உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. அங்கு நடைபெற்ற மாநாட்டைப்பற்றி எழுதியிருந்தாய். மாநாட்டில், பேரறிஞர் பலர் பேசியதைக் கேட்டுப் பயன் பெற்றதாகவும் குறிப்பிட்டி ருந்தாய். மிக்க மகிழ்ச்சி. கேள்விச் செல்வத்தின் சிறப்புகளை உணர்ந்து நடக்கின்றாய் என்று கருதுகிறேன். பலருடைய வாய்மொழிகளையும் கேட்கும் பொழுது நாம் மனத்தில் ஒன்றை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். அஃதாவது நாமும் அவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பது தான். ஒருவர் கூறுவதை அப்படியே நம்பிவிடுதல் கூடாது. அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்று, சொல்லுவோரை முன்வைத்துப் பொருளின் தன்மையை முடிவுகட்டுதல் கூடாது. எப்பொருளாயினும், எவர் வாய்க்கேட்பினும், அப்பொருளின் மெய்ப்பொருளை ஆராய்ந்துகண்டுகொள்வதுதான் அறிவுடைமை யாகும். மேலும் நமது சிந்தனை வளர்வதற்கும் அஃது ஒரு வழியாகும்.