பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—11—

தீண்டாதார் சுத்தமற்றோர் என்றால்ச் சுத்தத்தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? - சகியே தாண்டாதார் 57

தீண்டாதார் ஊனுண்டால் தீண்டு மனிதர் வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம் - சகியே மாண்டன பல் 58

பறவை மிருகமுண்டோர் பறையர் என்றல் மனுநூல்
முறையென்பார் பேரென்னடி? - சகியே முறையென் 59

வெறிமது உண்போர்நீசர் என்றல் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? -- சகியே நிறைமுக்கா டே 60

சீலம்குறைந்தோர் என்றல் சீலமிலாச் சிலரை
ஞாலத்தில் ஏன் தீண்டினார்? - சகியே ஞாலத் 61

மேலைவழக்கங் கொண்டு மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே காலத்தில் 62

சாத்திரம் தள்ளிற்றென்றல் சாற்றும் அதுதான்எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? - சகியே கோத்திரத் தார் 63

வாய்த்திறம் கொண்டமக்கள் வஞ்சம் யாவையும் நம்பி
நேத்திரம் கெட்டோமடி - சகியே நேத்திரம் கெட் 64

மனிதரிற் றாழ்வுயர்வு வகுக்கும் மடையர்வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி - சகியே இனிச்செல்ல 65

கனிமா மரம் வாழைக்காய் காய்க்காதெனில் இரண்டும்
தனித்தனிச் சாதியடி - சகியே தனித்தனிச் சாதியடி 66