தந்தையும் மகளும்/82

விக்கிமூலம் இலிருந்து


82அப்பா! இப்பொழுது ஓடும் கார்கள் எல்லாம் உருண்டையாகவும் நீளமாகவும் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! நீ பெட்டிவண்டி பார்த்திருக்கிறாய் அல்லவா? அது போல்தான உயரமாகவும் பெட்டி மாதிரி முன்னாலும் பின்னாலும் தட்டையாகவும் இருந்தன சில வருஷங்கட்கு முன் ஒடிய மோட்டார் கார்கள் எல்லாம். ஆனால் இப்பொழுது கார்களை முன்னால் உருண்டையாகவும் பின்னால் கூர்மையாகவும் மழைத்துளியின் உருவத்தைப் போல் இருக்கும்படி செய்கிறார்கள். அதனால்தான் இக்காலத்துக் கார்கள் எல்லாம் முன்னிலும் அதிக வேகமாக ஓட முடிகிறது. அது எப்படி என்று கேட்பாய், கூறுகிறேன்.

சில வருஷங்கட்குமுன் செய்த கார் ஓடும் பொழுது அதன் முன்னாலுள்ள காற்று அதை எதிர்த்துவந்து தாக்கும். காரின் முன்பாகம் தட்டையாகவும் அகலமாகவும் இருப்பதால் தாக்குதல் அதிகமாயிருக்கும். அதனால் கார் எளிதாக ஓட முடிவதில்லை.

அத்துடன் காரைத் தாக்கிய காற்று இரண்டு பாகமாகப் பிரிந்து வண்டியின் ஒரமாகப் பின்புறம் பாய்ந்து செல்லுகிறது. ஆனால் பின்புறமும் கார் அகலமாகவும் தட்டையாகவும் இருப்பதால் இரண்டு காற்றும் காரின் பின் புறத்தில் சேராமல் சிறிது தூரம் சென்றபின்னரே சேர்கின்றன அதனால் காரின் பின் புறத்தில் காற்றில்லாத வெற்றிடம் உண்டாகிறது. அந்தக் காரணத்தால் காரை முன்னாலிருந்து காக்கும் காற்று காரைப் பின்புறம் தள்ள முடிகிறது. அதனாலும் கார் வேகமாகச் செல்ல முடியாமல் போகிறது.

ஆனால் இப்பொழுது செய்யும் காரின் முன்புறம் உருண்டையாக இருப்பதால் காற்றின் தாக்குதல் அதிகமாயிருப்பதில்லை. அத்துடன் காரின் பின்புறம் உருண்டு கூர்மையாக நீண்டிருப்பதால் பிரிந்த காற்று காரின் பின்புறத்திலேயே சேர்ந்து விடுகிறது. அதனால் காரின் பின்புறம் வெற்றிடம் உண்டாகாமல் போகிறது. காற்றுக்குக் காரைத் தள்ள முடிவதில்லை. கார் வேகமாக ஓட முடிகிறது

அம்மா ! நீ மீனையும் பறவையையும் பார்த்திருக்கிறாய் அல்லவா? மீன் நீரைக் கிழித்துக் கொண்டும் பறவை காற்றைக் கிழித்துக் கொண்டும் செல்வதாலும் அவற்றின் உடல்களும் இவ்விதமாகவே அமைந்துள்ளன. காற்றில் பறந்து செல்லும் ஆகாய விமானங்களையும் இது போலத்தான் செய்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/82&oldid=1538232" இலிருந்து மீள்விக்கப்பட்டது