கபோதிபுரக்காதல்/பக்கம் 74-80

விக்கிமூலம் இலிருந்து


“சாரதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்துவிடுமா!” என்றான் பரந்தாமன். அவனுடைய இருதயபூர்வமான அன்புகண்ட சாரதாவால் அழுகையை அடக்கமுடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவன் என் செய்வான்!

சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது, அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் சாரதா ஒருத்தி.

“சாரதா ஒரே ஒரு கேள்வி. என்மீது கோபிப்பதில்லையானால் கேட்கிறேன்” என்றான் பரந்தாமன்.

“குணசீலா, உன்மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்” என்றாள்.

“அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா!” என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன்.

“கருப்பையாவிடம் காதலா! வலை வீசும் வேடன்மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது” என்றாள் சாரதா.

“தெரிந்துகொண்டேன். ஆம்! நான் எண்ணியபடிதான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலைகண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய் பருவத்தில் சிறியவள்” என்று பரந்தாமன் கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு, “சாரதா! நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச் சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இருதயத்தில் ஆழப்பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை ‘அரகரா சிவசிவா அம்பலவாணா’ என்று சொல்லிப் பார்த்தேன். உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்காவல், காஞ்சி எனும் தலங்களெல்லாம் சென்றேன். என் ‘காதல்’ கரையவில்லை. எப்படிக் கரையும்! ‘உமை ஒரு பாகன்’, ‘இலட்சுமி நாராயணன்’, ‘வள்ளி மணாளன் முருகன்’, ‘வல்லபைலோலன்’ என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீ தானே!” என்று பரந்தாமன் பேசிக்கொண்டே இருந்தான்.

கேட்கக் கேட்க சாரதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின்போது பேசி உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, “பரந்தாமா போதும் பிறகு பேசுவோம், உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாயே” என்று கூறி சாரதா அவன் வாயை மூடினாள்.

“உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன? உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக...” என்று கூறி முடிப்பதற்குள் சாரதா மீண்டும் அவன் வாயை மூடி, “அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது” என்று கூறினாள். சாரதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனத்தில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக்கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான். அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் சாரதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன், சாரதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள். இருவரும் சமையலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டு கொளுத்திவிட்டனர். பின்னர் ராதா மெல்ல நடந்து வீடு சென்றாள். படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனை போல. சில நிமிடங்கள் வரை சாரதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி, மெதுவாகக் கணவன் மீது கையை வைத்தாள். பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக்கொண்டே, அவர் உடலைப்பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம், மரணம்.

சாரதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே சாரதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.

சாரதா விதவையானாள், பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக்கொண்டான்; ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான் பரந்தாமன். சாரதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? சாரதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.

ஒரு மாதத்துக்குப் பிறகு, பரந்தாமன் சாரதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான், கருத்தை இழக்கவில்லையல்லவா!

சாரதா தாலியை இழந்தாள்; பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள்; தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக்கொண்டாள். ஆனால் அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்துவிட்டதாகக் கருத முடியவில்லை.

துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம் தனக்கும் மாண்டு போன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவற்றைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுதானே! யாருக்குத் தெரியும். தன் காதலனைக் காணப் போகவேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால் அவன் இறந்தான் என்ற உண்மை.

தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது சாரதாவுக்கு இருதயத்தில் ஈட்டிபாய்வது போலத்தான் இருந்தது. “நான் அவர் சற்று தூங்கவேண்டும் என்று அபின் கொடுத்தேனேயொழிய அவர் இறக்கவேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே ‘வம்பாக’ வந்து முடிகிறது. என் தலை எழுத்துப் போலும்” என்று கூறித் தன்னைத்தானே தேற்றிக்கெண்டாள்.

தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், ராதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள் நல்ல நகை நட்டுடன் நாலுபேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் சாரதாவை மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் சாரதாவுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரையேறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! சாரதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப்படகு ஓட்டை உள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்லமுடியும். அந்த ஓட்டைப் படகுக்குக் கருப்பையா ஒட்டுப்பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய்விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவனே மாண்டான் இனி சாரதா கரை சேருவது எப்படி முடியும்?

“முடியுமா? முடியாதா?”

“நான் என்ன பதில் கூறுவேன்”

“உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு.”

“ஊரார்.....”

“ஊரார். பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்ட தாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவை ‘ஊரார் ஊரார்’ என வீண் கிலிகொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? ‘இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுந்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?’ என்றுதான் கூறுவர். ஏளனம் செய்வர். எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னைச் சமூக பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலைகொள்ள வேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன். ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள், எனக்குப் புகட்டும் பாடம் இதுதான்; சமூகம், திடமுடன் யார் என்பதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும், தாங்கி, பதுங்கினால் அவர்கள்மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும்.

சாரதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும், முன்னால் செல் ஓடிவிடும்.

பழக்கவழக்கமெனும் கொடுமையை, தீவிரமாக எதிர்த்தால்தான் முடியும்” எனப் பரந்தாமன் சாரதாவிடம் வாதாடினான், தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி.

சாரதாவுக்கு, மறுமணம் – தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதைக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத் தோட்டத்தில் அவன் கைப்பிடித்து நடக்க, காலடிச் சத்தம் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று, பறக்கக் கண்டாள். அவள் ஏதேதோ கூறவும் அவை, எண்ணத்தில் இன்பவாடையைக் கிளப்பவும் கண்டான். அவன் அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடி வாழ்தல் அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும் அவள் மனக்கண்முன்பு தோன்றின.

“சாரதா, இதோ உன் உலகம், நீ தேடிக்கொண்டிருந்த தேன் ஓடும் தேசம். நீ நடந்து சென்று வழி தவறி, சேர முடியாது தத்தளித்தாயே, அதே நாடு. காதல் வாழ்க்கை, பரந்தாமனுடன் இணைந்து வாழும் இன்பபுரி, போ, அவ்வழி. வாழு, அந்த நாட்டில், ஒருமுறைதான் தவறிவிட்டாய். அதற்குக் காரணம் என் தந்தை. இம்முறை தவறவிடாதே.

முன்பு நீ பேதைப் பெண். உன்னை அடக்க மடக்க பெற்றோரால் முடிந்தது. இப்போது நீ உலகைக் கண்டவள். இம்முறை உணர்ச்சியை அடக்காதே. நட இன்பபுரிக்கு. சம்மதங் கொடு பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை. உனக்கு அவன். நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள். சாதாரண உலகைப் பற்றி கவலை ஏன்! பழிக்கும் சுற்றத்தார் இழித்துப் பேசும் பழைய பித்தர்கள், கேலி செய்யும் குண்டர்கள், கேவலமாக மதிக்கும் மற்றையோர், என்ன சொல்வாரோ என்பதைப் பற்றி நீ கவலைப்படாதே.

அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும் உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல. பிடித்துக் கொள் அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனி தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்கவொட்டாதபடி தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றும்விட்டது” – என சாரதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன.

விதவை சாரதாவுக்கும் விதியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்தேறியது.

வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற்கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள்போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறுமினர். ஆனால், கபோதிபுரக் காதலை, இனி யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர்.