ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/உண்ணாவிரதம்

விக்கிமூலம் இலிருந்து


உண்ணாவிரதம்

ஒரு தண்டனை!

"ழுந்திருக்கப்படாதோ, சாப்பாட்டுக்கு! நேரமாகவில்லையோ? ஓயாது, வளவளன்னு வாயாடிண்டே இருக்கேள். இந்த அடுத்தாத்து அழுமூஞ்சி வந்தாலே இப்படித்தான் ஆறது. அதுக்குத்தான் வீடு வாசலைப் பத்தின கவலையே சிடையாது; நீரும் அப்படித்தானோ" என்று சகதர்மிணி சற்று காரசாரமாகப் பேசி, சாப்பாட்டுக்குச் 'சம்மன் சார்வு' செய்தது கண்ட, சாட்சாத் சனாதனி கோபத்தைச் சோகத்தால் மறைத்துக்கொண்டு, "நேக்கென்னமோ வயத்தைப் பசிக்கல்லே,போய் சாப்டூட்டுப் படுத்துத் தூங்கு, உசிரை வாங்கிண்டு இராதே" என்று கூறினார். சத்தர்மணிக்குக் கோபம் குறைந்து, புருஷன் மீது கொஞ்சம் கனிவு பிறந்தது. "கொஞ்சம், விளாங்காயளவு சாப்டூட்டுப் படுத்துத் தூங்குங்கோ. இராத்திரியிலே, வெறுமனே படுத்தா வயத்தைப் பிறட்டுமே" என்று கெஞ்சினாள், கொஞ்சம் கொஞ்சுதலையும் கூடக் கலந்து உண்மைதானே, நடுநிசியிலே, இந்த நாசமாப்போன பசி வந்தால் என்ன செய்வது, அது வந்தால் பத்தும் பறக்குமே என்று பயந்தார். ஆனால், அடுத்தாத்து ஐயருக்குக் கொடுத்த வாக்குறுதியையோ, மீற முடியாது. மீறினால் சூளத்தங்கரையிலே அமளிபடும். இருபுறமும் இடி. சனாதன சர்மா, சற்று யோசித்தார். "சரி என்ன சாப்பாடு செய்திருக்கப்போகிறார்கள் வீட்டிலே" என்று. அவர் மனதை அறிந்துரைப்பதுபோல, சகதர்மிணி கூறலானாள். "வெங்காயச் சாம்பார் அருமையா இருக்கு. அப்பளம் பொறிச்சிருக்கேன். வத்தலும் இருக்கு. கொத்தமல்லி துவையல் ஜோரா செய்திருக்கேன்" என்றாள். கொத்தமல்லி துவையலைப் போட்டுப் பிசைந்து, நெய் இரண்டு கரண்டி தாராளமாகப் போட்டு ஒரு பிடி சாப்பிட்டால், ரம்மியமாக இருக்குமே என்று சனாதனி எண்ணினார். அப்படிச் செய்வதற்கில்லையே என்பது மனதிலே உறுத்தியபோது, கோபம் கொழுந்துவிட்டு எரியலாயிற்று "சரி, சரி, போதும், உன் சாம்பாரும் துவையலும். நான் இன்னக்கிச் சாப்பிடமாட்டேன். உண்ணாவிரதம் இருக்கிறேன். ஒரு காரியமா, நாங்க சிலபேர் சேர்ந்துண்டு இன்று ஒரு சபதம் செய்துண்டோம், உண்ணாவிரதமிருக்கிறதுன்னு" என்று சனாதனி சடசடவென் மொழிந்தார். சகதர்மிணியின் சிரிப்பு அவருக்குப் பச்சை மிளகாயைக் கடித்துவிட்டால் உண்டாகும் எரிச்சலைப்போல உபத்திரவமுண்டாக்கிற்று. "உண்ணாவிரதமோ! அப்போ, ஆரஞ்சு ஒரு டஜன் தேவையில்லையோ?” என்று கேலி பேசலானாள்."ஆரஞ்சா? எதுவுயே சாப்பிடப் போரதில்லேடி ஆமாம்,சர்வ பரித்தியாகத்துக்கும் தயாராக இருக்கும் பரம்பரையன்னோ. கவனமில்லையோ?" என்று சனாதனி, உபதேசம் புரியலானார். "உண்ணாவிரதம்னு சொன்னீரே, உண்ணாவிரதமிருக்கும்போது, ஆரஞ்சுப் பழ ரசம் சாப்பிடுவான்னு சொன்னா பாருங்கோ, அதுபோலத்தானாக்குனு நெனைச்சேன். இந்தப் பித்துக்குளி யோசனை ஏன் உதிச்சுது உமக்கு. பேசாமே எழுந்துவாரும். நாளை காலையிலே ஸ்தானம் செய்யறபோது இரண்டு எலுமிச்சம் பழத்தை நன்னா தலையிலே தேச்சி, முழுகுங்கோ!" என்று சகதர்மணி வைத்யமே கூறிவிட்டாள். "போதும் வாயை மூடிண்டு போடி! புருஷாளுடைய கையை எதிர்பார்த்து இருக்கும் போதே, இத்தனை கெர்வமிருக்கு. வாயிருக்கு. இவாளுக்குச் சொத்து பாத்யதை வேறே தேவையாம்! கலி முடிஞ்சும், இந்தச் சனியன் பிடிச்சவா தொல்லை தீரவில்லை! என்றார். சனாதனி,"என்னத்தைக் குளறிண்டிருக்கேர்? நேக்கொண்ணும் புரியல்லையே?" என்று சகதர்மிணி கேட்டாள். "இந்த சர்க்கார் இருக்காளேன்னோ, அவ இப்ப அபூர்வமா ஒரு யோசனை சொல்றா. ஸ்திரிகளுக்குச் சொத்து பாத்யதை தரணுமாம். ஒரு குடும்பத்திலே, ஆண்தானே ஆளப் பிறந்தவாளுன்னு ஆகிநாட்களிலிருந்து சொல்வா. இஷ்வாகு பரம்பரையென்ன, இரகு வம்சமென்ன, முனிவர்களென்ன, இவாளுடைய முறைகள் தவறாம். இப்போ, பெண்களுக்கும் சொத்து தர சட்டம் கொண்டுவரப் போறா. அதைக் கண்டிக்க, நாங்க தீர்மானிச்சுட்டோம், உண்ணாவிரதம் அதுக்காகத்தான்" என்றார் சனாதனி, ரோஷத்தோடு. சகதர்மிணிக்குச் சிரிப்புக்குப் பதில் சீற்றம் பிறந்தது. முந்தானியை இழுத்துச் செருகினாள். தொண்டையைக் கனைத்தாள். பெண்களுக்குச் சொத்து வாரிசு கூடாதா? அதுக்காக உண்ணாவிரதம் இருக்கேளா? ரொம்ப சரியாச்சி. பெண்களை, இந்த ஆண்கள், ஆதிநாட்களிலிருந்து படுத்தின பாடு இருக்கே, அதுக்கு, 'இந்தப் பெண்களுக்கு மட்டும், ரோஷம் மானம் இருந்திருக்குமானா நிரந்தரமா உண்ணாவிரதம் இருக்கும்படியா ஆண்களைச் செய்திருக்கணுமே. உண்ணாவிரதமா இருக்கப் போறேள்! ஊர் நாடு கேட்டுச் சிரிக்கட்டும், இப்படி அழுக்கு மூட்டைகள் இந்தக் காலத்திலேயும் இருக்குமோன்னு? சாட்சாத் அவதாரமுன்னு கொண்டாடும் இராமன் முதற்கொண்டு, பெண்கள் விஷயமா அக்ரமந்தானே செய்தா. லோக நாயகியை, கர்ப்பிணியா இருக்கச்சே கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டூட்டு வரச் சொல்லலையோ அந்த இராமன்" என்று சகதர்மிணி. ஆதியிலிருந்து அந்தம்வரை ஒரு குலுக்கு குலுக்குவதென்ற தீர்மானத்திலே, பேசலானாள். தனக்கு மட்டுமல்ல, தாசரதிக்கே இடி கிடைக்கிறது என்று சனாதனிச் சர்மாவுக்குக் கோபம் பிறந்துவிட்டது. "இராமன் செய்த காரியத்தைப் பழிக்கிறயோ? அந்தச் சீதை, ஏண்டி இராவணனுடைய கிரஹத்திலே, பத்து மாதம் இருந்தா? பத்து மாத காலம் பரக் கிரஹத்திலே ஒருவள் வாசம் செய்தா, அவளைப்பற்றிச் சந்தேகம் உதிக்காதோ" என்று இராமருக்கு, ஐயர் வக்கீலானார். சகதர்மிணி இதற்குப் பயப்படவில்லை. "ஏன் இருந்தாளா? அந்த இராமன் செய்த காரியத்தாலேதான், சீதாவுக்கு அந்தக் கதி ஏற்பட்டது" என்று டிபென்சு தரப்பு ஆரம்பித்து, "அந்தச் சூர்ப்பனகையைக் காது மூக்கு அறுத்ததாலே, ராவணனுக்குக் கோபம் பிறந்து, சீதையைத் தூக்கிக்கொண்டுபோனான்" என்றாள். "அப்படின்னா, சூர்ப்பனகையை இராமன் பாணிக் கிரகணம் செய்துண்டு வாழணும்னு பேசறியோ நீ. ஏண்டி நோக்கு சாஸ்திரமென்னடி தெரியும்? தாரமிருக்கும்போது தசரதகுமாரன், சூர்ப்பனகையை எப்படியடி ஏற்றுக் கொள்ளமுடியும்?” என்று குறுக்குக் கேள்வி போட்டார், ஐயர். ஒருவள் இருக்கையிலே இன்னொருவள் கூடாதுன்னு எந்தச் சாஸ்திரம் சொல்கிறது? யார் அதுபோல் நடந்தா? தசாதனுக்கு 60 ஆயிரமாமே! அவன் நாசமாய்ப் போக, அறுபகாயிரம் மனைவி வைச்சிண்டு இருந்தானாமே? அவன் மகனுக்கு ஒண்ணேபோதும்னு, வேறொருத்திவந்தா அவளைப் பங்கம் செய்கிறதுதான் நியாயம்னு தோணும்போலிருக்கு! ரொம்ப நியாயமன்னோ அவன் செய்தது' என்று சகதர்மிணி பெண் சிங்கம்போலக் கர்ஜித்தாள். "பேசுவது நீ இல்லையடி, காலமென்னும் பேய் பேசுகிறது. துர்ப்பாக்கியம் உன் மூலமாக உலகுக்குத் தூது விடறது. தமயந்தி, சாவித்ரி,நளாயனி முதலானவா ஜனித்த புண்ய பூமியிலே, இந்தக் காளன்கள் முளைச்சிருக்கு" என்று ஐயர்,வாதத்தை நிறுத்தி, விசாரத்திலே பேச்சைத் திருப்பினார். வாயை அடக்கிவிட்டோம் என்ற பூரிப்புடன், சகதர்மிணி, "ஆண்களுக்குத்தான் சொத்து உண்டு, பெண்களுக்குச் சொத்து கூடாது எனப் பேசுகிறவாமடையரேன்னோ? தாய் வயிற்றிலே பிறந்து, தாய்க்குலத்துக்கே துரோகம் செய்து செய்துதான், தர்மமே க்ஷிணித்துவிட்டது, இந்தத் தேசத்திலே. பெண்ணாப் பிறந்தா, என்ன பாவமோ? பெண்ணில்லாமே ஆண்கள் வாழுவாளோ? வாழ்றது கிடக்கட்டும்! இவாளுடைய ஜெனனமே, பெண்களால்தானே? சொத்து இவாளுக்கு, சுகம் இவாளுக்கு; உழைக்க நாங்க. இந்தக் கேடுகெட்ட புத்தி இருக்கும் வரையிலே, நாடு உருப்படாது, நாசமாகத்தான் போகும்" என்று சபித்துவிட்டு, மறுபடி, சாப்பிட வருகிறீரா என்று கணவரைக் கூப்பிடாமல் சென்று, சம்பா சாதத்திலே கொத்தமல்லித் துவையலைக் கலந்து, நாலு கரண்டி நெய் வார்த்துக்கொண்டு சாம்பாரையும் கொஞ்சம் சுவைத்துத் தின்றாள். பிறகு, சாம்பாரைச் சாதத்துடன் கலந்து, வற்றலை நறநறவெனக் கடித்தாள். அந்தச் சத்தம் கூடத்து ஊஞ்சலில் சாய்ந்துகொண்டிருந்த சனாதனசர்மாவுக்கு, ஜெர்மன், ஜப்பான் வெடிகுண்டு சத்தத்தைவிட வேதனையைத்தான் தந்தது. ஆனாலும் பாவம், அவர் என்ன செய்யமுடியும்? வாக்குக் கொடுத்து விட்டாரே!

இந்திய மத்ய சட்ட சபையினர், பெண்களுக்கும், ஆண்கள் போலவே சொத்துரிமை தரவேண்டும் என்ற முயற்சி செய்வது, இந்நாட்டிலே உள்ள, கேது ராகுக்களுக்குப் பிடிக்கவில்லை. சாஸ்திரம். தருமம் என்ற சாக்குவைத்துக்கொண்டு, சளகளவெனப் பேசலாயின. இந்த வைதீக வறட்டுக் கூச்சலை யாரும் பொருட்படுத்துவதாகக்காணோம். எனவே, சக்தியால் சாய்க்கமுடியாததை, யுக்தியால் சாதிக்க யோசித்து, உண்ணாவிரதம் இருப்பது என்று, லட்சுமணபுரி வைதீகப் பிரகிருதிகள் தீர்மானித்தனவாம். பெண்களுக்குச் சொத்துரிமை தருவதைத் தடுக்க, இந்த வீரர்கள், இவ்வழியைக் கண்டுபிடித்தது கண்ட, அவர்களின் சகதர்மிணிகள், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் மசோதா நிறைவேறித்தானாக வேண்டும், அதற்காக, நாங்கள் உண்ணாவிரதமிருக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு, அனுமார் ஆலயத்திலே பூஜை செய்துவிட்டு உண்ணாவிரதத்தைத் துவக்கினர், என்று ஓர் செய்தி, 15—10—43 சுதேசமித்திரனில் காணப்படுகிறது.

நமது கதையிலே, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சனாதன சர்மா, அந்த ரகம்! அவரும், உண்ணாவிரதம் இருக்கலானார், சில பழய பஞ்சாங்கங்களின் தூண்டுதலால்.லட்சுமணபுரி சனாதனிகளின் மனைவிமாரைப் போன்ற பைத்யமல்ல, நமது கதையிலே வரும், அம்மையார். பெண்களுக்குத் துரோகம் செய்யும் பேர்வழிகள், உண்ணாவிரதமிருப்பது, அவர்கள் அடையவேண்டிய தண்டனையே அனுபவிக்கட்டும், நமக்கென்ன, என்று எண்ணி வழக்கமாகச் சாப்பிடுவதுபோல் அன்றும் அந்த அம்மையார் சாப்பிட்டார்கள். வாயினால், வயிற்றுக்கு வம்பை வருவித்துக்கொண்ட சனாதன சர்மா, சாம்பாரின் சுவையையும், துவையலின் மணத்தையும், வற்றலின் மொறமொறப்பையும், எண்ணினார் ஏங்கினார். தூங்கினால் துயரம்போகும் என்றெண்ணிக் கண்ணை மூடினார், வயிறுகிள்ளுவது பொறுக்கமுடியாது புரண்டார், புலம்புவதற்குப் பதிலாக, "இராமா! ரகுநந்தனா!ரகுபதே! லோகரட்சகா! என்று கூவிக்கொண்டிருந்தார். இதற்குள், அம்மையார், தெருவாசற்படிக்கு வந்து நின்றார்கள் உரத்த குரலிலே, "அடி! அலமு! அலமு! என்று கூப்பிடவே, எதிர் வீட்டிலிருந்து ஒரு குட்டி ஓடிவந்து, "அத்தே! கூப்பிட்டேளா?" என்று கேட்டாள். "ஆமாண்டி அசடே கொத்தமல்லி துவையலிருக்கு. நோக்கு வேண்டுமோ?" என்று கேட்டாள் சகதர்மிணி. "கொத்தமல்லித் துவையலா? நீங்க செய்தா அது ரொம்ப நன்னாயிருக்குமே. கொடுங்கோ அத்தே" என்று குட்டி சந்தோஷத்தோடு கேட்டாள். துவையல், வற்றல், சாம்பார்,தனித் தனிப் பாத்திரத்திலே, எதிர்வீடு போய்ச் சேரக் கண்டார் சர்மா. "சர்வேஸ்வரா, லோகாட்சகா" என்று அலறிக்கொண்டே, தெருத் திண்ணைக்குச் சென்று அமர்ந்தார். பக்கத்து வீட்டுக்காரர்தான்,சர்மாவை, உண்ணாவிரதம் இருக்கும்படி தூண்டியவர்; சத்யம் வாங்கியவர். அவர், சாருமணையிலே சாய்ந்துகொண்டிருந்தார். அவருடைய திருவாயிலிருந்து சர்வேஸ்வரா போன்ற சத்தம் வரவில்லை. மெல்லிய குறட்டைதான் வந்துகொண்டிருந்தது. சர்மா மெள்ள எழுந்தார். தள்ளாடிக்கொண்டு பக்கத்து வீடு சென்றார். "ஒய் குப்பு சாஸ்திரி! என்ன குறட்டை பலமாக இருக்கே" என்று கேட்டுக்கொண்டே தோளைப் பிடித்துக் குலுக்கி எழுப்பினார். திடீரென விழித்துக்கொண்ட சாஸ்திரியார். "அக்கார வடிசலுக்கே கொஞ்சம் மயக்கமூட்டும் சுபாவம் உண்டுபோலிருக்கு; அதைக் கொஞ்சம், இரண்டுகை அதிகமாச் சாப்டுட்டேன், ஒரேமந்தமா இருக்கு, சித்தெ கண்ணை மூடினேன்" என்றார். சர்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "என்ன ஓய் சொல்றேள்? அக்கார வடிசல் சாப்டீரா? அட பாவிப் பிராமணா! என்னை உண்ணாவிரதம் இருக்கச் சொன்னீரே" என்று ஆத்திரத்தோடு கேட்டார். குப்பு சாஸ்திரிக்கு அப்போதுதான் நினைவு வந்தது. "அடடா! என்ன முட்டாள்தனம் செய்துவிட்டோம், அரைத்தூக்கத்திலே, உளறிவிட்டோமே. நமது குட்டு வெளிப்பட்டுவிட்டதே" என்று பதறி "இப்ப சாப்பிடவில்லை ஓய்! காலையிலே சாப்பிட்டது" என்று இழுத்தார். அவருடைய பேரன், கிட்டுப்பயல் ஒரு போக்கிரி. "ஏன் தாத்தா! புளுகிண்டிருக்கே. ஓய், மாமா! எங்காத்லே இப்போதான் அக்கார வடிசல் செய்தா" என்று உண்மையை உரைத்துவிட்டான். உள்ளே இருந்தும் ஒரு குரல் “பக்கத்தாத்து சர்மாவா? உமக்கும் ஒரு வட்டிலிலே தரட்டுமோ, கொஞ்சம் இருக்கு" என்று கேட்டது. குப்பு சாஸ்திரியின் முகத்திலே அசடு வழிந்தது. சர்மா, கோபத்தோடு, 'ஓய் நீர் ஓர் அயோக்யராக்கும். என்னை உண்ணாவிரதமிருக்கச் சொன்னீர். நீரும் இருப்பதா சத்யம் செய்தீர். இப்படி யாருங்காணும் சத்யம் செய்தூட்டு, திருட்டுத்தனமாச் சாப்பிடச் சொன்னா? உம்ம மானத்தை வாங்கவேண்டாமோ?" என்று சீறினார். குப்பு சாஸ்திரிக்குக் குளறத்தான் முடிந்தது. "இதோ பாருங்கொ சர்மா, இதைக் கேளுங்கோ..." என்று ஏதோ சமாதானம் செய்ய முயற்சித்தார். "என்னத்தைப் பார்க்குறதும், கேக்கறதும். இப்படிப்பட்ட அசத்யவாளர் இருந்தாலும், இவாளுக்குச் சொத்து உண்டு, பெண்களுக்கு இல்லைன்னு முறை இருப்பது ஒழிஞ்சாகவே வேணும், உம்மைப் போன்றவாளுடைய கொட்டம் அடங்க" என்று கூறிவிட்டு, வீட்டிற்கு வந்தார்! "ஏண்டி! சாம்பார் வத்தல்,துவையல் பூராவுமே தானம் செய்தூட்டாயோ,ஏதாகிலும் கொஞ்சமாவது இருக்கோ" என்று சகதர்மிணியைக் கேட்டார். "வயத்தைக் கிள்றதோ" என்று சகதர்மிணி கேட்டாள். "இல்லடி, நான் உங்க கட்சியிலே சேர்ந்துண்டேன். இலை போடு. இந்தப் பக்கத்தாத்துப் பாவி பேச்சைக் கேட்டு உண்ணாவிரதமிருக்கலாமென நினைச்சேன். அவன் என்ன செய்தான் தெரியுமோ? என்னை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே போய் அக்கார வடிசலை வயிறு கிழியச் சாப்டூட்டு,வாசத் திண்ணையிலே படுத்துப் புரள்றான். அவன்தான், பெண்களுக்குச் சொத்து தரலாமோ, சாஸ்திர விரோதமன்னோ, வேதகால ஏற்பாடு பாழாகலாமோன்னு பிதற்றினான். பேஷா தரணும், பெண்களுக்குச் சொத்து. ஐஸ்வரியத்துக்கே, லக்ஷிமி தேவின்னா அதிகாரி. பெண்கள், லக்ஷிமி அம்சமன்னோ, அவாளுக்குச் சொத்து பாதியதை இல்லைன்னு சொல்றது, முட்டாள்தனமன்னோ என்று சர்மா, மசோதாவை ஆதரித்துப் பேசினார்.

"அப்படிச் சொல்லுங்கோ! ஆதி நாட்கள், ஆதி நாட்கள் என்று பேசினா போதுமா? அறிவுக்குச் சரியானதுன்னு தோணினா, அனுசரிக்கத்தானே வேண்டும். இனிமேல், இந்தச் சட்டம் சீக்கிரம் வரணும்னு பேசும்" என்று புத்தி கூறினாள் சகதர்மிணி. "சரி! சாப்டூட்டுப் பேசுவோமே!" என்று காரியத்தைக் கவனப்படுத்தினார்,சர்மா. அந்தச் சாம்பாரும், துகையலும், வத்தலும், உள்ளேபோனால்தான், உறக்கம் வரும். ஆனால், பாவம்! அவர் அழாதது ஒன்று தான் பாக்கி, அம்மையாரின் மொழி கேட்டு, என்ன அது! "இப்போது ஏது,சாதம்? எல்லாம் எதிராத்துக்குக்கொடுத்தாச்சே. பாத்திரத்தைக்கூட அலம்பி ஆயிடுத்தே" என்றாள் அந்த அம்மையார். உள்ளே போய்ப் பார்த்தார். பள பளவெனப் பிரகாசித்தன பாத்திரங்கள். அவரைப் பார்த்துக் கேலியுடன் சிரித்தது.


திராவிடநாடு அச்சகம், காஞ்சிபுரம்