திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்." (1 திமொத்தேயு 1:3)

திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம் (1 Timothy) [1][தொகு]

முன்னுரை

திமொத்தேயுவுக்கு எழுதப்பட்ட இரண்டு திருமுகங்களும், தீத்துவுக்கு எழுதப்பட்ட திருமுகமும் "ஆயர் பணித் திருமுகங்கள்" என வழங்கப் பெறுகின்றன. ஆயர்களான திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் ஆயர் பணி பற்றி எழுதப்பட்டுள்ளதால் இவை இவ்வாறு பெயர் பெறுகின்றன.

இவற்றைப் பவுலே நேரடியாக எழுதினாரா என்பது பற்றி ஐயப்பாடு உள்ளது. இத்திருமுகங்களில் காணப்படும் சொற்கள், மொழி நடை, திருச்சபை அமைப்புமுறை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, இவற்றைப் பவுலே எழுதியிருப்பார் எனக் கூறுவது கடினமாய் இருக்கிறது. பவுலின் சிந்தனையில் வளர்ந்த அவருடைய சீடர்கள் திருமுகம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் அவர் என்ன கூறியிருப்பார் என்பதை உணர்ந்து, அவர் பெயரால் இத்திருமுகங்களை எழுதியிருப்பார்கள் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையானதாகக் கருதப்பட்டது. முதல் நூற்றாண்டின் இறுதியிலோ இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இவை எழுதப்பட்டிருக்கலாம்.

சூழலும் நோக்கமும்[தொகு]

பவுலுடைய உடன் உழைப்பாளர் திமொத்தேயு லிஸ்திராவைச் சேர்ந்தவர். தந்தை கிரேக்க மொழி பேசும் பிற இனத்தார், தாய் யூதக் கிறிஸ்தவர் (திப 16:1). பவுலின் மூலம் கிறிஸ்தவராகி, இரண்டாம் மூன்றாம் நற்செய்திப் பயணங்களில் உடன் பணியாளராய்த் திமொத்தேயு செயல்பட்டார் (திப 16:3; 19:22). முக்கிய பணிகளுக்குப் பல வேளைகளில் பவுல் அவரைத்தான் அனுப்பினார் (திப 19:2; 1 கொரி 4:17; 1 தெச 3:2). 1 திமொ 13இன்படி திமொத்தேயு எபேசிய திருச்சபையின் கண்காணிப்பாளராய் (ஆயராய்) இருந்தார் எனத் தெரிகிறது.

பவுல் எபேசு சபையைக் கண்காணிக்குமாறு திமொத்தேயுவை ஏற்படுத்திய பின் (1:3) மாசிதோனியா சென்றார். மீண்டும் தாம் எபேசுக்கு வரப்போவதில்லை என உணர்ந்த அவர், தாம் ஆயராக நியமித்த திமொத்தேயுவுக்கு அவர்தம் கடமைகளை நினைவுறுத்துவதற்காக இத்திருமுகத்தை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர்.

உள்ளடக்கம்[தொகு]

தவறான போதனைகளை எதிர்க்குமாறு இத்திருமுக ஆசிரியர் கூறுகிறார் (1:3-7; 4:1-8; 6:3-5,20-21). ஏனெனினில் அக்காலத்தில் ஞான உணர்வுக் கொள்கை பரவத் தொடங்கியிருந்தது. உலகம் கெட்டது என்றும், ஒருவர் மீட்புப்பெற வேண்டுமென்றால் மறைவான அறிவு பெறவேண்டும் என்றும், பலவகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், திருமணம் புரியலாகாது என்றும் இக்கொள்கை கூறியது.

எபேசு திருச்சபையின் வழிபாடு, நிர்வாகம் ஆகியவற்றைச் செவ்வனே கவனிக்குமாறு திருமுக ஆசிரியர் பணிக்கிறார் (2:1-15); தகுதியான தலைவர்களை நியமிக்குமாறும் அறிவுரை கூறுகிறார் (3:1-13; 5:17-25).

1 தெசலோனிக்கர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை 1:1-2 392
2. நலமான போதனை 1:3-20 392 - 393
3. வழிபாடு, தலைமைப்பணி பற்றிய அறிவுரைகள் 2:1 - 3:16 393 - 394
4. திமொத்தேயுவின் பணி பற்றிய அறிவுரைகள் 4:1 - 6:19 394 - 398
5. இறுதிப் பரிந்துரையும் எச்சரிக்கையும் 6:20-21 398

1 திமொத்தேயு (1 Timothy)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

வாழ்த்து[தொகு]


1-2 விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு
நம் மீட்பராம் கடவுளும்,
நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இயேசுவும்இட்ட கட்டளையின்படி
கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது:


தந்தையாம் கடவுளிடமிருந்தும்,
நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! [1]

2. நலமான போதனை[தொகு]

பொய்ப் போதனை குறித்து எச்சரிக்கை[தொகு]


3 நான் மாசிதோனியாவுக்குப் போகும்போது
உன்னை எபேசில் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
அங்கே சிலர் மாற்றுக் கொள்கைகளைக் கற்பிக்கின்றனர்.
அப்படிச் செய்யாதபடி அவர்களுக்குக் கட்டளையிடு.
4 அவர்கள் புனைகதைகளிலும்,
மூதாதையரின் முடிவில்லாப் பட்டியல்களிலும் கவனம் செலுத்துகின்றார்கள்.
இவை விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட கடவுளின் திட்டத்திற்குப் பயன்படாமல்,
ஊக ஆய்வுகளுக்கே இடம் தருகின்றன.
5 தூய்மையான உள்ளம், நல்ல மனச்சான்று,
வெளிவேடமற்ற விசுவாசம் ஆகியவற்றினின்று அன்பைத் தூண்டுவதே
நான் கொடுத்த கட்டளையின் நோக்கம்.
6 சிலர் இந்த நோக்கத்தைக் கைவிட்டு, வீண் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்.
7 அவர்கள் திருச்சட்ட போதகர்களாக இருக்க விரும்புகின்றனர்.
தாங்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதையும்,
எவற்றை வலியுறுத்துகின்றார்கள் என்பதையும் அறியாமல் இருக்கின்றார்கள்.


8 திருச்சட்டம் நல்லது என்பதை அறிந்திருக்கின்றோம்.
ஆனால், அதை முறைப்படி பயன்படுத்த வேண்டும்.
9 திருச்சட்டம் நேர்மையானவர்களுக்காக இயற்றப்படவில்லை.
மாறாக ஒழுங்கு மீறுவோர், கட்டுப்பாட்டுக்கு அடங்காதோர், இறைப்பற்று இல்லாதோர்,
பாவிகள், தூய்மையற்றோர், உலகப்போக்கைப் பின்பற்றுவோர்,
தந்தையைக் கொல்வோர், தாயைக் கொல்வோர், பிற மனிதரைக் கொல்வோர்,
10 பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒருபால் புணர்ச்சி கொள்வோர்,
ஆள்களைக் கடத்தி விற்போர், பொய்யர், பொய்யாணையிடுவோர்,
மற்றும் நலம் தரும் போதனையை எதிர்ப்போர்
ஆகியோருக்காகவே திருச்சட்டம் இயற்றப்பட்டது.
11 இந்நலந்தரும் போதனையே
பேரின்பக் கடவுள் என்னிடம் ஒப்புவித்திருக்கிற அவரது சீர்மிகு நற்செய்தி.

கடவுளின் இரக்கத்திற்கு நன்றி[தொகு]


12 எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன்.
ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி
அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார்.
13 முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன்.
ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால்,
அவர் எனக்கு இரங்கினார். [2]
14 இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும்
நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.
15 'பாவிகளை மீட்க கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார்'. -
இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. -
அந்தப் பாவிகளுள் முதன்மையான பாவி நான்.
16 ஆயினும் கடவுள் எனக்கு இரங்கினார்.
நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ள இருப்போருக்கு
நான் முன்மாதிரியாய் விளங்கவேண்டும் என்பதற்காக
முதன்முதலில் என்னிடம் தம் முழுப் பொறுமையைக் காட்டினார்.
17 அழிவில்லாத, கண்ணுக்குப் புலப்படாத,
எக்காலத்துக்கும் அரசராயிருக்கின்ற ஒரே கடவுளுக்கு
என்றென்றும் மாண்பும் மாட்சியும் உரித்தாகுக! ஆமென்.


18-19 என் பிள்ளையாகிய திமொத்தேயுவே,
உன்னைப் பற்றி முன்னர் சொல்லப்பட்ட இறைவாக்குகளுக்கு ஏற்ப,
நான் உனக்கு இடும் கட்டளை இதுவே:
19 அந்த இறைவாக்குகளைத் துணையாகக் கொண்டு
நம்பிக்கையுடனும் நல்மனச்சான்றுடனும், நன்கு போரிடு.
சிலர் இம்மனச்சான்றை உதறித் தள்ளிவிட்டதால்
விசுவாசம் என்னும் கப்பல் உடைந்து போகச் செய்தனர்.


20 அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர்.
அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன்.
இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக்
கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.


குறிப்புகள்

[1] 1:2 = திப 16:1.
[2] 1:13 = திப 8:3; 9:4-5.


அதிகாரம் 2[தொகு]

2. வழிபாடு, தலைமைப் பணி பற்றிய அறிவுரைகள்[தொகு]

வழிபாடு குறித்து அறிவுரை[தொகு]


1 அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்;
பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள்.
முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே.
2 இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய்,
தொல்லையின்றி அமைதியோடு வாழ
அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்.
3 இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும்.
4 எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.
5 ஏனெனில் கடவுள் ஒருவரே.
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே.
அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர்.
6 அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்;
குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.
7 இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும்
விசுவாசத்தையும் உண்மையையும்
பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன்.
நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல. [1]


8 எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும்
தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.
9 அவ்வாறே பெண்கள் பின்னற் சடை, பொன், முத்து,
விலையுயர்ந்த ஆடைகள் ஆகியவற்றால் தங்களை அணிசெய்து கொள்ளாமல்,
நாணத்தோடும் தன்னடக்கத்தோடும் ஏற்புடைய ஆடைகளை அணிய வேண்டும். [2]
10 கடவுள் பற்று உள்ளவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பெண்களுக்கு
ஏற்ற அணிகலன்கள் நற்செயல்களே.
11 பெண்கள் அமைதியாயிருந்து, மிகுந்த பணிவோடு கற்றுக்கொள்ளட்டும்.
12 பெண்கள் கற்றுக்கொடுக்கவோ,
ஆண்களைக் கட்டுப்படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன்.
அவர்கள் அமைதியாயிருக்க வேண்டும்.
13 ஏனென்றால் ஆதாமே முதலில் உருவாக்கப்பட்டார்.
பிறகுதான் ஏவா உருவாக்கப்பட்டார். [3]
14 மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை;
பெண்தான் ஏமாந்து கட்டளையை மீறினார். [4]
15 இருப்பினும் அவர்கள் தன்னடக்கத்தோடு
நம்பிக்கை, அன்பு, தூய வாழ்வு ஆகியவற்றில் நிலைத்திருந்தால்
தாய்மைப் பேற்றின் வழியாக மீட்புப் பெறுவார்கள்.


குறிப்புகள்

[1] 2:7 = 2 திமொ 1:11.
[2] 2:9 = 1 பேது 3:3.
[3] 2:13 = தொநூ 2:7,21,22.
[4] 2:14 = தொநூ 3:1-6.


(தொடர்ச்சி): திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை