வைணவ புராணங்கள்/நூல் முகம்

விக்கிமூலம் இலிருந்து
நூல் முகம்

ஒண்மிதியில் புனல் உருவி ஒருகால் நிற்ப,
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து, அண்ட மீது போகி,
இருவிசும்பி னூடுபோய் எழுந்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி,
தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே[1]

பரந்தாமன் பார்த்தன் தேரை இயக்கினதுபோல் ஒவ்வொருவர் இதயகமலத்திலும் அவன் வீற்றிருந்து இவ்வுடலாகிய தேரை இயக்கிச் செயற்படுத்துகின்றான். அங்ஙனமே ஒவ்வொரு மனிதனும் செயற்படுகிறான். அந்த இயக்கத்தின் அடிப்படையில்தான் இந்நூலும் எழுகின்றது. இதில் ஐந்து முக்கியமான புராணங்கள் மட்டிலுமே விளக்கப் பெற்றுள்ளன. இவை வழக்கிலில்லாதவை. [2]

என் அரிய நண்பரும் வைணவ சீலருமான திரு. வீ.வீ.கே. சுப்புராசு அவர்கள் (அதிபர், சுரா நூல் வெளியீட்டகம்) ஒரு சமயம் வைணவ புராணங்கள் பற்றி ஒரு நூல் எழுதுமாறு பணித்தார்கள். அதை அவர் மறந்தே போனார். அந்த ’ஆணை’ என் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுக் கிடந்த அடியேனுக்கு சிறிது ஓய்வு கிடைத்தமையால் இந்நூல் எழுதத் துணிந்து அவனருளால் நிறைவு பெற்றது. பணித்த பண்பாளரும் இதனை உடனே அச்சேற்றி அடியார்களிடையே நடையாட விட்டமைக்கு என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது.

ஆழ்வார் பாசுரங்களில் ஈடுபாடு கொண்டவரும், திருமழிசை பிரான், கலியன் பாசுரங்களில் ஆழங்கால் பட்டு ஆய்ந்து முறையே எம்ஃபில் டாக்டர் பட்டம் பெற்றவளும் என் அபிமான புத்திரியுமான டாக்டர் மு.ப. சியமளா மூலப்படியையும், பார்வைப் படிமங்களையும் ஒப்பிட்டுச் சரிபார்த்தமைக்கு என் ஆசி கலந்தநன்றி என்றும் உரியது.

இந்த நூலுக்கு அரியதோர் அணிந்துரை வழங்கியவர் என் நெடுநாள் நண்பரும், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவரும், தம் வாழ்க்கையைத் தம் துணைவியுடன் வைணவத் தொண்டிற்கே அர்ப்பணித்தவரும், 'வைணவம்' என்ற திங்கள் இதழின் ஆசிரியருமான டாக்டர் ஜெ. பார்த்தசாரதியாவார். அவர் இந்த நூலுக்கு அணிந்துரை நல்கியது இந்த நூல் பெற்ற பேறு; அடியேன் பேறும்கூட அணிந்துரை அருளிய அன்பருக்கு என் இதயம் கனிந்த நன்றி என்றுமே உரியது.

இந்த நூல் அமரர் நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கட்கு (1913-2002 அன்புப் படையலாக்கப் பெறுகின்றது. பிறந்து, (21.12.1913) ஏழு நாட்களில் அன்னையை இழந்த நிலையில் கவாமி இராமகிருஷ்ண பரமகிருஷ்ண சுவாமிஜி அவர்களால் வளர்க்கப் பெற்று கல்வி கற்பிக்கப்பெற்றமையால் அவர்தம் வாழ்க்கை ஆன்மிகம், நாட்டுப்பற்று, நடைமுறை உலக வாழ்க்கை, ஒழுக்க முறைகள் அனைத்தும் கைவரப்பெற்று சிறந்த குடிமகனாகத் திகழ வாய்ப்புகள் பெற்றுத் திகழ்ந்தார். 1939ல் சட்டப் படிப்பை முடித்து 1940ல் வக்கீல் தொழில் தொடங்கி 1950 முதல் பல்லாண்டுகள் அரசு வக்கிலாகப் பணியாற்றினார். 1958ல் முத்து இராமலிங்கத் தேவர் வழக்கையும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் கள்ள நோட்டு வழக்கையும் கையாண்ட நிகழ்ச்சிகள் பரபரப்பானவை; மக்கள் மனத்தைக் கவர்ந்தவை. இன்னொரு வழக்கு- பொய்யான அவதூறு வழக்கு - இராஜாஜியின் அருமை மகள் கைம்பெண் நாமகிரியைப் பற்றியது;"சிவப்புநாடா என்ற மஞ்சள் இதழில் வெளிவந்தது. மனம் உடைந்த இராஜாஜி வழக்கு தொடுத்து கடுமையான தண்டனை வாங்கித் தருமாறு திரு. ரெட்டியாரை வேண்டிக்கொண்டார். அதனை அவ்வாறு செய்யாமல் வேறுவிதமாகக் கையாண்டார்."இப்படி இனி தொடர்ந்து எழுதினால் விசாரணையின்றி கடுமையான தண்டனையை ஏற்க ஒப்புக் கொள்கிறேன்” என்று எழுதிய வாசகத்தின் கீழ் கையெழுத்து வாங்கினார். இப்படிச் செய்தால் நிரந்தரமாகப் பிரச்சினை எழாது என்று இராஜாஜிக்கு விளக்கினார். இதனைத் தொலைபேசியில் கேட்ட இராஜாஜி அவர்கள் அடக்க முடியாத சிரிப்பால் ரெட்டியார் அவர்களின் கூர்ந்த மதியைப் பாராட்டினாராம். 1960ல் தமிழக அரசு வக்கீலாகவும், 1954ல் அட்வொகேட் ஜெனரலாகவும்,1956ல் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.

நீதியரசராகப் பணியாற்றிய காலத்தில் எம்.ஆர்.இராதா எம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கைக் கையாண்ட முறையை நாடே வியந்து கவனித்தது. நீதியரசராகப் பணியாற்றியபோது ஏழை மக்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு சட்டத்தின் போக்கு கெடாமலும் அவர்கள் நலம் பெறும் வகையிலும் தீர்ப்பு கூறியதால் மக்கள் நீதிபதி' என்று நாடே புகழ்ந்தது. இக்காலத்தில்தான் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் இல்லற நெறி' என்ற என் நூலைை இவர் கையால் வெளியிடச் செய்தேன்,'தொண்டைநாட்டுத் திருப்பதிகள் என்ற என் நூலுக்கு அணிந்துரையும் பெற்றேன்.நீதிபதியாக இருந்தபோது இவர் வழங்கிய தீர்ப்புகளைப் பொது மக்கள் நன்கு கவனித்தனர்.

1975, டிசம்பரில் நீதியரசர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின், பொதுத் தொண்டில் தீவிரமாக இறங்கி நாடே வியக்கும் வண்ணம் பணிபுரிந்தார். பொதுவாக நீதியரசர்கள் ஒய்வுபெற்றபின் ஒதுங்கியே வாழ்வது வழக்கு. ஆனால் அதற்கு விதிவிலக்கு நம் நீதியரசர் ரெட்டியார் அவர்கள். இக்காலத்தில் அவர்தம் திருப்பணி மகத்தானது; பெரும்புகழ் வாய்ந்தது.அருள்ஞானப்பெருவழி,இந்து மருத்துவமனை, பசு காப்பகம், ஜெய்கோபால் கரோதியா பள்ளிகள், வள்ளுவர் குருகுலம் மகளிர் உயர்நிலைப் பள்ளிகள், விசுவ இந்து பரிசத், தமிழ்நாடு வித்தியா பாரதி, விவேகானந்தர் கல்வி நிறுவனம், விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை, விவேகானந்தர் கலை ஆசிரம அறக்கட்டளை ஆகிய பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பு இவர் பார்வையில் இருந்தன. அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போன்றது தமிழ்நாடு இலவச வழக்கு வாரியத்தின் தலைவராக இருந்து பல்லாண்டுகள் பணியாற்றிய காலப் பகுதியாகும். இக்காலத்தில் அமைதியாக அநீதியை அநுபவித்துக்கொண்டு வாழும் ஏழைகள் இலவசமாக வழக்கு விசாரணை பெறும் திட்டம் ஒன்றைச் செயற்படச் செய்ததாகும். தேசிய காவலர் ஆணையத்திலும் உறுப்பினராக இருந்து பணியாற்றியது சிறப்பாகும். இங்ஙணம் பணியாற்றிய பெருமகனார் தமது 89வது அகவையில் வைகுண்ட பதவியை அடைந்த அன்று (7.12.2002) இத்தனை நிறுவனத்திற்குரியவர்கள் இவர்தம் இல்லங்களில் கண்ணீர்க் கடலில் மூழ்கியிருக்கும் காட்சி நெஞ்சை உருக்கியது. நூற்றுக்கணக்கான மாணவர் அழுத கண்ணீருடன் வந்து போன காட்சி கல் நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. (9.12.2002) காலை 9.30 மணிக்கு அண்ணா நகர் மின்சார மயானத்தில் ஈமச் சடங்கும் நிறைவு பெற்றது.

இங்ஙனம் பல்வேறு வகையில் தொண்டாற்றி நிறை வாழ்வு வாழ்ந்த பெருமகனாருக்கு - வைணவ சீலருக்கு - ‘வைணவ புராணங்கள்’ என்ற இந்த நூலை அன்புப் படையலாக்கி என் மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்திக் கொள்கின்றேன்.

என்னை 87 அகவை வரை இவ்வுலகில் நல்ல உடல் நலத்துடனும் மன வளத்துடனும் வாழ வைத்து இந்நாள் வரை கண்ணொளி கெடாமல் படிக்கவும், எழுதவும் வாய்ப்புகள் நல்கி என் இதயத்தில் என்றும் நிலையாக எழுந்தருளியிருக்கும் வேங்கடம் மேய விளக்கிற்குப் பெரிய பிராட்டியின் மூலம் எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள்.

இடிக்குரல் யானை வெண்கோடு
இறுத்தவன் இணைப்பொற் றாளின்
கடித்துணர் புணையாக் கைகள்
கையறு கைக ளாமால்;
பொடித்தசெங் கதிர்போற் காந்தி
பொழிமணிச் சூட்ட ராவின்
நடித்தவன் நாமம் பாடா
நாவழங் காத நாவே[3]

- செவ்வைச் சூடுவார்

‘வேங்கடம்’
AD-13, அண்ணா நகர்,

சென்னை - 600 040.
- ந. சுப்பு ரெட்டியார்

  1. திருநெடுந்தாண்டகம்-5
  2. 2. இன்று புழக்கத்திலுள்ள 'திருவேங்கடத் தல புராணம்', 'கோலாசல புராணம்' போன்றவை எடுத்துக்கொள்ளப் பெறவில்லை
  3. இதிகாசபாகவதம்