கபோதிபுரக்காதல்/பக்கம் 64-73

விக்கிமூலம் இலிருந்து


பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.

“ஐயோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா” என்று அலறினான் பொம்மன்.

“பிணம் தொங்குதேடா பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு” என்று கூறினான் பொன்னன். கரியா, வரதா, காத்தா, முத்து எனக் கூக்குரல் கிளம்பிற்று. அமிர்தம், கமலம், ஆச்சி அகிலாண்டம் என்ற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று. “கூவாதே! கிட்டே போகாதே!” என்றனர் சிலர்.

“அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக் கூடாது” என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.

“ஐய்யய்யோ இது என் அக்கா புருஷனாச்சே” என்று அலறினாள் வேறொரு வீரி.

“ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டோ! அடடா? இது என்னடா அநியாயம்” என்றான் பொம்மன்.

தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும் மக்களும், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூடிவிட்டனர்.

கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட சாரதாவின் முகம் வெளுத்துவிட்டது.

அவள் புருஷன் அழுதே விட்டான்.

ஊர் முழுவதும் ஒரே அர்க்களம்தான்.

ஏன் கருப்பையா தற்கொலை செய்துகொண்டான் என்பதை ஊர் அறியாது.

வருட முடிவில், வீட்டுக் கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு மேலே துண்டு விழுந்துவிட்டது. தன் மோசம் வெளிக்கு வரும். தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கப்பம் கட்டத் தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. சாரதா கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை. இருவருக்கும் சண்டையோ நிற்கவில்லை. சாரதா, சற்று கடுமையாகப் பேசிவிட்டாள். கருப்பையாவின் சித்தம் கலங்கிவிட்டது. “ஒரு முழம் கயிறுக்குப் பஞ்சமா, ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா” என சாரதாவிடம் வெறுத்துக் கூறினான். அப்படியே செய்தும்விட்டான். பிணமானான்! இரண்டொரு மாதத்தில் புளியமரத்துப் பிசாசுமாவான் ;

சாராதாவின் நிலைதான் என்ன? சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம் அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று.

ஊர்க்கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது. அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் சாரதா. அந்த முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை தாண்டவமாடிற்று. விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள் வேதனைக்கோ நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின் கலக்கத்தை அறியான், அவள் உடல் இளைப்பது கண்டு, மருந்து கொடுத்தான்.

பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகாபுரிக்குப் புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும் மழையும் இணைபிரியாது அழகாபுரியில் அவதி தந்தது. குளம், குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது, சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண்சுவர்கள் இடிந்தன. மாடு கன்றுகள் மடிந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. ஊர் தத்தளித்தது. வந்துள்ள வெள்ளம், தன்னைக் கொள்ளைகொண்டு போகவேண்டும் எனச் சாரதா மாரியை வேண்டினாள்.

இருட்டும்வரை ஊர்ப்புறத்தே ஒளிந்திருந்து பிறகு மெல்ல நடந்து சாரதாவின் தாய் வீட்டை அடைந்தான் பரந்தாமன்.

நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது விதவைக் கோலத்துடன் இருந்தாள்.

“கருத்து, மிரட்டும் கடுமழையில் எங்கிருந்து தம்பி நீ வந்தாய்” என்றாள். “வந்தேன் ஒரு முக்கியமான வேலையாக. நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன்.

“சாரதாவையா? நீ பழைய சாரதாவென எண்ணாதேயப்பா. அவள் என் மகள்தான். ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே இல்லை. ஊர் சிரித்துவிட்டது” என்று சலிப்புடன் தாய் கூறினாள்.

“சாரதா என்ன செய்தாள்?” என்றான் பரந்தாமன்.

“என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!” என்று வெறுத்துக் கூறினாள் தாய்.

“இதோ, இதைப்பார். இதைத்தானே நீ கூறுகிறாய்” என்று கூறிக்கொண்டே, போட்டோவைக் காட்டினான் தாயிடம்.

“ஆ! படமும் எடுத்தார்களா!” என்று திகைத்தாள் தாய்.

“பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான், நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன். “அநியாயம்! நீயாவது இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது வெட்கக்கேடு” என்றாள் தாய்.

“அம்மா! நீ விஷயமேதும் அறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு, சாரதாவை மிரட்டிக்கொண்டிருந்தான். பாவம் நம் சாரதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ நமக்கென்ன தெரியும், என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை சாரதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்!” என்றான் பரந்தாமன்.

“தம்பீ, பரந்தாமா, உனக்குத்தான் அவள் மீது எவ்வளவு ஆசை. உம்! உன்னைக் கட்டிக்கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும் இல்லை, பழியும் இல்லை” என்றாள் தாய். “ஆமாம்! எனக்கு சாரதா கிட்டாது போனதால்தான் வாழ்வுமில்லை. வகையுமில்லை” என்று அழுதான் பரந்தாமன்.

“நாளை காலையில் நான் சேதிவிடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன். நீ உடையைக் களைந்துவிட்டு, வேறுதுண்டு உடுத்திக்கொண்டு படுத்துறங்கு” என்று வேதவல்லியம்மை கூறினாள்.

‘ஆகட்டும்’ என்றான். ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும் படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும், மனம் மிக நொந்ததாலும், பரந்தாமனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்கவில்லை. உடலில் சுரமும் நிற்கவில்லை. ஆறுகள் பாலங்களை உடைத்துக்கொண்டு ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான் பரந்தாமன்.

ஜூரம் முற்றிற்று. உடலும் திடீரெனச் சிவந்தது. வேதவல்லி தனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் ஜூரம் கேட்கவில்லை.

பரந்தாமன் அலற ஆரம்பித்தான். வேதம் அழுதுகொண்டிருந்தாள். சாரதாக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. “எப்படி நான் அவர் முகத்தைப் பார்ப்பேன்” என்று இடிந்து போனால் சாரதா. பரந்தாமனுக்கு ஜூரம் குறைந்ததுபோல் காணப்பட்டது. ஆனால் அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச் சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின. மயக்கமும், மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும் ஆரம்பமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை.

வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள்.

அம்மையின் வேகம் அதிகரிக்க, பரந்தாமனின் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை. பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப் பாக்கி இல்லை. எங்கும் சிவப்புப் பொட்டுகள் பூரித்துக்கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல்லுந்தரமன்று, அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்துவிடுவான், தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி, “ஐயோ, அபசாரம், அபசாரம் மாரி, கோபிக்காதே மகன்மீது சீறாதே மாவிளக்கு ஏற்றுகிறேன்” என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை.

இரவு பத்து மணிக்கு, ஓர் உண்டை அபினெடுத்தாள் சாரதா, பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் “சாரதா, எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால்தான்” என்று கூறினான், கெஞ்சினான். “வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்கோ, நான் இப்போதுதான், பெரிய டம்ளர் நிறைய பால் சாப்பிட்டேன்” என்று சாக்குக் கூறினாள் ராதா.

அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றிவிட்டது.

“நீ குடித்தால்தான் நான் குடிப்பேன்” என்று கூறிவிட்டான்.

“பால் ஆறிப்போய் விடுகிறதே!”

“ஆறட்டுமே யாருக்கென்ன?”

“விளையாட இதுதானா சமயம்”

“சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ”

“சின்ன பிள்ளைபோல விளையாட வேண்டாம்; எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்”

“தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா” என்று கூறிக்கொண்டே சாரதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான், கணவன். சாரதாவுக்குத் தன்னையும் அறியாமல் ஒரு சிரிப்பு வந்துவிட்டது.

“ஐயய்யோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ” என்று கேட்டுக்கொண்டே, “இதோ பாருங்கள் இப்படி, என்மீது உமக்கு ஆசைதானே” என்றாள்.

தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான்.

“சத்தியமாக, ஆசைதானே” என்று கேட்டாள் சாரதா.

“சாமுண்டி சாட்சியாக நிஜம்” என்றான் கிழவன்.

“அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்” என்றாள் சாரதா.

“ஹுஹும் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்” என்றான் கிழவன். சொல்லிக்கொண்டே பால் செம்பை, சாரதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும் கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது. “இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே, இந்தப் பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விடமாட்டேன்” என்று கிழவன் கொஞ்சுமொழி கூறிக்கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த சாராதவை நோக்கிச் சிரித்தான்.

“ஆலமர முறங்கக் குட்டி அடிமரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க, குட்டி என்ன வரம் பெற்றேனோடி” என்று பாடத் தொடங்கினான். சாராத, தனக்கு தூக்கம் வருவதாக்க் கூறினாள். பார்க்கலாமா யார் முதலில் தூங்குவது என்று பந்தயங் கட்டினான், கணவன்.

இரண்டொரு வினாடிகளில் சாரதா குரட்டை விட்டாள். அது வெறும் பாசாங்கு. கிழவன், அவள் பாசாங்கு செய்வதைக் கண்டுகொண்டான். அவளுடைய காதில் சிறிய துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்து விட்டாள்!

“என்னை ஏமாற்ற முடியுமோடி குட்டி, என்னிடம் சாயுமோடி” என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டை விட்டான் பாசாங்கு அல்ல! நிஜம். பாலில் கலந்திருந்த அபின் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. ராதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள், எழுந்திருக்கவில்லை. பிறகு, அவள் படுக்கையைவிட்டு எழுந்து, பெரிய பச்சை சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டு புறக்கடை கதவைத் திறந்துகொண்டு, கழனிப் பக்கம் நடந்தாள். இருட்டு. தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேறும் நீரும் கலந்த வழி. தொலைதூரத்தில் நரியின் ஊளை. ஆங்காங்கு, வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை, மர உச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. ராதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால் பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும் அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தாள்? எங்கே? தன் தாய் வீட்டுக்கு. ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம், அவன் உயிர் போகும் முன்னம் ராதா வந்து பார்த்துவிட்டுப் போனால்தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என ராதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் ராதா பதைத்து, கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டுப் பறந்தாள், தன் காதலனைக் காண.

“சாரதா வரவில்லையே, சாரதாவுக்கு என்மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்கே ஒரு சகுனத்தடைபோல வந்தேன். சாரதா என் மனத்தைக் கொள்ளைகொண்ட சாரதா...” என்று பரந்தாமன் அலறிக்கொண்டிருந்தான்.

கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாமனுக்கு கண்களைத் திறப்பதென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். “வந்தாளா சாரதா“ என்று கேட்பான்.

“தம்பீ, வருவாள் பொறு, சற்றுத் தூங்கு” என்பாள் சாரதாவின் தாய்.

“தூக்கம்! எனக்கா! அம்மணி நான் செல்கிறேன் சாரதா இங்கு வரமாட்டாள். நானே அங்குச் செல்கிறேன்.

போனால் என்ன? அவள் கணவன் என்னைக் கொல்வானா! கொல்லட்டுமே? நான் செத்துதான் பல வருஷங்களாயிற்றே.

எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா?

தாலி கட்டியவன் அவன்தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயிறுதானே அது! நான் அவள் இருதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம்.

ஓஹோ! ஊரைக்கேள், சாராதா யார் என்று என்பானோ! ஊரைக் கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும? உள்ளத்தைக் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏதோ இங்கே வா அம்மா இப்படி. நீயே சொல். சாராதா உன் மகள்தான். நீ சொல், சாராதா எனக்குச் சொந்தமா, அந்தக் கிழவனுக்கா!

யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா சாராதாவை! இனி ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் சாராதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்” என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான். ஆகவேதான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என வேதவல்லி எண்ணி விசனித்தாள்.

சாரதாவைப் பெற்றவள் அவள். அவளே சாரதாவைக் கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ சாரதா யாருக்குச் சொந்தம் கூறு எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்.

“கதவைத் தட்டுவது யார்?”

“அம்மா! நான்தான் சாரதா!”

“வந்தாயா, கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை...” என்று கூறி, சாரதாவை வேதவல்லி அழைத்து வந்தாள்.

பரந்தாமனைக் கண்டாள் சாரதா. அவள் கண்களில் நீர் பெருகிற்று.

உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப்பட்டதுபோல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள்.

அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொரு நாள் ஜூரமாக இருந்தபோது சாரதாக்கு முத்தமிட்ட காட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்புடன் அவன் மீண்டும் உளறினான். சாரதா நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே, உன்னை விடுவேனோ! ஒரு கயிறு உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுமா! என்னைவிட அக்கயிறு என்ன பிரமாதமா! வா! ராதா! வந்துவிடு!” என்று உளறினான்.

“தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார், சாரதா வந்திருக்கிறாள்” என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், “யார் சாரதாவா, இங்கேயா” என்று கேட்டுக்கொண்டே கண்களைத் திறந்தான், சாரதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் சாரதாவை இழுத்தான்.

சாரதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, “வேண்டாம் வேண்டாம் என்னைத் தொடதீர்கள்” என்றாள். பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக்கொண்டான். “மறந்துவிட்டேன் சாரதா அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரேமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது” என்று சலிப்புடன் கூறினான். சாரதா பதைபதைத்து “பரந்தாமா! தப்பாக எண்ணாதே. தான் என்னைத்தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி” என்றாள்.

புன்னகையுடன் பரந்தாமன் “நீயா பாவி, தப்பு தப்பு. சாரதா நான் பாவி, நான் கோழை, என்னால்தான் நீ துயரில் மூழ்கினாய்” என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த ‘போட்டோவை’ சாரதாவிடம் கொடுத்தான். சாரதா சிறிதளவு திடுக்கிட்டுப்போனாள். பரந்தாமனைப் பார்த்து “இந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என்மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா” என்று கேட்டாள்.