ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/அன்னதானம்

விக்கிமூலம் இலிருந்து


அன்னதானம்


"அவன் பிழைக்கும் வழி, சார் அது" என்ற பேச்சு, சதா என் நண்பனிடமிருந்து பிறக்கும்! கோயில் குளம், கும்பாபிஷேகம் திருவிழா, சடங்கு, சாமியாடல், முதலிய எந்தக் காரியத்துக்கும் அவன் வைத்துவிடும் பொதுப் பெயர், பிழைப்பு. ஆதிலும் அவன் கூறும் கடுமையான மொழிப்படி சொல்கிறேன், வெட்கங்கேட்ட, சுரண்டும் பிழைப்பு!

அவன் பேச்சிலே காரம் அதிகம்; சாரம் இருப்பதாகத்தான் அவன் எண்ணினான், நான் ஒப்புக்கொள்வதில்லை. நான் என்ன அவனைப்போல சூனாமானாவா என்ன? சைவன்! சத்கதா காலட்சேபங்களுக்கு எப்போதும் இடமளித்து வந்த உத்தம குடும்பத்தினன்.

நண்பன் நாகராஜன் சூனாமானாவுடன் ளதற்கும் காரணம் கேட்பது, எதையும் கண்டிப்பது என்ற வழக்கத்தைக் கொண்டான். ஆனால் அவனுடைய கண்டனத்துக்கும் காரணங் காட்டாதிருப்பதில்லை. நான் அவ்வளவாக அவன் கூறும் காரணங்களைக் கவனித்துக் கேட்பதில்லை. என்ன வேடிக்கை ஐயா இது, நீரும் காரணம் கூறுவதில்லை, அந்தச் சூனாமானா கூறும் காரணத்தையும் கவனித்துக் கேட்பதில்லை என்று கூறுகிறீரே, என்று கேட்பீர்கள். என்ன செய்வது, எனக்கு நம்பிக்கையைவிட என் நண்பனுடைய வாதம், அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றவில்லை. அதிலும் சில சமயங்களிலே, நான் எது சிறந்தது, சிலாக்கியமானது என்று முடிவு செய்கிறேனோ, அதே விஷயத்தைக் கேடானது கேவலமானது என்று நாகன் கூறுவான்,எனக்குக் கோபங்கூடத்தான் வரும். வந்து பயன்? விகள் ஒரு சாது; பாவம், தள்ளாடும் நடை,நரைத்த தலை, அடக்கமான பேச்சு, அமரிக்கையான சுபாவம், எங்கள் கிராமத்துக்கு வந்தார். கிராம முக்கியஸ்தர் என்ற முறையிலே, என்னைவந்து பார்த்தார். ஒருவேளை, ஏதோ எங்கள் வீட்டிலுள்ளதைச் சாப்பிட்டார். அவ்வளவுதான்; பணம் கேட்கவில்லை, பட்டுபீதாம்பரம் கேட்கவில்லை, ஒரு தொல்லையும் தரவில்லை. தொல்லை தராதது மட்டுமா! எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார் தெரியுமோ? தோட்டக்காரன் மகள் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அவனும், என்னென்னமோ மருந்து கொடுத்தான். அவன் சலித்தானே தவிர நோய் குறையவில்லை. அன்று, அதாவது 'சாது' எங்கள் வீட்டிலே தங்கியிருந்த, அன்று, அந்தப்பெண்ணுக்கு ஆபத்தாகிவிட்டது. உயிர் போவுதுங்க என்று ஒரு கூச்சலிட்டான் தோட்டக்காரன். என் மனமே பதறிவிட்டது. சாது, ஒரு ஓட்டமாக ஓடினார் அவன் வீட்டுக்கு. ஏதோ விபூதி மந்திரித்துக் கொடுத்தார்; பெண்னுக்குத் தெளிவு பிறந்தது. தோட்டக்காரன் சாதுவின் காலில் விழப்போனான். அவர் அவனைத் தூக்கி நிறுத்தி "அவனைக் கும்பிடு" என்று ஆகாயகத்தைக் காட்டினார்.

சாதுவிடம் எனக்குக் கொஞ்சம் மதிப்பு ஏற்பட்டதிலே ஆச்சரியமுண்டா? அவரிடம் பேசினேன், அவர் சொன்னார், தன இலட்சியத்தை. அதாவது கிராமத்திலே ஏழைமக்களின் நோய்கொடியைப் போக்கவும், அவர்களுக்குப் பேய் பிசாசு முதலியவற்றால் உண்டாகும் கேடுகளைத் தீர்க்கவும் ஒரு ஆசிரமம் ஏற்படுத்த வேண்டுமென்றார். இதிலென்னய்யா மோசம் இருக்கிறது? நாகராஜன் இது கேட்டதும், ஆரம்பித்துவிட்டான் வழக்கப்படி.

"வாங்கோ புண்யாத்மா!" என்று என்னைக் கேலியாக அழைத்தான்.

"போடா துராத்மா!" என்று நானும் திருப்பிக்கொடுத்தேன்,வட்டியுடன்.

"ஆமாம்.யாரது ஒரு மடாத்மா இருக்கிறானாமே உன் வீட்டிலே" என்று கேட்டான் நாகன்.

"துடுக்காகப் பேசாதே நாகா! அந்தச் சாது, யார் ஜோலிக்கும் வருபவரல்ல" என்று நான் கூறினேன்.

"பிரபோ! மன்னிக்கவேண்டும்" என்று கூறினான், மறுபடியும் கேலியாக.

"வேடிக்கை வேண்டாம். அனாவசியமாக அந்த ஆளை மடாத்மா என்று கூறி மனம் நோகச் செய்யாதே. அந்தச் சாது, நமது கிராமத்திலே, ஒரு சேவாசிரமம் ஏற்படுத்தப் போகிறார்" என்று நான் செய்தியைத் தெரிவித்தேன்.

'அவனுக்காக ஒரு சேவாசிரமம் ஏற்படுத்தப் போகிறேன் என்று சொல்" என்று என்னைத் திருத்தினான் நண்பன்.

ஆமாம், அப்படித்தான்," என்று நான் கூறினேன்.

"அதனாலே தான் உன்னைப் புண்யாத்மா என்று நான் அழைத்தேன். இனிமேல் உனக்குப் பட்டம் கிட்டாமலா போகும்? அண்ணனைக் காட்டிக் கொடுத்தவன் ஆழ்வாரானான். இதோ நீ புத்தியைப் பறிகொடுத்துவிட்டுப் புண்யவானாகப் போகிறாய்" என்று நண்பன் கண்டிக்கத் தொடங்கினான். நான் மேற்கொண்டு பேச்சை ஒட்டவில்லை. எனக்குத்தான் தெரியுமே சூனாமானாவின் சுபாவம்!

"ஏதோ பெரியவர்கள் தேடி வைத்த சொத்தை ஏனப்பா பாழ்படுத்துகிறாய்? உன்னைப்போன்ற பணக்காரரின் பணம் இப்படித்தான் சாது, சன்யாசி, சாமியாடி முதலிய சோம்பேறிகளுக்குப் பாழாகிறது. உழைக்கிறவன் உருமாறிப் போகிறான். இவன் யாரோ ஒரு உருட்டல்காரன். ஏதாவது ஓரிடத்திலே, ஏதாவது அக்ரமம் செய்திருப்பான். அங்கே அடித்து விரட்டி இருப்பார்கள் இங்கே வந்திருக்கிறான் புது மேய்ச்சலுக்கு. வீணாகப் பணத்தைப் பாழாக்காதே" என்று எனக்குப் புத்தி கூறலானான்.

"நாகராஜ் இந்தச் சாதுவைச் சாமான்யமாகக் கருதாதே. இவருக்கு ஆய்சு ஓமம், நவக்கிரக ஜெபம், திலத ஓமம், மார்கண்டஜெபம், கார்கண்டேயஜெபம், காலபயிரவ மூர்த்தி உச்சாடனம், கணபதி ஓமம், கால சாந்தி ஓமம், யாவும் தெரியுமாம்" என்று கூறினேன்."நீ என்ன சொன்னாலும் சரி அவன் ஒரு புரட்டன், சந்தேகமில்லை. இன்று இல்லாவிட்டால் நாளைக்குத் தெரிகிறது. எனக்கென்ன!" என்று கூறிவிட்டுப் போய்விட்டான். ஆஸ்ரமம், அமைப்பது என்று தீர்மானித்துவிட்டேன். அது சம்பந்தமான "நோடீஸ்" போட எங்கள் கிராமத்துக்கு அடுத்திருந்த நகர் சென்று, அங்கு, வெற்றிவேல் பிரஸ் என்ற அச்சகம் போனேன். அந்த அச்சக மேனேஜர், தன் அச்சுக்கூடத்தின் அருமை பெருவைகளைக் கூறலானார். பொறுமையுடன் கேட்டுக்கொண்டேன். தமது அச்சசுத்திலே, வெளியிடப்பட்ட புத்தகங்கள், டிராமா விளம்பரங்கள், கலியாணப் பத்திரங்கள் ஆகிய பலவற்றைக் காட்டினார். சாம்பிளுக்காக இவைகளைத் தைத்து வைத்திருந்தார், பெரிய இராமயணம்போல! அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருந்தேன், நான்கு நோடீசுகள் என் கவனத்தைக் கவர்ந்தன! என் நண்பன் நாகராசனை, என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தின அந்த நோடீசுகள்! என் கண்களைத் திறந்து, என்னைச் சூனாமானாவாக்கின அந்த கோடீசுகளை இதோ பாருங்கள்:


அன்னதானம்!
தானத்தில் எல்லாம் சிறந்த தானம் எது?
அன்னதானம்!
தருமப்பிரபுக்கள் தலைமுறை தலைமுறையாக செய்யும் தானம்எது?
அன்னதானம்!
மோட்சசாம்ராஜ்யத்தில் முதலிடம் கிடைக்கும் வழி எது?
அன்னதானம்!!!

அப்படிப்பட்ட சிலாக்கியமான அன்னதானத்தைக் கொஞ்சமும் குறைவில்லாத முறையில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளிலும், நமது ஊர், சொர்ணவர்ணலேகியக்கம்பெனி சொந்தக்காரர், மகாராஜ ராஜஸ்ரீ சொக்கநாதஞ் செட்டியார் அவர்கள் செய்து வருகிறார். அந்த அன்னதான வைபவத்தின் பெருமையை ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் எடுத்துச் சொல்ல முடியாது. சீமான் செட்டியாருடைய அன்னதான கைங்கரியத்தைக் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலுள்ள பக்திமான்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏழைகள், வயிறார் உண்டு வாயார வாழ்த்துகிறார்கள். இந்த அன்னதானத்துக்காகச் செட்டியார், ஒரு காசுக்கூடவேறொருவரிடமிருந்து வாங்குவதில்லை. எல்லாம் அவருடைய சொந்தச் செலவு ஜெகம் புகழும் அவருடைய சொர்ணவர்ண லேகியம், விற்பதால் கிடைக்கும் வருமானம் அவ்வளவும், அந்த அன்னதானத்துக்கே செலவழிக்கிறார். கலிகாலத்திலே இப்படிப்பட்ட சீமான், பூமான் தோன்றியிருப்பது பகவத் கடாட்சமே.

இப்படிக்கு,
அன்னதானப் பாராட்டு சபையார்
 

வெற்றிவேல் பிரஸ். 3000

ஓம்! சித்திவிநாயகர் துணை.

இதனால் சகலமான கனதனவான்களுக்கும். பக்திமான்களுக்கும், குலச்சிரேஷ்டர்களுக்கும், அன்புடன் தெரிவித்துக்கொள்வதாவது:

நமது நகரக் கோடீஸ்வரர், அன்னதானம் செய்து அகில முழுதும் புகழ்பெற்ற கலிகாலக் கர்ணப் பிரபு, "சொர்ணவர்ண லேகியம்" கம்பெனியின் சொந்தக்காரர், சொக்கநாதஞ் செட்டியார் அவர்கள், இதுவரை செய்திருக்கிற ஏமாளமான தர்ம காரியாதிகளைக் கண்டு மகிழ்ந்து, நமது ஊர்ப் பண்டிதர்கள், ஞானிகள், பிரபுக்கள், மகாஜனங்கள் ஆகியோர் கூடிய மகாசபையில், அன்னாரின் கருணையைப் பாராட்டி, தர்மபூபதி என்று அவருக்குப் பட்டம் அளிக்கப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் மேற்படி வைபவத்துக்குத் தங்கள் இஷ்டஜன பந்து மித்ராளுடன் வந்திருந்து, அவரை வாழ்த்துவதுடன், பட்டமளிப்பு வைபவ விழாவிலே கலந்து கொண்டு கரிமுகப் பெருமானின் கடாட்சத்தைப் பெறுமாறு வேண்டிக்கொள்கிறோம். பட்டமளிப்பு விழா, பழிதீர்த்த பிராட்டியார் கோயில் பழைய மண்டபத்தில் நாளை மாலை (5-1-1925) 6 மணிக்குமேல் நடைபெறும் பட்டமளிப்பு விழா முடிவில், "பன்னிரு கையும் என்னிரு கையும்" என்பதுபற்றி, பரந்தாம சாமிகள் பாடுவார்; இடையிடையே பேசுவார். பாண வேடிக்கை இரவு 11 மணிக்கு உண்டு. மாலை 5 மணியிலிருந்து பாழாகா ஊர் பாண்டு வைத்தியம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் தவறாது வருக!

சுபம்!!

இங்ஙனம்
பட்டமளிப்போர்

வெற்றிவேல் பிரஸ். 5000.


எல்லாம் ஈஸ்வரனுக்கே அர்ப்பணம்

ர்மபூபதி பட்டம் பெற்றவரும், ஏழேழு தலைமுறைக்கும் கீர்த்தி கிடைக்கக்கூடிய அன்னதான கைங்கரியம் செய்து அகிலமெங்கும் புகழ்க்கொடி நாட்டியவரும், ஆண்டவனின் அருளையும், அடியார்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றவரும், சித்த ஆயுர்வேத யூனானி முறைகளோடு கைலாய பரம்பரை முறை எனும் அபூர்வ வைத்தியமுறை தெரிந்தவருமான, தர்மபூபதி, அன்னதான அரசர், அகிலம் புகழும் சித்தாதி வைத்தியகுரு, பக்தவிலாச சொக்கநாதஞ் செட்டியார், பௌர்ணமிதோறும் தயாரித்து பூலோகமெங்கும் தந்து உதவும், சொர்ணவர்ண லேகியம் ஒரு டப்பா சாப்பிட்டவர்கள் தேவாமிருதம் சாப்பிட்டவர்கள் பெறக்கூடிய திவ்யதேஜசும், புதிய பலமும் பெறுவதோடு, நெடு நாளைய நோய் போக்கப்பெற்று, தங்கம் போன்ற மேனியும் இரும்புபோன்ற வலிவும் பெறுவதுடன், சிவானுக்கிரகமும், இஷ்டசித்தியும் பெறுவார்கள். இந்த லேகிய முறை, நமது தர்மபூபதிக்கு, அவருடைய பதினாறாம் வயதிலே பாம்பு உடலும் மனித முகமும் கொண்ட சர்ப்ப தேவர் சொப்பனத்திலே சொன்னது. இந்த லேகிய வியாபாரம், நமது அதிலம் புகழும், அன்னதான அரசரின் சொந்த இலாபத்துக்கு அல்ல. இதிலே கிடைப்பது அவ்வளவும் அன்னதான கைங்கரியத்துக்கே செலவழிக்கப்படும். ஆகவே சொர்ணவர்ண லேகியம் வாங்கி, சர்வரோக நிவாரணம் பெறுவதுடன், புண்ணியமும் அடையுங்கள்.

40 நாள் சாப்பிடக்கூடிய 1 டப்பி விலை ரூ, 6-0-0

ஏக காலத்தில் 3 டப்பிகள் வாங்குபவருக்கு மகிமையுள்ள உருத்திராட்சமாலை இனாமும் அளிக்கப்படும். முந்துங்கள்!.

சொ. வ. லே. கம்பெனி,

வெற்றிவேல் பிரஸ். 20000.

எச்சரிக்கை!

உஷார்!!

மாகாஜனங்களே!

தர்மபூபதி என்றும், அன்னதானம் செய்பவரென்றும், விளம்பரப்படுத்தப்பட்ட சொக்கநாதஞ் செட்டியாரின் குட்டு வெளியாகிவிட்டது.

சிங்கப்பூரில் கொள்ளை அடித்து,ஜெயிலிலிருந்து ஓடிவந்து விட்ட சொக்கன் என்ற பண்டாரமே, இப்படி ஊரை ஏமாற்றிவந்தான்.

அவன் விற்றுவந்த சொர்ண வர்ண லேகியம், அபினி கலந்தது என்று கவர்மெண்டார் கண்டு பிடித்துவிட்டனர். அவன்மீது வாரண்டு புறப்படவே, சொக்கன் கம்பி நீட்டிவிட்டான். போகுமுன்பு,வீட்டிலே வைத்திருந்த ரொக்கம் நகை யாவும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். அவனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, 500-ரூபாய் இனாம்!

ஆள் அடையாளம்

சிகப்பாக, நடுத்தர உயரமாக இப்பான்.

இடது கையிலே, பச்சை குத்தப்பட்டிருக்கும், பாம்பு உருவில்.

சித்தவைத்தியனென்றும் மாந்திரீகம் தெரியுமென்றும் சொல்லிக்கொள்வான்.

இப்படிப்பட்ட அடையாளமுள்ளவனை கண்டால் உடனே போலீசுக்குத் தெரிவியுங்கள். உஷார்! உஷார்!

இப்படிக்கு
பொதுஜனப்பிரியன்.

வெற்றிவேல் பிரஸ் 3000

 

"போதுமா! இன்னமும், வெற்றிவேல் பிரசின் வேலைப் பாட்டுக்கு உதாரணம் காட்டவேண்டுமா? நோடீசுகள் ஒழுங்காக இருக்கும். குறித்த காலத்திலே தருவோம். 1920-ல் ஆரம்பித்தோம், சார்! அதற்கு பிறகு இதே ஊரிலே, காளான்போலக் கிளம்பின எத்தனையோ பிரஸ் ஒன்றாவது நிலைக்கணுமே! அதுதான் கிடையாது. வெற்றிவேல் பிரஸ் என்றால், வெற்றிவேல்தான்" என்று அச்சகத் தோழர், அவருடைய அச்சுக்கூடத்திலே, அதுவரை தயாரான பல துண்டு நோடிசுகள் தைத்து வைக்கப்பட்ட சாம்பிள் புத்தகத்தைக் காட்டிவிட்டுக் கூறினார். எனக்கு அவருடைய பேச்சு காதில் விழுந்ததே தவிர, கருத்து அங்கே இல்லை. புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கையில் என் கருத்தை இழுத்த 4நோடீசுகளிலேயே கவனமாகி விட்டேன்.

"என்ன சார் யோசனையா? காட்டுங்கள், உங்க நோடீசு என்ன விஷயம்" என்று கேட்டுக்கொண்டே, அச்சடிக்க நான் கொண்டு போயிருந்த விஷயத்தை வாசிக்கலானார் நான் வெட்கத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

சாது சேவாசிரமம்

இமயமலையிலே இருபதாண்டு தவம் செய்து இஷ்ட சித்தி வரம்பெற்ற சாது சரவணபவானந்தர், நமது ஊரிலே, மகாஜனங்களின் நன்மையைக் கோரி, சேவாசிரமம் ஏற்படுத்தியிருக்கிறார். இங்கு பில்லி, சூன்யம் முதலியவற்றாலும், ஏவல்,பிசாசு முதலிய தொல்லையாலும் கஷ்டப்படுப்வருக்கு ரட்சைகள் தரப்படுவதுடன், கிரஹ தோஷ பூஜையும் நடத்தப்படும். இதற்கு சார்ஜ் கிடையாது. அவரவர்கள் இஷ்டம்போல தர்மம் செய்யலாம். பச்சிலை தரப்படும். பாம்பு கடிக்கு மருந்து போடப்படும்.

சாது சேவாசிரமம்.
“இதுதானே! எத்தனை ஆயிரம் நோடீஸ் வேண்டும், சார்” என்று வெற்றிவேல் அச்சுக்கூடத்து மானேஜர் கேட்டார்.

“வேண்டாம் சார்! நான் நோடீஸ் அச்சடிப்பதாக இல்லை“ என்று நான் சொன்னேன்.

“வேலை சுத்தமாக இருக்கும் சார்! ஒரு சான்சு எங்களுக்குக் கொடுத்துத்தான் பாருங்கள்“ என்று அவர் மன்றாடினார். என்ன செய்வதென்று தெரியவில்லை! சரி என்றுvவேறோர் காகிதத்தில் கீழே கண்டவாறு எழுதி 10000 காபிகள் தயாரிக்கச் சொன்னேன்.

வேஷதாரிகளை நம்பாதீர்

பகுத்தறிவுள்ளவர்களே!

சாது, பண்டாரம், யோகி, என்று கூறிக்கொண்டும் காஷாயம் தரித்துக்கொண்டும்,ரசவாதம்,மாந்தரீகம், தெரியுமென்று சொல்லிக்கொண்டும், சர்வரோகநிவாரணி சூரணம், சகல சித்தி லேகியம் தருவதாகக் கூறிக்கொண்டும், அன்னதானம், அபிஷேக ஆராதனை செய்வதாகச் சொல்லிக்கொண்டும், ஆஸ்ரமம் வைக்கிறேன், அருள் தருகிறேன் என்று பேசிக்கொண்டும் வரும், வேஷதாரிகளை நம்பாதீர்! நம்பாதீர்! நம்பாதீர்!! காசு தராதீர் - காலில் விழாதீர்!

அவ்வித வேஷதாரிகள் வேலை, சிங்கப்பூர்சொக்கன் அன்னதானம் செய்வதாக நடித்து, சொர்ணவர்ண லேகியத்தில் அபின் கலந்து விற்று, தர்மபூபதி என்று பட்டம் பெற்று, பிறகு போலீசாரால் விரட்டப்பட்டு ஓடிச் சுற்றுப் பக்கத்திலே, சுந்தரபுரியில் சாது வேஷம் போட்டுக்கொண்டு சாது சேவாகிரமம் வைப்பதாக ஏமாற்றியது போல ஒரு ஏமாற்று வேலையாகவே இருக்கும். ஆகவே, அறிவுள்ள அன்பர்களே! இனியேனும், இத்தகைய ஆஷாடபூதிகளை நம்பி மோசம் போகவேண்டாம்.

இப்படிக்கு
விழித்துக்கொண்டவன்.

"இதென்ன சார்! எதுவோ ஆஸ்ரம நோடீஸ் எடுத்துக்கொண்டு வந்துவிட்டு, இப்போ வேறே விதமாக அதற்கு நேர்மாறாக ஒரு நோடீஸ் எழுதி இருக்கிறீர்களே" என்று கேட்டார் வெற்றிவேலார்.

"ஐயா! உங்கள் பிரசின் வேலைத் திறமைக்கு அத்தாட்சியாக நீர் கொடுத்தீரே, புத்தகம் அதிலே, சொக்கன் திருவிளையாடல் பற்றிய 4 நோடீசுகளைக் கண்டேன்.கண் திறக்கப்பெற்றேன். ஒரு அயோக்யன், அன்னதானம் செய்வதாக விளம்பரம் செய்து ஊரை ஏமாற்றி, பட்டம் பெற்று, அந்த விளம்பரத்தை வைத்துக்கொண்டு, அபினி கலந்த லேகியத்தை விற்றுக் கொள்ளை இலாபம் பெற்றுக் கொழுத்து, கடைசியில் போலீசாரால் துரத்தப்பட்டான். என்ற வரலாற்றை வெற்றிவேல் பிரசிலே வெளியான 4 நோட்டீசுகள், நன்கு விளக்கிவிட்டன. அதே சிங்கப்பூர் சொக்கன் இப்போது எங்கள் ஊரிலே, என் தோட்டத்திலே 'சாது' வேஷத்திலே இருக்கிறான். நான் சூதுவாதறியாதவன். அவன் பேச்சைக் கேட்டு நம்பி, அங்கு சேவாசிரமம் வைப்பதாக ஒப்புக்கொண்டேன். அதற்கு நோட்டீஸ் போடவே வந்தேன். இங்கே வந்த பிறகுதான் அவனுடைய மோசம் தெரிந்தது. ஆகையினால், ஆஷாடபூதிகளை நம்ப வேண்டாம் என்று அனைவருக்கும் யோசனை கூறப் புதிய நோட்ஸ் போடுகிறேன்" என்று நான் விளக்கமுரைத்தேன். வெற்றிவேல் பிரசிலிருந்து என் எச்சரிக்கை நோட்டீஸ் வெளிவருவதற்குள், எப்படியோ விஷயமறிந்துகொண்டு, 'சாது'மறைந்துவிட்டான்.