தந்தையும் மகளும்/158

விக்கிமூலம் இலிருந்து


158அப்பா! நல்ல கிருமிகளும் உண்டு என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கிருமி என்றவுடன் நமக்கு நோய்க்கிருமி தான் என்ற எண்ணம் உண்டாகும். ஆனால் நாம் கிருமி என்று கூறுவது புழுமாதிரியான பிராணியன்று, செடியினத்தைச் சேர்ந்ததேயாகும். அதை வெறுங் கண்ணால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலமாகத்தான் பார்க்க முடியும். அப்படிப்பார்க்கும் போது அது சாதாரணமாக நுண்ணிய குச்சிபோலிருப்பதால் அதற்கு குச்சி என்று பொருளுள்ள பாக்டீரியா என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்.

அம்மா! பாக்டீரியாக்களுள் பல இனங்கள் உண்டு. சில நமக்கு நோயை உண்டாக்கும், சில வெண்ணெய்யை நாறச் செய்யும், சில உணவுகளில் சேர்ந்து விஷத்தை உண்டாக்கும்.

ஆனால் நமக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் உள. அவற்றுள் சில இறந்துபோன செடிகளையும், பிராணிகளையும் அவற்றை மண்ணோடு மண்ணாகச் செய்து விடுகின்றன. அப்படி அவை செய்யாவிட்டால் பூமி முழுவதும் நாறிப்போகும். எந்தப் பிராணியும் வாழமுடியாது.

சில பாக்டீரியாக்கள் சில செடிகளிள் வேர்களில் இருந்து கொண்டு காற்றிலுள்ள நைட்ரோஜன் வாயுவைக் கிரகித்துச் செடிகளுக்கு உதவுகின்றன. அதனால் நிலம் வளம் அடைந்து பயிர்கள் உண்டாகின்றன.

நமக்குப் பாலைத் தயிராகச் செய்து தருவதும் பாக்டீரியாக்கள் தான். சில பாக்டீரியாக்கள் நம்முடைய குடலில் தங்கி நமக்குக் கேடு செய்யும் பாக்டீரியாக்களைக் கொன்று விடுகின்றன.

ஆகவே கெட்ட கிருமிகள் இருப்பது போலவே நல்ல கிருமிகளும் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/158&oldid=1538466" இலிருந்து மீள்விக்கப்பட்டது