பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் 171 | மனிதன் அரும்பாடுபட்டுப் பொருளைத் திரட்டுகிறான். அல்லும் பகலும் உழைக்கிறான்; அலைகடல் கடந்து பறக்கிறான். இவ்வாறு செல்வத்தைத் தொகுப்பது, தனக்காகவோ வறிதே வைத்திழப்பதற்காகவோ அன்று. உலகுக்காகவும், பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதற்காகவும் தான் முயன்று தேடிய பொருள் பயன்படவேண்டும். சிலர், தாம் ஈட்டிய ஒண் பொருளைக் கல்வி நிலையங்களுக்கும் மருத்தவமனைகளுக்கும் வழங்குவதைக் காணுகின்றோம். அந் நிலையங்களும் மனைகளும் உலகுக்குத்தானே பயன்படுகின்றன. இவ்வாறு உலகுக்குதவுவதுதான் ஒப்புர வெனப்படும். செல்வத்தால் மட்டுமின்றி, உடலுழைப்பாலும் வாய் மொழியாலும் ஒப்புரவு செய்து வாழலாம். வள்ளுவர் உலகப் பேரறிஞர்; ஒப்பற்ற வழிகாட்டி: குண மென்னுங் குன்றேறி நின்றவர்; வெகுளியை வேண்டா வென்று வெறுப்பவர். அக்குணக் குன்றுக்குக் கூட, ஒப்புரவறிந்து வாழாதவனை நினைந்து விடின் சீற்றம் வந்து விடுகிறது. ஒப்புரவறிந்து வாழாதவன், செத்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான் எனச் சினந்து கூறிவிடுகிறார். அதனையறிந்து வாழ்பவனே உயிருடன் வாழ்பவனாவான் என மொழிகின்றார். உயிருள்ளவன் செயல் ஒப்புரவறிதல், அஃதின்றேல் அவனை உயிருள்ளவன் என்று எவ்வாறு கூறமுடியும் ? ஊருணி, பயன்மரம், மருந்துமரம் ஆகிய இம்மூன்றும் ஒப்புரவாளனுக் குவமையாக வள்ளுவராற் கூறப்படுவது.