கலிங்கத்துப் பரணி/அவதாரம்
Appearance
திருமாலே தோன்றினான்
[தொகு]232
- அன்றிலங்கை பொருதழித்த வவனேயப் பாரதப்போர் முடித்துப் பின்னை
- வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான் விளம்பக் கேண்மின். 1
233
- தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு
- மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. 2
கண்ணனே குலோத்துங்கனானான்
[தொகு]234
- இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன்
- அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தா னவனே மீள. 3
துந்துமி முழங்கிற்று
[தொகு]235
- வந்தருளி யவதாரஞ் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
- அந்தரநீங் கினவென்ன வந்தரதுந் துமிமுழங்கி யெழுந்த தாங்கே. 4
மலர்க்கையால் எடுத்தாள்
[தொகு]236
- அலர்மழைபோல் மழைபொழிய வதுகண்டு கங்கைகொண்ட சோழன் தேவி
- குலமகள்தன் குலமகனைக் கோகனத மலர்க்கையா னெடுத்துக் கொண்டே. 5
பாட்டியார் கருத்து
[தொகு]237
- அவனிபர்க்குப் புரந்தரனா மடையாளம் அவயவத்தி னடைவே நோக்கி
- இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ னென்றே. 6
இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்
[தொகு]238
- திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
- செய்யபரி திக்குழவி யையனிவ னென்றுந்
- தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமுந்
- தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே. 7
நடை கற்றான்
[தொகு]239
- சினப்புலி வளர்ப்பதொர் சிறுப்புலியு மொத்தே
- திசைக்களி றணைப்பதொர் தனிக்களிறு மொத்தே
- அனைத்தறமு மொக்கவடி வைக்கவடி வைத்தே
- அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே. 8
ஐம்படைத் தாலி அணிந்தனன்
[தொகு]240
- பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
- படர்களையு மாயனிவ னென்றுதெளி வெய்தத்
- தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத்
- தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே. 9
மழலை மொழிந்தான்
[தொகு]241
- தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
- தானுமுல கத்தவர்த மக்கருள்சு ரந்தே
- தூயமனு வுஞ்சுருதி யும்பொருள்வி ளங்கிச்
- சொற்கள்தெரி யத்தனது சொற்கள்தெரி வித்தே. 10
பூணூல் அணிந்தான்
[தொகு]242
- திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் மங்கலநா ணென்ன முந்நூற்
- பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். 11
மறை கற்றான்
[தொகு]243
- போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற
- வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. 12
வீர வாள் ஏந்தினான்
[தொகு]244
- நிறைவாழ்வைப் பெறல்நமக்கும் அணித்தென்று நிலப்பாவை களிப்ப விந்தத்
- துறைவாளைப் புயத்திருத்தி யுடைவாளைத் திருவரையி னொளிர வைத்தே. 13
யானையேற்றம் கற்றான்
[தொகு]245
- ஈரிரும ருப்புடைய வாரணமு கைத்தே இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்
- ஓரிரும ருப்புடைய வாரணமு கைத்தே ஒன்னலரை வெல்வனென வன்னதுப யின்றே. 14
குதிரையேற்றம் பயின்றான்
[தொகு]246
- இற்றைவரை யுஞ்செலவ ருக்கனொரு நாள்போல் ஏழ்பரியு கைத்திருள கற்றிவரு மேயான்
- ஒற்றைவய மானடவி யித்தரைவ ளாகத் துற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. 15
படைக்கலம் பயின்றான்
[தொகு]247
- சக்கரமு தற்படையொ ரைந்துமுதல் நாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத்
- திக்குவிச யத்தின்வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே. 16
பல்கலை தேர்ந்தான்
[தொகு]248
- உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவதெ னுவமையுரை செய்யி னுலகத்
- தரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை யவையவைகள் வல்ல பிறகே. 17
இளவரசன் ஆனான்
[தொகு]249
- இசையுடனெ டுத்தகொடி யபயனவ னிக்கிவனை யிளவரசில் வைத்த பிறகே
- திசையரச ருக்குரிய திருவினைமு கப்பதொரு திருவுளம டுத்த ருளியே. 18
போர்மேல் சென்றான்
[தொகு]250
- வளர்வதொர்ப தத்தினிடை மதகரிமு கத்தினிடை
- வளையுகிர்ம டுத்து விளையா
- டிளவரியெ னப்பகைஞ ரெதிர்முனைக
- ளைக்கிழிய எறிபடைபி டித்த ருளியே. 19
வடவரசரை வென்றான்
[தொகு]251
- குடதிசை புகக்கடவு குரகதர
- தத்திரவி குறுகலு மெறிக்கு மிருள்போல்
- வடதிசை முகத்தரசர் வருகத
- முகத்தனது குரகத முகைத் தருளியே. 20
வயிராகரத்தை எறித்தான்
[தொகு]252
- புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி புகையெரி குவிப்ப வயிரா
- கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரை தனைக் கடவியே. 21
களம் கொண்டான்
[தொகு]253
- குளமுதிர மெத்தியதொர் குரைகடல்
- கடுப்பவெதிர் குறுகலர்கள் விட்ட குதிரைத்
- தளமுதிர வெட்டியொரு செருமுதிர
- ஒட்டினர்கள் தலைமலை குவித் தருளியே. 22
சக்கரக்கோட்டம் அழித்தான்
[தொகு]254
- மனுக்கோட்ட மழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்
- தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம். 23
சீதனம் பெற்றான்
[தொகு]255
- சரிக ளந்தொறுந் தங்கள் சயமகள் தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்
- பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர். 24
கைவேல் சிவந்தது
[தொகு]256
- பொருத ராதிபர் கண்கள் சிவந்தில போரி லோடிய கால்கள் சிவந்தன
- விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. 25
வீரராசேந்திரன் இறந்தான்
[தொகு]257
- மாவுகைத் தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
- தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம். 26
சோழ நாட்டில் நிகழ்ந்தவை
[தொகு]258
- மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
- துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே. 27
259
- சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
- ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்த போயே. 28
260
- ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
- அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே. 29
சோழநாடு அடைந்தான்
[தொகு]261
- கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
- ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி. 30
நீதியை நிலைநிறுத்தினான்
[தொகு]262
- காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
- கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே. 31
திரு முழுக்கு
[தொகு]263
- விரிபுனல் வேலை நான்கும் வேதங்க ணான்கு மார்ப்பத்
- திரிபுவ னங்கள் வாழ்த்தத் திருவபி டேகஞ் செய்தே. 32
முடி புனைதல்
[தொகு]264
- அறைகழ லரச ரப்பொழு தடிமிசை யறுகெ டுத்திட
- மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. 33
அறம் முளைத்தன
[தொகு]265
- நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி
- சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளி னறம னைத்துமே. 34
புலிக்கொடி எடுத்தான்
[தொகு]266
- பொதுவற வுலகு கைக்கொடு புலிவளர் கொடியெ டுத்தலும்
- அதுமுதற் கொடியெ டுத்தன அமரர்கள் முழவெ டுக்கவே. 35
நிலவு எறித்தது இருள் ஒளித்தது
[தொகு]267
- குவிகைகொ டரசர் சுற்றிய குரைகழ லபயன் முத்தணி
- கவிகையி னிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. 36
குடை நிழலின் செயல்
[தொகு]268
- அரனுறை யும்படி மலைகள் அடைய விளங்கின வனையோன்
- ஒருதனி வெண்குடை யுலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில். 37
புகழ் மேம்பாடு
[தொகு]269
- அரிதுயி லும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்
- ஒருகரு வெங்கலி கழுவி உலவு பெரும்புகழ் நிழலில். 38
270
- நிழலில டைந்தன திசைகள் நெறியில டைந்தன மறைகள்
- கழலில டைந்தனர் உதியர் கடலில டைந்தனர் செழியர். 39
271
- கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
- அரணிய மந்திர அனல்கள் அவையுத வும்பெரு மழையே. 40
272
- பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்
- அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும். 41
273
- விரித்த வாளுகிர் விழித் தழற்புலியை மீது வைக்கவிம யத்தினைத்
- திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய கோலில்வளை வில்லையே. 42
274
- கதங்க ளிற்பொரு திறைஞ்சிடா வரசர் கால்க ளிற்றளையும் நூல்களின்
- பதங்க ளிற்றளையு மன்றி வேறொரு பதங்க ளிற்றளைக ளில்லையே. 43
275
- மென்க லாபமட வார்கள் சீறடி மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
- இன்க லாம்விளைவ தன்றி யெங்குமொர் இகல்க லாம்விளைவ தில்லையே. 44
பொழுது போக்கு
[தொகு]276
- வருசெருவொன் றின்மையினால் மற்போருஞ் சொற்புலவோர் வாதப் போரும்
- இருசிறைவா ரணப்போரு மிகன்மதவா ரணப்போரு மினைய கண்டே. 45
277
- கலையினொடுங் கலைவாணர் கவியினொடும் இசையினொடுங் காதன் மாதர்
- முலையினொடு மனுநீதி முறையினொடு மறையினொடும் பொழுது போக்கி. 46
பரிவேட்டையாட நினைத்தான்
[தொகு]278
- காலாற்றண் டலையுழக்குங் காவிரியின் கரைமருங்கு வேட்டை யாடிப்
- பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்குப் பயண மென்றே. 47
படை திரண்டது
[தொகு]279
- முரசறைகென் றருளுதலு முழுதுலகும் ஒருநகருட் புகுந்த தொப்பத்
- திரைசெய்கட லொலியடங்கத் திசைநான்கிற் படைநான்குந் திரண்ட வாங்கே. 48
வேட்டைக்குப் புறப்பட்டான்
[தொகு]280
- அழகின்மே லழகுபெற வணியனைத்தும் அணிந்தருளிக் கணித நூலிற்
- பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட் பழுதற்ற பொழுதத் தாங்கே. 49
தானம் அளித்தான்
[தொகு]281
- அனக தானதரு மங்கண்மறை மன்னர் பெறவே
- அபய தானமப யம்புகுது மன்னர் பெறவே
- கனக தானமுறை நின்றுகவி வாணர் பெறவே
- கரட தானமத வாரணமு மன்று பெறவே. 50
யானைமேல் ஏறினான்
[தொகு]282
- மற்ற வெங்கட களிற்றினுத யக்கி ரியின்மேல்
- மதிக வித்திட வுதித்திடு மருக்க னெனவே
- கொற்ற வெண்குடை கவிப்பமிசை கொண்டு கவரிக்
- குலம திப்புடை கவித்தநில வொத்து வரவே. 51
பல்லியம் முழங்கின
[தொகு]283
- ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே
- உடன் முழங்குபணி லம்பல முழங்கி யெழவே
- பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே
- பலவி தங்களொடு பல்லிய முழங்கி எழவே. 52
வேறு பல ஒலிகள் எழுந்தன
[தொகு]284
- மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
- மறைவ லாளர்மறை நாள்வயின் வழாத வொலியும்
- இன்ன மாகடல் முழங்கியெழு கின்ற வொலியென்
- றிம்ப ரும்பரறி யாதபரி செங்கு மிகவே. 53
ஏழிசைவல்லபியும் உடனிருந்தாள்
[தொகு]285
- வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
- மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா
- ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க உரியாள்
- யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. 54
தியாகவல்லியும் சென்றாள்
[தொகு]286
- பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி யுடனே
- புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடி வரச்
- சென்னி யாணையுடன் ஆணையை நடத்து முரிமைத்
- தியாக வல்லிநிறை செல்வியுடன் மல்கி வரவே. 55
மகளிரும் மன்னரும் சூழ வருதல்
[தொகு]287
- பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே
- பெய்வ ளைக்கைமட மாதர்பிடிமீதின் வரவே
- முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே
- முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்து வரவே. 56
அரசரோடு வீரர் சூழ்ந்து வரல்
[தொகு]288
- யானை மீதுவரும் யானையு மநேக மெனவே
- அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே
- சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே
- தெளிப டைக்கலன் நிலாவொளி படைத்து வரவே. 57
முரசொலியும் கொடிநிரலும்
[தொகு]289
- முகிலின் மேன்முகின் முழங்கிவரு கின்ற தெனவே
- மூரி யானைகளின் மேன்முரச திர்ந்து வரவே
- துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே
- தோகை நீள்கொடிகள் மேன்முகில் தொடங்கி வரவே. 58
புழுதி எழுந்தது
[தொகு]290
- தேரின் மீதுவரு தேர்களு மநேக மெனவே
- செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே
- பாரின் மீதுமொரு பாருளது போலு மெனவே
- படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. 59
படை செல்லும் காட்சி
[தொகு]291
- யானை மேலிளம் பிடியின் மேனிரைத்
- திடைய றாதுபோ மெறிக டற்கிணை
- சேனை மாகடற் கபய னிம்முறைச்
- சேது பந்தனஞ் செய்த தொக்கவே. 60
பல்லக்கும் முத்துக் குடையும்
[தொகு]292
- நீல மாமணிச் சிவிகை வெள்ளமும் நித்தி லக்குலக் கவிகை வெள்ளமுங்
- காலி னான்வரும் யமுனை வெள்ளமுங் கங்கை வெள்ளமுங் காண்மி னென்னவே. 61
புலிக்கொடிச் சிறப்பு
[தொகு]293
- கெண்டை மாசுண முவணம் வாரணங் கேழ லாளிமா மேழி கோழிவிற்
- கொண்ட வாயிரங் கொடிநு டங்கவே குமுறு வெம்புலிக் கொடிகு லாவவே. 62
மகளிர் கூட்டம்
[தொகு]294
- தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்
- சோதி வாண்முகங் கோதை யோதிமென்
- நடைகண் மென்சொலென் றடைய வொப்பிலா
- நகை மணிக்கொடித் தொகைப ரக்கவே. 63
மகளிர் தோற்றம்
[தொகு]295
- எங்குமுள மென்கதலி யெங்குமுள
- தண்கமுக மெங்குமுள பொங்கு மிளநீர்
- எங்குமுள பைங்குமிழ்க ளெங்குமுள
- செங்குமுத மெங்குமுள செங்க யல்களே. 64
296
- ஆறலைத ரங்கமுள வன்னநடை தாமுமுள
- வாலைகமழ் பாகு முளவாய்
- வேறுமொரு பொன்னிவள நாடுசய
- துங்கன்முன்வி தித்ததுவு மொக்கு மெனவே. 65
மலைக் காட்சி
[தொகு]297
- வேழம்நிரை வென்றுமலை யெங்குமிடை
- கின்றவயில் வென்றியப யன்ற னருளால்
- வாழவப யம்புகுது சேரனொடு
- கூடமலை நாடடைய வந்த தெனவே. 66
298
- அக்கிரிகு லங்கள்விடு மங்குலியின்
- நுண்திவலை யச்செழிய ரஞ்சி விடுமத்
- திக்கிலுள நித்திலமு கந்துகொடு
- வீசியொரு தென்றல்வரு கின்ற தெனவே. 67
தில்லைக் கூத்தனை வணங்கினான்
[தொகு]299
- தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்
- வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
- மன்றினட மாடியருள் கொண்டுவிடை
- கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. 68
காஞ்சியை அடைந்தான்
[தொகு]300
- விட்டவதி கைப்பதியி னின்றுபய
- ணம்பயணம் விட்டுவிளை யாடி யபயன்
- வட்டமதி யொத்தகுடை மன்னர்தொழ
- நண்ணினன்வ ளங்கெழுவு கச்சி நகரே. 69
கலிங்கப்பேய் ஓடிவந்தது
[தொகு]301
- என்னுமித னன்மொழியெ டுத்திறைவி சொல்லுவதன் முன்னமிகல் கண்ட தொருபேய்
- தன்னுடைய கால்தனது பிற்பட மனத்துவகை தள்ளிவர வோடி வரவே. 70
கலிங்கப் பேயின் மொழிகள்
[தொகு]302
- கலிங்கர் குருதி குருதி கலிங்க மடைய வடைய
- மெலிந்த வுடல்கள் தடிமின் மெலிந்த வுடல்கள் தடிமின். 71
303
- உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக
- கணங்க ளெழுக வெழுக கணங்க ளெழுக வெழுக. 72
304
- என்செயப் பாவி காளிங் கிருப்பதங் கிருப்ப முன்னே
- வன்சிறைக் கழுகும் பாறும் வயிறுகள் பீறிப் போன. 73
305
- வயிறுக ளென்னிற் போதா வாய்களோ போதா பண்டை
- எயிறுக ளென்னிற் போதா என்னினு மீண்டப் போதும். 74
306
- சிரமலை விழுங்கச் செந்நீர்த் திரைகடல் பருக லாகப்
- பிரமனை வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். 75
பேய்களின் பேரின்பம்
[தொகு]307
- என்ற வோசை தஞ்செ விக் கிசைத்த லுந்த சைப்பிணந்
- தின்ற போற்ப ருத்து மெய் சிரித்து மேல்வி ழுந்துமே. 76
308
- ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்த முண்ணுமே
- சாகை சொன்ன பேய் களைத் தகர்க்க பற்க ளென்னுமே. 77
309
- பிள்ளை வீழ வீழ வும்பெ ருந் துணங்கை கொட்டுமே
- வள்ளை பாடி யாடி யோடி வாவெனாவ ழைக்குமே. 78
310
- எனாவு ரைத்த தேவி வாழி வாழி யென்று வாழ்த்தியே
- கனாவு ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. 79
காளி போர்நிலை கேட்டல்
[தொகு]311
- ஆடிவரு பேய்களின லந்தலைத விர்த்தடுப றந்தலைய றிந்த தனினின்
- றோடிவரு பேயையிக லுள்ளபடி சொல்கெனவு ரைத்தனளு ரைத்த ருளவே. 80