ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/பொய்—இலாப நஷ்டம்

விக்கிமூலம் இலிருந்து


பொய்—இலாப நஷ்டம்

வேலாயுதம், எப்படியாவது அந்தப்பண்ணையை வாங்கி விடத்தான் வேண்டும்என்று தீர்மானித்துவிட்டார். அந்தப்பண்ணையிலே, தங்கச் சுரங்கம் இருப்பது அவருக்குத் தெரியும். படாடோப வாழ்வினால் கடனாளியாகிவிட்ட பண்ணைச் சொந்தக்காரனுக்கு தெரியாது. என்ன விலை கொடுத்தாகிலும் வாங்கிவிடுவது என்று, சொந்தக்காரனின் மாளிகைக்குப் போனார். இருவரும் பேசுகிறார்கள்

"ஓ! வேலாயுதம் அவர்களா? வரவேண்டும், வரவேண்டும்! தாங்கள் வரப்போவதாகச் சொன்னார்கள்"

"நான் வருவதாகவா? இல்லையே! இந்தப் பக்கம் ஒரு காரியமாகச் செல்ல நேரிட்டது. அப்படியே தங்களையும் பார்த்துவிட்டுப்போகலாம் என்று வந்தேன், தற்செயலாகத்தான்"

அப்படியா? நமது கணக்கப்பிள்ளையிடம், இந்தப் பண்ணை விஷயமாக பேசவேண்டும் என்று சொன்னீராமே. அதற்காகத்தான் வந்தீர்கள் என்றல்லவா நான் நினைத்துக்கொண்டேன்"

அதைச் சொன்னாரா? இந்தப்பண்ணை சம்பந்தமாக ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.....

"அது உண்மைதான்; உமாபதிச் செட்டியார் ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்துக் கேட்டார்......"

"ஒரு லட்சத்துக்கா! ஜெமீன்தாரவாள், தயவுசெய்து என் பேச்சைக் கேளுங்கள். யோசனையே வேண்டாம், விற்று விடுங்கள், நல்ல விலை"

"எது நல்லவிலை? ஒரு இலட்சத்து ஒன்பதாயிரமா,ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரமா? சேட் அமார்சந்த் அந்த விலை கேட்டு, தரமுடியாது என்று அனுப்பிவிட்டேனே, பதினைந்து நாட்களுக்கு முன்பு"

"ஜெமீன் தாரவாள்! தங்களுக்கு ஒன்றும் இந்தப் பண்ணையை விற்றுத்தான் ஆகவேண்டும் என்பதில்லை. இதிலே 'இலாபம்' வந்து, என்ன ஆகப்போகிறது, நான் ஏன் அதைப் பத்தாயிரம் போனாலும் வந்தாலும் விற்றுவிடச் சொல்கிறேன் என்றால், போனமாதம் ஒரு பயங்கரமான விஷயம் கேள்விப்பட்டேன், பண்ணை சம்பந்தமாக அதிலே ஏதோ ஒரு பூதம் குடிஏறி இருக்கிறதாம். ஆளைக் கொல்லுமாம் அது"

"பூதமாவது, குடிஎறுவதாவது?"

"மஞ்சள் நிறமாம்,பளபளப்பாக இருக்குமாம், ஆளைக் கொன்றுவிடுமாம். தக்கவரொருவர் சொன்னார். அடடா! நம்ம ஜெமீன்தாரருக்கு, இந்தச் சனியன் பிடித்த பண்ணையே வேண்டாம் என்று எண்ணினேன். அதனாலேதான் கணக்கப்பிள்ளையிடம் சொன்னேன், அப்பா! எப்படியாவது ஜெமீன்தாரிடம் சொல்லி, அந்தப் பண்ணையை விற்றுத் தொலைத்துவிடு என்று"

"நீங்களே வாங்கிக்கொள்வதாக....."

"நானா? நான் பிள்ளை குட்டிக்காரன், பூதம் குடியிருக்கும் பண்ணையை வாங்குவது என்றால், பயமாக இராதா"

"சொன்னானே கணக்கப்பிள்ளை......."

"நான் சொன்னது வேறே. எப்படியாவது அந்தப்பண்ணை நம்ம ஜெமீன்தாரர் கையைவிட்டு மாறிவிடவேண்டும்; அப்போதுதான் அவருக்கு ஆபத்து வராது. யாரும் விலை கொடுத்து வாங்க உடனே கிடைக்காவிட்டால், நான் வாங்கி வைக்கிறேன். நான் சிலருக்குக் கடன் தர வேண்டி இருக்கிறது, கடனைத் திருப்பித் தரும்படி அவர்கள் கேட்பரர்கள், அப்போது, இந்தச் சனியனை அவர்கள் தலையிலே கட்டிவிடுகிறேன். எப்படியாலது பூதப்பண்ணை, ஜெமீன்தாருக்குக் கேடு செய்வதற்குள், அதை விற்றுவிடவேண்டும் என்று சொன்னேன்"

"எனக்கு அம்மாதிரி விஷயத்திலே நம்பிக்கை கிடையாது. அதற்காகப் பண்ணையை விற்கவேண்டுமென்ற அவசியமும் கிடையாது. ஆனால்,நான் பாரீசில்போய் வசிக்கத் தீர்மானித்திருக்கிறேன். அவ்ளைவு தொலைவிலே இருந்து கொண்டு பண்ணையை நிர்வகிக்க முடியாதே, பாழாகிவிடுமே, என்பதற்காகத்தான், அதை விற்றுவிடுவோம் என்று எண்ணுகிறேன். திரும்பவும், வந்த உடனே வாங்கிவிடலாம் என்ற எண்ணம். வேறொருவர் கைக்கு மாறினால் நன்றாக இராதே. வேலாயுதம் நமக்கு நீண்ட நாள் சிநேகமாயிற்றே, அவருக்கு விற்றால், பிறகு வேண்டும்போது திரும்பி வாங்கிக்கொள்ளலாமே என்று நினைத்தேன்"

"தாங்கள் சொன்னால், அதன்படி நான் நடக்கிறேன், இதற்கென்ன?"

"விலை, உங்க விஷயத்துக்கு, ஒரு இலட்சம்"

"என் சக்தி அவ்வளவுக்கு இடந் தராதே"

"பிறகு தங்கள் இஷ்டம்"

"என்னாலே அவ்வளவு தொகை தர முடியுமா? பணம் ஏது? ரொக்கம் இருப்பது அறுபதாயிரம்! கொஞ்சம் வைரம் இருக்கிறது. பரம்பரையாக இருப்பது, விற்க மனம் இல்லை, இந்தச் சமயத்திலே அதை விற்றால், மொத்தத்தில் ஒரு இலட்சம் கிடைக்கும். ஆனால்,யார் இருக்கிறார்கள் வாங்க"

"எனக்கு வைரமென்றால் உயிர்! ஆனால்,விஷயம் என்ன தெரியுமோ? நம்ம ஜோதிடர், ஒரு விஷயம் சொல்லி விட்டார்; இன்னும் ஒரு ஐந்து வருஷத்துக்கு, நான் வைரம் வாங்கவே கூடாதாம், என் ஜாதக பலன் அப்படி இருக்கிறதாம். அதனாலே நான் நமது ஜெமீன் வைரத்தை எல்லாம் ஜெயவீரச் செட்டியாரிடம் கொடுத்துவிட்டேன்.யாருக்காவது விற்றுவிடுங்கள் என்று"

"சரி! நான் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் நாளைக்கு. இதற்குள் யாராவது விலை பேசினால்...."

"நீ வேண்டுமென்று கேட்டுவிட்ட பிறகு, வேறொருவருக்கு விற்பேனா?"

இல்லை, ஜெமீன் ர்வாள், வேறு யாராவது கேட்டால் தயவுசெய்து விற்றுவிடுங்கள்! எனக்குச் சிரமம் இராது. அப்போது. போய் வருகிறேன்"

பண்ணை ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது; வேலாயுதத்துக்கு அல்ல! அவரால் ஏவிவிடப்பட்ட அவருடைய ஏஜண்டுக்கு, பட்டா ஏஜண்டின் பேரில்; பண்ணையின் உண்மைச் சொந்தக்காரர், வேலாயுதமேதான்.

இது, வேலாயுதத்தின் சாமர்த்தியம்! முதலாளித்துவ உலகிலே, "முதல்தரமான அறிவு" என்று இதற்குப் பெயர். கண்டுபிடிக்கமுடியாத கபடம், நாசூக்கான நயவஞ்சகம், சொகுசான சூதுகள், பொய்யுரைகள், வேலாயுதம் வீசிய

கணைகள், ஆனால், அந்த உலகிலே அவைகளை வீசுபவரைக் கபடன், நயவஞ்சகன், புளுகன், என்றெல்லாம் கூறமுடியாது. அபாரத் திறமை, பேரம் பேசுவதிலே நிபுணர், வியாபாரத் தந்திரம் அறிந்தவர், எடுத்த காரியத்தை எப்படியாவது முடிக்கக்கூடியவர் என்ற 'விருதுகள்' அவருக்குக் கிடைக்கும்! காரியத்தைச் சாதிக்க, இலாபத்தைக் குவிக்க, உண்மையை உள்ளத்தைவிட்டே விரட்டிவிடலாம். குற்றமல்ல!!

"முட்டாள்! மூன்றுமணிக்கு வாச் சொன்னேனே. ஏன் வரவில்லை?” என்று கோபமாகக் கேட்கிறார் வேலாயுதம் வேலைக்கார வேணுவை

"வந்தேனுங்க" என்கிறான் வேனு, புளுகு பேசியாவது அந்த நேரத்தில் எஜமானரின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள. ஆனால், வேலாயுதமோ, முன் இருந்ததை விட அதிக சீற்றம் கொள்கிறார்.

"டே, வேணு! புளுகுபேசியா ஏமாற்றலாம் என்று பார்க்கறே. என்னிடமா புளுகுபேசுவது? எந்தத் தவறு செய்தாலும் மன்னித்துவிடுவேன்; புளுகு பேசினால் மட்டும் விடமாட்டேன். அவனுடைய முகாலோபனம் செய்யமாட்டேன். தெரிகிறதா பாவிப்பயலே! புளுகு பேசினால வாய் புழுத்துப் போகும்" என்று ஏசுகிறார். சத்தியத்தின் மேன்மைபற்றி உபதேசிக்கிறார். வேணுவுக்கு தெரியும். பொன் விளையும் பூமியைப், பூதப்பண்ணை என்று புளுகு பேசி, இவர் குறைச்சல் விலைக்கு வாங்கினதும், பட்ட கடனைத் தீர்க்கப் பண்ணையை விற்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே சிக்கிக்கொண்ட ஜெமீன்தார் கௌரவத்தைக் காப்பரற்றிக்கொள்ள, பண்ணையை விற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதற்குக் காரணம், பாரிஸ் பிரயாணம் என்று புளுகினதும், இடையே பல தரகர்கள் விதவிதமான புளுகு பேசி, பேசிய புளுகுக்கு ஏற்ற விகிதம் பணம் பெற்றதும் தெரியும்! ஆனால், இவை 'புளுகு' என்று உலகம் கூற மறுக்கிறதே! சமர்த்து என்றல்லவா புகழ்கிறது! வேலைக்காரன் என்ன சொல்வான்? இனிமேல் புளுகுவதில்லை என்று வேலாயுதத்துக்குச் சத்தியம் செய்து தருகிறான்.

'இனி ஜாக்ரதையாக இரு' என்று புத்தி கூறிவிட்டு புளுகு பேசினால் அதனாலே நமக்குத்தான் கஷ்டமும் நஷ்டமும் என்பது எப்போதும் உன் கவனித்திலிருக்கவேண்டும்; அதற்காக வேண்டி ஒன்று செய்கிறேன், புளுகிய குற்றத்துக்காக உன் சம்பளத்திலே ஒரு ரூபாய் குறைத்துவிட்டேன். இனி நீ சத்தியத்துக்கு விரோதமில்லாமல் நடந்து வருவதாக எனக்குத் தெரிந்தால் பழைய சம்பளம்" என்று வேலாயுதம் உத்தரவிட்டார். வேணுவுக்கு மாதச் சம்பளம் 15; அதிலே ஒரு ரூபாய் போயிற்று, அவன் புளுகியதால்! எஜமானர் புளுகினால் எத்தனையோ ஆயிரம் இலாபம் கிடைக்கிறது, நாமோ, ஒரு புளுகு பேசினோம்

எஜமானரின் கோபத்திலிருந்து தப்பிக்க அதற்குச் சம்பளத்திலே ஒரு ரூபாய் நஷ்டமாயிற்றே! என்று வேணு விசாரப்படுகிறான் பைத்யக்கார வேணுவுக்குச் சூட்சமம் தெரியாது; புளுகு பேசிப் பிழைப்பது, ஏழைக்கு ஆபத்து; ஆனால், வேலாயுதங்கள் வாழும் முதலாளி உலகிலே, அது அவர்களின் உரிமை! ஏகபோக மிராசு பாத்யதை இருக்கிறது, அவர்களுக்கு, அந்தத் துறையிலே!

நவம்பர் புரட்சிக்கு முன்பு ரஷிய நாட்டிலே, வேலாயுதங்களே ஆட்சியாளர்கள், லெனின், வேணுவைக் கூப்பிட்டான், முதவாளித்வ முறையின் சூட்சம் சக்தி எது என்பதைக் காட்டினான். அந்த 2 சக்தியை முறியடிக்கும் சம்மட்டியைத் தந்தான், பிறகுதான், நயவஞ்சகத்தால் நாட்டுச் செல்வங்களை உறிஞ்சிக் கிடந்த வேலாயுதங்களுக்கு, வேதனையை அனுபவித்துக்கொண்டிருந்த வேணுக்களின் சக்தி என்ன என்று தெரியவந்தது! இன்று அங்கே, புளுகிப் பிழைக்கும் சீமானும் இல்லை; புளுகியாவது புழு நெளிவதுபோன்ற வாழ்வு நடத்த முடிகிறதா என்று வேலையிலே உழலும் வேணுவும் இல்லை! சக்திக்கேற்ற அளவு பாடுபடுகிறார்கள், தேவைக்கேற்ற அளவு பெறுகிறார்கள். இந்த அமைப்பு முறையின் பயனாகவே ரஷ்யாவிலே,எய்த்துப் பிழைப்பவனும் ஏமாளியும் இல்லை! "என்ன செய்வது அங்கத்தை வளர்க்க ஆயிரம் பொய் பேசியாவது தீரவேண்டியிருக்கிறது!" என்று பேசும் வறுமையாளனும் இல்லை. "ஒரு போடு போட்டேன், அவன் அதை உண்மை என்றே நம்பி விட்டான்; அடித்தது நமக்கு ஆறு ஆயிரம்" என்று பொய் பேசிப்பெற்ற இலாபத்தைப் பூரிப்புடன் பேசிக்கொள்ளும் மாளிகைவாசியும் இல்லை. மக்கள் வாழ்கிறார்கள், ஒருவர் உழைப்பை மற்றொருவர் ஏய்த்துவாழும் நிலையிலே அல்ல மானமும் மதியும், நீதியும் நேர்மையும் செழிக்கும்விதமான நிலையிலே உள்ளனர். பாடுபடுகிறார்கள். பலனை வேறொருவன் பறித்துக்கொள்வானே என்ற பயமின்றி! வேதனை இல்லை, வேலாயுதங்கள் இல்லாத்தால்!