத்திற்கு சூடுகொடுக்க நினைத்து, இந்த நாவலை எழுத முனைந்தபோது, பாத்திரப் படைப்பிலும் தகவல் அடிப்படையிலும் இந்தச் சொக்கலிங்கம் சுகலிங்கமாகி விட்டார். நாவலில் வரும் திருமண நிகழ்ச்சி, அந்தக் காலத்தில் வட சென்னையில் உண்மையிலேயே நடந்த ஒன்று. உறவுமுறைச் சங்க பேர்வழிகள் நாவலில் வரும் அடை மொழிகளோடுதான் அப்போது அழைக்கப்பட்டார்கள்.

இந்திரமய சந்திரா

‘வளர்ப்புமகளில்’ வரும் மல்லிகாவும் இந்திரமயத்தில் வரும் சந்திராவும், கால வேறுபாட்டால் மாறுபட்டவர்கள். என்றாலும் இவர்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தள்ளப் பட்டவர்கள். இந்திரமயக் கதாநாயகி, இன்றையப் பெண்களின் பிரச்சினைகளை உருவகப்படுத்துகிறவள். நமது பெண்ணியவாதிகளும், இதில் தீவிரவாதிகளாகக் கருதப்படும் ஆண் படைப்பாளிகளும் சொத்துரிமையை வற்புறுத்தாத வரதட்சணை, கணவன் கொடுமை, சமையலறைச் சமாச்சாரங்கள், படுக்கையறைத் துன்புறுத்தல்கள் போன்றவற்றை அகலப்படுத்தி, சிற்சில சமயங்களில் ஆபாசமாகவும் எழுதி இருக்கிறார்களே தவிர, இன்றையப் பெண் எதிர்நோக்கும் ஆபத்தான பிரச்சனையை அணுகவே இல்லை. அநேகமாக என்னைத் தவிர

இன்றைய கிராமங்களிலும் நகரங்களிலும், ஆண்கள் வெளியே போய் ‘வரைவு மகளிரோடு’ கூடிக்கலந்து வாங்காத நோய்களையெல்லாம் வாங்கி விடுகிறார்கள். இதை அறியாமலே மனைவியாகிப் போன பெண் அந்த நோயை கணவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறாள். அவனது இத்தியாதிகளை தெரிந்து வைத்திருக்கும் பெண் கூட, அவனிடம் உடலுறவு கொள்ள முடியாது என்று மறுக்க இயலவில்லை. கேட்டால் அடி கிடைக்கும். மறுத்தால் உதை விழும். இந்தப் பயத்தின் அடிப்படையில் தத்தம் கணவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று இந்த அறியாமைப் பெண்டிர், தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்கிறார்கள். இதனால், லட்சோப லட்சம் பெண்கள் வெளியே சொல்லமுடியாத் நரக வேதனையும், அவமானமும் தரும் பாலியல் நோய்களை சகித்துக் கொண்டே ‘வாழ்ந்தபடி’ சாகிறார்கள்.

போதாக்குறைக்கு, இந்த நோய், பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாத உட்புறத்தில் தோன்றுகிறது. இதனால், நோய் முற்றும் வரை, அந்த பாவப்பட்ட பெண்ணுக்கு அதிகமாக அதன் தாக்கம் தெரிவதில்லை. இந்தநிலையில், நோய் வாங்கிய கணவனையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று எந்த வீதி நாடகமோ, எந்தத் திரைப்படமோ, எந்த பத்திரிகையோ, எந்தப் பட்டிமன்றப் பேச்சாளரோ இதுவரை எழுதியதில்லை, சொன்னதில்லை. இந்த லட்சணத்தில், வீதி நாடகங்கள்கூட, இந்த பாலியல் நோய்க்கு காண்டம்களை பயன்படுத்தச் சொல்கிறதே அன்றி, பெண்களை பாலியல் நோய்க்கார கணவனை எதிர்த்து நிற்கச் சொல்லவில்லை. இந்த லட்சணத்தில் இவர்களுக்கு அரசாங்கம் வேறு நிதியளிக்கிறது.

கள ஆய்வுகள்

மத்திய அரசாங்கத்தின் கள விளம்பரத் துறைக்குத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய போது, தமிழகம் முழுவதையும், கிட்டத்தட்ட அங்குலம் அங்குலமாக பார்த்திருக்கிறேன். இப்போதும், அடிக்கடி ‘எஸ்ட்ஸ் தடுப்பு’ வீதி நாடகங்களை பார்வையிட செல்கிறேன். தமிழகம் முழுவதும், இப்படிப்பட்ட பெண்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன் - பேசுகிறேன். அந்தந்த இடங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவன அமைப்புகள், இவர்களைப் பற்றியச் செய்திகளையும் எனக்குத் தெரிவித்துள்ளன.

பாலியல் நிபுனரான டாக்டர். காந்தராஜ், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில், ‘பொம்பளைச் சீக்கு’ என்று கொச்சைப் படுத்தப்படும் இந்த நோயின் விபரீதங்களை படக்காட்சி மூலம் விளக்கினார். இருபது ரூபாய் மருந்து, மாத்திரை, ஊசியில் குணமாகக்கூடிய இந்த நோயை முற்ற விட்டால், அது அகலிகையின் முனிக்கணவர் சாபத்தால், உடம்பு எல்லாம் பெண்குறியாகிப் போன இந்திரனைப்போல, பாதிக்கப் பட்ட ஒவ்வொரு பெண்ணும், ஆணும் மாறுவார்கள் என்று இயல்பாகப் பேசியே அதிர வைத்தார். அவர் காட்டிய பாலியல் நோய் படங்களை நினைத்துப் பார்த்தால், இப்போது கூட என் உடம்பு நடுங்குகிறது இந்த நினைவு போகும்வரை, உண்ண முடியவில்லை.

அந்த முனிவரின் மனைவி அகலிகையாவது, கல்லாகித் தப்பிவிட்டாள். ஆனால், 'கல்லானாலும் கணவன்' என்று நினைக்கும் நமது தமிழ்ப் பெண்கள்தான் நட மாடும் நோயாளிகளாய் மாறுகிறார்கள். கணவர்களின் பாவத்திற்கு சிலுவைச் சுமக்கிறார்கள் அகலிகையைப்போல், இந்தப் பெண்களால் பாலியல் நோயிக்கார கணவன்களுக்கு சாபம் கொடுக்க முடியவில்லை. சாபம் கிடக்கட்டும் - பாலியல் சந்தர்ப்பங்களை நிராகரிக்க இயலவில்லை. இந்த இயலாமையை உடைத்தெறியும் முயற்சியே, இந்த ‘இந்திரமயம்’.

காலப் பரிணாமம்

இந்த இரண்டு நாவல்களும் நோக்கிலும், போக்கிலும், நடையிலும் வித்தியாசமானவை. சந்திராவை நேர்கோட்டில் நடக்க வைத்தேன். அவளைப் பாலியல் பிரச்சனைகளுக்கு உட்படுத்த வில்லை. அப்படியே உட்படுத்தி இருந்தாலும் இந்திரமயத்தில் வரும் அளவிற்கான பிரச்சினைகளை அந்தக் காலக்கட்டத்தில் அவள் உள்வாங்கியிருக்கத் தேவையில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், பலதரப்பு நட்பும் அவளையோ அவளுக்கு வருகின்ற கணவனையோ பாலியல் சிக்கல்களில் அதிகமாக உட்படுத்தியிருக்காது. ஆனால், இந்திரமயத்தில் வரும் சந்திரா, ஒரு வகையில் சந்திராவின் காலப் பரிணாமம். இன்னொரு வகையில் இன்றைய ஆடியோ, வீடியோ வர்த்தகக் கலாச்சாரச் சூழலின் தாக்கங்களாலும், வேரற்றக் குடும்பச் சூழலாலும் பாதிக்கப்படும் பெண் இனத்தின் பிரதிநிதி.

‘வளர்ப்பு மகள்’ நடை எளிமையானது, இனிமையானது. ஒரே கோட்டில். போகக் கூடியது. விரிவாகவும் விளக்கமாகவும், முற்றிலும் சுய அனுபவப் பின்னணியில் எழுதப்பட்டது. ஆனால் இந்திரமயமோ, பின்னோக்கிய உத்தியில் இலக்கியத்தரம் இருக்க வேண்டும் என்பதற்காக தப்பாகவோ, சரியாகவோ ஓரளவிற்கு எளிமையையும், இனிமையையும் பலிகொடுத்து எழுதப்பட்டது. கூடவே, பக்க கட்டுப்பாட்டைக் கருதி, மிக விரிவாக எழுத வேண்டிய நவீன காலப் பெண்ணியப் பிரச்சனையை, சுருக்கமாக எழுதியது, எனக்கே ஒரு குறையாகத் தெரிகிறது. இந்தக் குறுநாவலை ‘வளர்ப்பு மகள்’ அளவிற்கு பரந்த தளத்தில் எழுதியிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், ‘இந்திரமயத்’ தளம், ‘வளர்ப்பு மகள்’ தளத்தைவிட அகலமானது, ஆழமானது. காரணம் வளர்ப்பு மகள் அத்திப் பூத்தது போல் ஒரு தனிப் பெண்ணின் பிரச்சனை... இதுவோ இன்றைய சராசரிப் பெண்களின் பிரச்சனை... ‘இந்திரமய’த்தை, விரிவாக மாற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். என்றாலும், எழுதிய எதையும் திரும்ப எழுத, என் மனம் ஒப்புவதில்லை. காரணம், எழுதும்போது இருக்கும் வேகம், விரிவான வடிவாக்கத்தின்போது வருவதில்லை. கூடவே, இவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும், இன்றைய அவசர உலகில் பெண்ணியவாதிகள் கூட, படிக்க மாட்டார்கள்.

'வளர்ப்பு மகளை' துவக்கத்தில் வெளியிட்ட ராணி முத்து நிர்வாகத்திற்கு நன்றியுடையேன். இந்த நாவலின் ஆய்வேடும், எனது படைப்புக்களில் முதலாவது ஆய்வாகும். இதற்காக, ஆய்வாளர் வை. சதாசிவம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘இந்திரமய’த்தை வெளியிட்ட வாசுகி இதழின் ஆசிரியரான, என் முன்னோடி எழுத்தாளர் தாமரைமணாளன் அவர்களுக்கும், அந்த இதழின் உதவி ஆசிரியராகச் செயல்பட்ட என் அருமைத் தோழர் செல்வா அவர்களுக்கும் நன்றியுடையேன். இப்போது இந்த இரண்டையும் உள்ளடக்கி வெளியிடும் பெரியவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்களுக்கும், அவரது அருமை மகன் ராமு அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.

சு. சமுத்திரம்
(டிசம்பர் 2002)

"https://ta.wikisource.org/w/index.php?title=வளர்ப்பு_மகள்/முதலுரை&oldid=1553620" இலிருந்து மீள்விக்கப்பட்டது