எதிர்பாராத முத்தம்/பாடல் 14

விக்கிமூலம் இலிருந்து


14


எதிர்பாராப் பிரிவு


பொதி சுமந்து மாடுகளும் முன்னே போகப்
போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர் !

அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ தைபால்
ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்களோடு

குதிகாலைத் தூக்கி வைக்கத் துடித்துக், காதல்
கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல லுற்றன்.

மதிமுகத்தாள் வீடிருக்கும் மகரவீதி
வந்துநுழைந் ததுமுத்து வணிகர் கூட்டம்.

வடநாடு செல்கின்றற வணிகர்க் கெல்லாம்
மங்கையரும் ஆடவரும் வீதி தோறும்,

"இடசொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்”
என்றுரைத்து வாழ்த்த லுற்றர் ! மாடிமீது,

சுடர்ஒன்று தோன்றிற்றுப் பொன்மு டிக்கே
துடயாஒன்று தோன்றிற்றுக், கண்ணீர் சிந்த,


அடர்கின்ற பூங்கொடியை விழிக் குறிப்பால்,
"அன்பேநீ விடைகொடுப்பாய் " என்று கேட்டான்

எதிர்பார்த்த தில்லையவள் வடநா டென்னும்
எமலோகத்துக்கன்பன் செல்வா னென்றே!

அதிர்ந்த தவள் உள்ளந்தான் ! பயணஞ் செல்லும்
அணிமுத்து வணிகரொடு கண்டபோது,

விதிர்விதிர்த்த மலர்மேனி வியர்த்துப் போக
வெம்பினாள்; வெடித்துவிடும் இதயத்தன்னைப்

புதுமலர்கை யால் அழுத்தித், தலையில் மோதிப்
புண்ணுளத்தில் செந்நீரைக் கண்ணாற் பெய்தாள்

விடைகேட்கும் பொன்முடிக்குத், திடுக்கிட்டஞ்சும்
விழிதானா ? விழியொழுகும் நீர்தானா ? பின்,

இடைஅதிரும் அதிர்ச்சியா ? மனநெருப்பா?
எதுவிடை ? பொன்முடி மீண்டும் மீண்டும் மீண்டும்

கடைவிழியால் மாடியிலே கனிந்திருக்கும்
கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை

உடைந்து விழுவாள், அழுவாள் கூவி!
"உயிரே நீர்பிரிந்தீரா" என்று சோர்வாள் !