தந்தையும் மகளும்/171

விக்கிமூலம் இலிருந்து


171 அப்பா! மிருகங்கள் நம்மைப்போல் நிற்பதில்லையே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! நாம்தான் நட்டமாக நிற்கிறோம், மற்றவை எதுவும் அப்படிச் செய்ய முடிவதில்லை. மனிதனுங்கூட சிசுப் பருவத்தில் அந்த மாதிரியே தான். அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்த வஸ்துவும் கீழே விழாமல் நிற்க வேண்டுமானால் அதன் ஆகர்ஷண கேந்திரம் என்னும் புள்ளியின் இருப்பிடம் அதன் பாதத்துக்கு அருகில் இருக்கவேண்டும் என்றும், அப்படியானால்தான் அந்த ஆகர்ஷண கேந்திரத்திலிருந்து இழுக்கும் செங்குத்துக்கோடு பாதத்திற்குள் வந்து சேரும் என்றும், அப்படி சேர்ந்தால்தான் வஸ்து கீழே சாயாமல் நிற்கும் என்றும் நீ அறிவாய்.

அம்மா! மிருகம் நம்மைப்போல் பின் கால்களில் மட்டும் நிற்குமானால், அப்போது அதன் உடல் கால்களை விட நீளமாயும் கனமாயுமிருப்பதால் ஆகர்ஷண கேந்திரம் உயரத்திலேயே இருக்கும். அத்துடன் உடலின் கனமானது முன்பக்கமாகவே இழுக்குமாதலால் ஆகர்ஷண கேந்திரத்திலிருந்து இழுக்கும் செங்குத்துக் கோடு பாதத்துக்குள் வந்து சேராது. அதனால் மிருகம் நிற்கமுடியாமல் சாய்ந்து விடும்.

அம்மார் சிறு குழந்தையைப் பார். அதன் கால்கள் மிகச்சிறியனவாகவும் உடல் அந்த அளவுக்கு ஏற்றதாக இல்லாமல் நீண்டதாகவும் இருக்கின்றன. அதனால் தான் குழந்தையும் மிருகத்தைப் போலவே நிற்க முடியாமல் இருக்கிறது.

ஆனால் குழந்தை பிறந்து ஆறு மாதமானதும் பிறகு ஒன்றரை வருட காலத்திலே அதன் கால்கள் விரைவாக நீண்டு வளர ஆரம்பிக்கின்றன. ஆனால் அதன் உடலோ அந்த அளவுக்கு நீண்டு வளர்வதில்லை. அதனால் தான் முதலில் நிற்க முடியாதிருந்த குழந்தை இரண்டு வயதாகும்போது நிற்கக் கூடியதாக ஆகிவிடுகின்றது.

ஆனால் மிருகங்களோ குட்டியாக இருக்கும் போது இருந்த உறுப்புக்களின் அளவு விகிதப்படியே தான் பெரிதாகும் போதும் வளர்கின்றன அதனால் மிருகங்கள் பெரியவைகளாக ஆன பிறகும்கூட நிற்க முடியாமலே இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/171&oldid=1538488" இலிருந்து மீள்விக்கப்பட்டது