கலிங்கத்துப் பரணி/போர் பாடியது

விக்கிமூலம் இலிருந்து

போரின் பேரொலி[தொகு]

404

எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1

405

வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2

இருபடைகளும் குதிரைகளும்[தொகு]

406

எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. 3

யானைப் படையும் குதிரைப் படையும்[தொகு]

407

கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. 4

வீரர்களும் அரசர்களும்[தொகு]

408

பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே. 5

விற்போர்[தொகு]

409

விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை யெறிக்கவே
வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. 6

குருதி ஆறு[தொகு]

410

குருதியின் நதிவெளி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. 7

யானைப் போர்[தொகு]

411

மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. 8

412

நிழற்கொடி தழற்கது வலிற்கடி தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே
அழற்படு புகைக்கொடி யெடுத்தன புதுக்கொடி யனைத்தினு நிரைத்த தெனவே. 9

413

இடத்திடை வலத்திடை யிருத்திய துணைக்கரம் நிகர்த்தன வடுத்த கரியின்
கடத்தெழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன வவற்றி னெயிறே. 10

414

எயிறுக ளுடையபொ ருப்பை வலத்திடை எதிரெதி ரிருபணை யிட்டுமு றுக்கிய
கயிறுக ளிவையென அக்கர டக்கரி கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே. 11

குதிரைகளின் தோற்றம்[தொகு]

415

முடுகிய பவனப தத்திலு கக்கடை முடிவினி லுலகமு ணச்சுடர் விட்டெழு
கடுகிய வடவன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. 12

வீரர்களின் பெருமிதம்[தொகு]

416

களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில
இளமுலை யெதிர்பொரு மப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்மு னிற்பரே. 13

வாள் வீரர்களின் சிறப்பு[தொகு]

417

எதிர்பொரு கரியின்ம ருப்பையு ரத்தினில் இறவெறி படையினி றுத்துமி றைத்தெழு
சதுரர்கண் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி யொத்ததே. 14

குதிரை வீரர்களின் சிறப்பு[தொகு]

418

சயமகள் களபமு லைக்கணி யத்தகு தனிவட மிவையென மத்தக முத்தினை
அயமெதிர் கடவிம தக்கரி வெட்டினர் அலைபடை நிரைகள்க ளத்துநி ரைக்கவே. 15

வில் வீரரின் சிறப்பு[தொகு]

419

அலைபடை நிரைகள்நி றைத்தசெ ருக்களம் அமர்புரி களமென வொப்பில விற்படை
தலைபொர வெரியநெ ருப்பினின் மற்றது தழல்படு கழைவன மொக்கினு மொக்குமே. 16

420

தழல்படு கழைவன மெப்படி யப்படி சடசட தமரமெ ழப்பக ழிப்படை
அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. 17

421

அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும் அளவினி லயமெதிர் விட்டவர் வெட்டின
உடல்சில இருதுணி பட்டன பட்டபின் ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே. 18

422

ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன உருவிய பிறைமுக வப்பக ழித்தலை
அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள்து ணித்துவி ழுத்துமே. 19

குதிரை வீரரின் சிறப்பு[தொகு]

423

அடியொடு முடிகள்து ணித்துவி ழப்புகும் அளவரி தொடைசம ரத்தொட ணைத்தனர்
நெடியன சிலசர மப்படிப் பெற்றவர் நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவே. 20

424

நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவர் நெறியினை யொடியெறி கிற்பவ ரொத்தெதிர்
அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின் அவருட லிருவகிர் பட்டன முட்டவே. 21

கலிங்க வீரர் தடுத்தனர்[தொகு]

425

விடுத்த வீர ராயு தங்கள் மேல்வி ழாம லேநிரைத்
தெடுத்த வேலி போற்க லிங்கர் வட்ட ணங்க ளிட்டவே. 22

கேடகங்கள் துளைக்கப்பட்டன[தொகு]

426

இட்ட வட்ட ணங்கண் மேலெ றிந்த வேல்தி றந்தவாய்
வட்ட மிட்ட நீண்ம திற்கு வைத்த பூழை யொக்குமே. 23

வாளும் உலக்கையும்[தொகு]

427

கலக்க மற்ற வீரர் வாள்க லந்த சூரர் கைத்தலத்
துலக்கை யுச்சி தைத்தபோ துழுங்க லப்பை யொக்குமே. 24

துதிக்கையும் சக்கரமும்[தொகு]

428

மத்த யானை யின்க ரஞ்சு ருண்டு வீழ வன்சரந்
தைத்த போழ்தி னக்க ரங்கள் சக்க ரங்க ளொக்குமே. 25

வீழ்ந்த முத்துக்கள்[தொகு]

429

வெங்க ளிற்றின் மத்த கத்தின் வீழு முத்து வீரமா
மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிசொ ரிந்த தொக்குமே. 26

கேடகங்களுடன் வீரர்கள்[தொகு]

430

மறிந்த கேட கங்கி டப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்
பறிந்த தேரின் நேமி யோடு பார்கி டப்ப தொக்குமே. 27

தண்டும் மழுவும்[தொகு]

431

களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பி டித்த கூர்ம ழுக்க ளொக்குமே. 28

குறையுடல்களும் பேய்களும்[தொகு]

432

கவந்த மாட முன்பு தங்க ளிப்பொ டாடு பேயினம்
நிவந்த வாட லாட்டு விக்கும் நித்த கார ரொக்குமே. 29

ஒட்டகம் யானை குதிரை[தொகு]

433

ஒட்டகங்கள் யானை வாலு யர்த்தமா வழிந்த போர்
விட்ட கன்று போகி லாது மீள்வ போலு மீளுமே. 30

யானைகள் மேகங்களை ஒத்தன[தொகு]

434

பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்
கறங்கு வேலை நீரு ணக் கவிழ்ந்த மேக மொக்குமே. 31

வீரர் துருத்தியாளரை ஒத்தனர்[தொகு]

435

வாளில் வெட்டி வாரணக்கை தோளி லிட்ட மைந்தர் தாம்
தோளி லிட்டு நீர்வி டுந் துருத்தி யாள ரொப்பரே. 32

வில் வீரர் செயல்[தொகு]

436

நேர்முனையிற் றொடுத்த பகழிகள் நேர்வளைவிற் சுழற்று மளவினின்
மார்பிடையிற் குளித்த பகழியை வார்சிலையிற் றொடுத்து விடுவரே. 33

குதிரை வீரர் செயல்[தொகு]

437

அசையவுரத் தழுத்தி யிவுளியை அடுசவளத் தெடுத்த பொழுதவை
விசையமகட் கெடுத்த கொடியென விருதர்களத் தெடுத்து வருவரே. 34

தொடை அறுந்த வீரர் செயல்[தொகு]

438

இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட
ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே. 35

வாள் வீரர் மடிந்தனர்[தொகு]

439

இருவருரத் தினுற்ற சுரிகையின் எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில்
ஒருவரெனக் கிடைத்த பொழுதினில் உபயபலத் தெடுத்த தரவமே. 36

யானை வீரரோடு பொருநர்[தொகு]

440

பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் புகர்முக மிசையடி யிட்ட திற்பகை
விருதரை யரிவர்சி ரத்தை யச்சிரம் விழுபொழு தறையெனு மக்க ளிற்றையே. 37

படைக்கருவி இல்லாதவர் செயல்[தொகு]

441

விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் விரைபரி விழவெறி தற்கு முற்பட
அடுகரி நுதற்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. 38

வீரர்கள் நாணினர்[தொகு]

442

அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் அடுகரி நுதலில டிப்ப ரிக்களி
றெமதென விருகண்வி ழிக்க வுட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. 39

கருணாகரன் போரில் ஈடுபட்டான்[தொகு]

443

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ்கரு ணாக ரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே. 40

இருபடைகளும் வெற்றிகாண முற்படல்[தொகு]

444

உபய பலமும்வி டாது வெஞ்சமம் உடலு பொழுதினில் வாகை முன்கொள
அபயன் விடுபடை யேழ்க லிங்கமும் அடைய வொருமுக மாகி முந்தவே. 41

இருபுறப் படைகளும் அழிந்தன[தொகு]

445

அணிக ளொருமுக மாக வுந்தின அமர ரமரது காண முந்தினர்
துணிகள் படமத மாமு றிந்தன துரக நிரையொடு தேர்மு றிந்தவே. 42

காலாட் படையின் அழிவு[தொகு]

446

விருத ரிருதுணி பார்நி றைந்தன விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன
குருதி குரைகடல் போற்ப ரந்தன குடர்கள் குருதியின் மேன்மி தந்தவே. 43

களத்தில் பேரொலி[தொகு]

447

கரிகள் கருவிக ளோடு சிந்தின கழுகு நரியொடு காக முண்டன
திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. 44

அனந்தவன்மன் தோற்று ஓடினான்[தொகு]

448

புரசை மதமலை யாயி ரங்கொடு பொருவ மெனவரு மேழ்க லிங்கர்தம்
அரச னுரைசெய்த வாண்மை யுங்கெட அமரி லெதிர்விழி யாதொ துங்கியே. 45

449

அறியு முழைகளி லோப துங்கிய தரிய பிலனிடை யோம றைந்தது
செறியு மடவியி லோக ரந்தது தெரிய வரியதெ னாவ டங்கவே. 46

கலிங்கர் நடுங்கினர்[தொகு]

450

எதுகொ லிதுவிது மாயை யொன்றுகொல் எரிகொன் மறலிகொ லூழி யின்கடை
அதுகொ லெனவல றாவி ழுந்தனர் அலதி குலதியொ டேழ்க லிங்கரே. 47

கலிங்கர் சிதைந்தோடினர்[தொகு]

451

வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவ ரொருவழி போக லின்றியே. 48

452

ஒருவ ரொருவரி னோட முந்தினர் உடலி னிழலினை யோட வஞ்சினர்
அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபய மபயமெ னாந டுங்கியே. 49

குகைகளில் நுழைந்தனர்[தொகு]

453

மழைக ளதிர்வன போலு டன்றன வளவன் விடுபடை வேழ மென்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரி லின்றுநம் முதுகு செயுமுப கார மென்பரே. 50

கலிங்கம் இழந்த கலிங்கர்[தொகு]

454

ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே. 51

== சோழர் யானை குதிரைகளைக் கைப்பற்றினர் -- 455

அப்படிக் கலிங்க ரோட அடர்த்தெறி சேனை வீரர்
கைப்படு களிறும் மாவுங் கணித்துரைப் பவர்கள் யாரே. 52

களிறுகளின் தன்மை[தொகு]

456

புண்டரு குருதி பாயப் பொழிதரு கடமும் பாய
வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். 53

457

ஒட்டறப் பட்ட போரி லூர்பவர் தம்மை வீசிக்
கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். 54

458

வரைசில புலிக ளோடு வந்துகட் டுண்ட வேபோல்
அரைசருந் தாமுங் கட்டுண் டகப்பட்ட களிற நேகம். 55

சோழ வீரர்கள் கைப்பற்றியவை[தொகு]

459

நடைவ யப்பரி யிரத மொட்டகம் நவநி திக்குல மகளிரென்
றடைவ வப்பொழு தவர்கள் கைக்கொளும் அவைக ணிப்பது மருமையே. 56

கருணாகரன் கட்டளை இட்டான்[தொகு]

460

இவைக வர்ந்தபி னெழுக லிங்கர்தம் இறையை யுங்கொடு பெயர்துமென்
றவனி ருந்துழி யறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. 57

ஒற்றர்கள் தேடினர்[தொகு]

461

உரைகள் பிற்படு மளவி லொற்றர்கள் ஒலிக டற்படை கடிதுபோய்
வரைக ளிற்புடை தடவி யப்படி வனமி லைப்புரை தடவியே. 58

ஒற்றர்களின் பேச்சு[தொகு]

462

சுவடு பெற்றில மவனை மற்றொரு சுவடு பெற்றன மொருமலைக்
குவடு பற்றிய தவன டற்படை அதுகு ணிப்பரி தெனலுமே. 59

மலையை அடைந்தனர்[தொகு]

463

எக்குவடு மெக்கடலு மெந்தக் காடும் இனிக்கலிங்கர்க் கரணாவ தின்றே நாளும்
அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமனக் குவடணையு மளவிற் சென்றே. 60

விடியளவும் வெற்பைக் காத்தனர்[தொகு]

464

தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. 61

மலை சிவந்தது[தொகு]

465

செம்மலையா யொளிபடைத்த தியாதோ வென்றுஞ்
செங்கதிரோ னுதயஞ்செய் துதய மென்னும்
அம்மலையோ விம்மலையு மென்னத் தெவ்வர்
அழிகுருதி நதிபரக்க வறுக்கும் போழ்தில். 62

சிலர் திகம்பரரானார்[தொகு]

466

வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யேற்றி
வன்றூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்க முரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே. 63

சிலர் வேதியரானார்[தொகு]

467

வேடத்தாற் குறையாது முந்நூ லாக
வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டேங் கரந்தோ மென்றே
அரிதனைவிட் டுயிர்பிழைத்தா ரநேக ராங்கே. 64

சிலர் புத்தத் துறவியரானார்[தொகு]

468

குறியாகக் குருதிகொடி யாடை யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்
தறியீரோ சாக்கியரை யுடைகண் டாலென்
அப்புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே. 65

சிலர் பாணர் ஆனார்[தொகு]

469

சேனைமடி களங்கண்டேந் திகைத்து நின்றேம்
தெலுங்கரே மென்றுசில கலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்
டடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே. 66

கலிங்க வீரர் முற்றும் அழிந்தனர்[தொகு]

470

இவர்கண்மே லினியொருவர் பிழைத்தா ரில்லை
எழுகலிங்கத் தோவியர்க ளெழுதி வைத்த
சுவர்கண்மே லுடலன்றி யுடல்க ளெங்குந்
தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் னடைய வாங்கே. 67

அடி சூடினான் தொண்டைமான்[தொகு]

471

கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே. 68