தந்தையும் மகளும்/61

விக்கிமூலம் இலிருந்து


61அப்பா! எங்கள் பாடசாலைகளில் வாளிகளில் மணலை நிறைத்து வைத்திருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அந்த வாளிகளின் புறத்தே சிவப்புச் சாயம் பூசி இருப்பார்கள். சிவப்பு நிறம்தான் எல்லா நிறங்களையும்விட பளிச்சென்று தெரியக்கூடிய நிறம் அதனால் தான் உலகமெங்கும் அபாயம் என்று எச்சரிக்கை செய்வதற்கு அந்த நிறத்தை உபயோகிக்கிறார்கள். அதே காரணத்தினால்தான் மோட்டார் வண்டிகளின் பின்புறத்தில் சிறிய சிவப்பு விளக்குகளை வைத்திருக்கிறார்கள். அந்த விளக்குகளை அபாய விளக்குகள் என்று கூறுவார்கள். அவைகளைக் கண்டால் பின்னால் வரும் வண்டிகள் காரின்மீது மோதி விடாமல் விலகிப்போகும், அதே மாதிரி அபாய சமயத்தில் உபயோகிப்பதற்காக உள்ளவை என்று அறிவிப்பதற்காகவே உங்கள் பாடசாலையிலுள்ள வாளிகளில் சிவப்புச் சாயம் பூசுகிறார்கள். அந்த வாளிகளில் மணல் நிறைத்து வைப்பதன் காரணம் யாது?

அந்த வாளிகளை நெருப்புப் பிடிக்கும் சமயத்தில் உபயோகிப்பதற்காகவே தயாராக வைத்திருக்கிறார்கள். நெருப்பை நாம் சாதாரணமாகத் தண்ணீரை ஊற்றி அணைப்போம். அது உனக்குத் தெரியும். ஆனால் நெருப்பை அணைக்கச் சில சமயங்களில் ஜலத்தை உபயோகிக்கக் கூடாது. அதை உபயோகித்தால் அபாயம் அதிகப்படவே செய்யும். மண்ணெண்ணெயில் தீப்பிடித்தால் அதன்மீது ஜலத்தைக் கொட்டினால் மண்ணெண்ணெய் அணைவதற்குப் பதிலாக அதிகச் சுடர் விட்டு எரியும்படி செய்து விடும்.

உங்கள் பாடசாலையில் மின்சார விளக்குகளையும் விசிறிகளையும் அமைத்திருக்கிறார்கள் அல்லவா? மின்சாரத்தைக் கொண்டு வரும் கம்பிகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அப்பொழுது தீப்பிடித்து விடும். தண்ணீர் மின்சாரத்தைப் பரவச் செய்யக் கூடியச் சக்தியுடையது. அதனால் மின்சாரத்தால் நெருப்புப் பற்றும் சமயத்திலும் ஜலத்தை உபயோகிக்கக்கூடாது. அதற்காகத்தான் மணலை வைத்திருக்கிறார்கள்.

தவிரவும், எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் மணல் கெட்டுவிடாது. தண்ணீர் சீக்கிரம் கெட்டுவிடும். அதனால் எப்பொழுதும் மணலை நிறைத்து வைத்திருப்பதே நல்லது. வீடுகளில்கூட அவ்விதம் வைப்பது நலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/61&oldid=1538185" இலிருந்து மீள்விக்கப்பட்டது